Samosa to Ghee : சமோசா முதல் நெய் வரை: இந்த உணவுகளுக்கு எங்கெல்லாம் தடை தெரியுமா?
ஒரு நாட்டிற்கு அல்லது பிராந்தியத்திற்கு பிரத்யேகமான சில உணவுப் பொருட்கள் இருந்தாலும், சில நாடுகளில் வியக்கத்தக்க வகையில் தடைசெய்யப்பட்ட சில உணவுகளும் உள்ளன
ஒரு நாட்டின் உணவு அதன் வரலாறு, பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் மக்கள் என பல தகவல்களைத் தன்னுள் கொண்டுள்ளது. மேலும் சற்று ஆராய்ந்தால், காலநிலை, மக்கள்தொகை, சமூக பொருளாதார அல்லது சுற்றுச்சூழல் காரணங்களைப் பொறுத்து உணவுகள் இடத்திற்கு இடம் மாறுபடும். ஒரு நாட்டிற்கு அல்லது பிராந்தியத்திற்கு பிரத்யேகமான சில உணவுப் பொருட்கள் இருந்தாலும், சில நாடுகளில் வியக்கத்தக்க வகையில் தடைசெய்யப்பட்ட சில உணவுகளும் உள்ளன. நம் நாட்டில் அனைத்து மக்களாலும் விரும்பப்படும் சில உணவுகள் பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன என்றால் நம்ப முடிகிறதா?
அவற்றில் சிலவற்றை இங்கே காண்போம்...
சமோசா: இது இந்தியாவில் மிகவும் பிரபலமான சிற்றுண்டி ஆனால் தென்னாப்பிரிக்க பிராந்தியத்தில் உள்ள சோமாலியா 2011ம் ஆண்டு முதல் இந்த சுவையான உணவான சமோசாவுக்குத் தடை விதித்துள்ளது. சமோசாவில் தடைவிதிக்க அப்படி என்ன இருக்கு? காரணம் சற்று வியப்புதான். சமோசாவின் முக்கோண வடிவம் ‘அல் ஷபாப்’ என்னும் ஒரு குழுவினருக்கு கிருத்துவத்தின் அடையாளமாகத் தெரிகிறதாம். அதனால் இது தடை செய்யப்பட்டுள்ளதாம். உண்மையில், நாட்டின் சட்டத்தின்படி, இந்த சட்டத்தை மீறுவது கடுமையான தண்டனைக்கு வழிவகுக்கும். சமோசா சாப்பிட்டா அதோகதிதான்!
சவன்பிராஷ் அல்லது லேகியம்: இந்தியாவில் மக்கள் நீண்ட காலமாக சவன்பிராஷை உட்கொள்கிறார்கள். இது ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களால் நிரம்பியதாகக் கூறப்படுகிறது, அது நம்மை உள்ளே இருந்து வளர்ப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் கனடா இந்த உணவை 2005ல் தடை செய்தது. தயாரிப்பில் அதிக அளவு ஈயம் மற்றும் பாதரசம் இருப்பதாகக் கூறி இதற்குத் தடை விதிக்கப்பட்டது.
நெய்: நெய்யின் நன்மைகள் பற்றி அறிமுகம் தேவையில்லை. இந்தியாவில், நெய் நம் உடலுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் உள்ளடக்கிய ஒரு சூப்பர்ஃபுட் என்று கருதப்படுகிறது. ஆனால் இது அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட தயாரிப்பு ஆகும், ஏனெனில் நெய் இரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் உடல் பருமன் போன்ற நோய்களை ஏற்படுத்தும் எனக் கண்டறியப்பட்டுள்ளதாம். அப்போ சீஸ் மட்டும் சாப்பிடலாமா? எனக் கேட்டால்...உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்....
கெட்ச்-அப்: கெட்ச்அப் பல்வேறு சுவையான உணவுகளுக்கு சுவை சேர்க்கிறது. சமோசா மற்றும் பக்கோடா முதல் நூடுல்ஸ் மற்றும் சாண்ட்விச்கள் வரை கிட்டத்தட்ட எல்லாவற்றுடனும் கெட்ச்அப்பை இணைக்கிறோம். ஆனால் பிரான்சில், இதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இளம் பருவத்தினரிடையே அதிகப்படியான ஜங்க் உணவுகளை பிரெஞ்சு அரசாங்கம் கவனித்ததை அடுத்து அந்த நாடு கெட்ச்-அப்பை தடை செய்துள்ளது.
பப்பிள்கம்: சிங்கப்பூர் அதன் தூய்மைக்கு பிரபலமானது மற்றும் அதற்கான கடுமையான விதிகளைக் கொண்டுள்ளது. அதனால்தான், 1992ம் ஆண்டில் அந்த நாடு அனைத்து வகையான பபிள்கம்களின் பயன்பாடு, விநியோகம் மற்றும் வர்த்தகத்தை கட்டுப்படுத்தியது. இருப்பினும், சர்வதேச அழுத்தம் காரணமாக, நாடு, 2004 இல், சிகிச்சைக்கான பப்பிள்கம் ரகத்தை மட்டும் அனுமதித்தது.