Beetroot Breakfast : காலையில் எனர்ஜி ப்ரேக்ஃபாஸ்ட் ப்ளான் பண்றீங்களா? பீட்ரூட் போதும்.. இந்த ரெசிப்பியை பாருங்க..
பீட்ரூட், உடல் உள்ளுறுப்புகளான கல்லீரல் ,பித்தப்பை ,சிறுநீரகம் போன்றவற்றில் இருக்கும் நச்சுக்களை நீக்கி சிறப்பாக செயல்படுகிறது.
ஏனைய காய்கறிகளுடன் ஒப்பிடும் போது பீட்ரூட்டானது அதிகளவான சத்துக்களை கொண்டுள்ளது. உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்தும் ஆற்றல் இந்த பீட்ரூட்டில் உள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த பீட்ரூட்டை குழந்தைகளுக்கு சிறு வயது முதலே உணவுடன் சேர்த்து வழங்கும்போது குழந்தைகளின் ஆற்றல் பெருகுவதோடு உயிர்சத்தும் உடலில் அதிகரிக்கிறது.
கிழங்கு வகையை சார்ந்த பீட்ரூட் பொட்டாசியம், விட்டமின் ஏ இரும்புச்சத்து ,ஆன்ட்டி ஆக்சிஸிடன்ட்கள் மற்றும் குறைந்த கலோரியைக் கொண்டுள்ளது. உடலில் ஹீமோகுளோபின் எனும் இரத்த சிவப்பு அணுக்களை அதிகளவில் உருவாக்கும் தன்மை இந்த பீட்ரூட்டில் உள்ளது. ரத்த சிவப்பணு குறைபாடு உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் முதல் உணவு இந்த பீட்ரூட் ஆகும்.
உடலுக்கு நல்ல சுறுசுறுப்பையும் ஆற்றலையும் வழங்கக்கூடிய இந்த பீட்ரூட், உடல் உள்ளுறுப்புகளான கல்லீரல் ,பித்தப்பை ,சிறுநீரகம் போன்றவற்றில் இருக்கும் நச்சுக்களை நீக்கி சிறப்பாக செயல்படுகிறது. அதேபோல் வயிற்றில் ஏற்படும் அல்சர் எனப்படும் வயிற்றுப் புண்ணையும் இந்த பீட்ரூட் குணப்படுத்துகிறது.
ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட பீட்ரூட் ஒரு அழகான நிறத்தன்மையை கொண்டது. இதனைத் தொடர்ந்து உட்கொள்ளும்போது உடல் நிறத்தை மட்டுமல்ல உடல் உள் உறுப்புகளையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது.
ஆகவே இத்தகைய ஏராளமான நன்மைகளைக் கொண்ட பீட்ரூட்டை நாம் எவ்வாறு உணவுகளில் சேர்த்து வீட்டில் உள்ளவர்களுக்கு வழங்கலாம் என பார்க்கலாம். நாம் காலை நேரங்களில் செய்யும் வித விதமான உணவுகளில் இந்த பீட்ரூட்டை சேர்த்து சிற்றூண்டியாக உண்ணலாம்.
பீட்ரூட் பராத்தா:
பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பீட்ரூட்டை பயன்படுத்தி காலை உணவாக பீட்ரூட் பரோட்டா செய்து சாப்பிடலாம் .இதை காலை உணவாக எடுக்கும் போது, ஏ மற்றும் பி1, பி2 போன்ற விட்டமின்கள் உடலுக்கு கிடைக்கும். ஆலு பரோட்டாவில் சேர்க்கும் உருளைக்கிழங்கிற்கு பதிலாக பீட்ரூட்டை சிறிய துண்டுகளாக நறுக்கி மாவின் நடுவில் வைத்து தட்டி பீட்ரூட் பரோட்டாவை காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் கோதுமை மாவு, உப்பு மற்றும் நெய் சேர்த்து சூடான நீரை ஊற்றி நன்கு பிசையும். பின்னர் 15 நிமிடங்கள் பிசைந்த மாவை மூடி வைக்க வேண்டும். தொடர்ந்து பீட்ரூட்டை நறுக்கி, அதில் உப்பு, மிளகுத்தூள் மற்றும் சிவப்பு மிளகாய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின்னர் பிசைந்து வைத்த மாவிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக மாவை பிடித்து அதன் நடுவில் பீட்ரூட் கலவையை வைத்து நிரப்ப வேண்டும். பின்னர் மாவை சப்பாத்தி தட்டில் வைத்து சப்பாத்தி உருட்டுவது போன்று நன்கு வட்ட வடிவத்தில் தட்டி எடுக்க வேண்டும். தட்டி எடுத்த பீட்ரூட் பரோட்டாவை தட்டையான கடாவில் போட்டு மிருதுவாகவும் பழுப்பு நிறமாகவும் வந்ததும் இறக்கி பரிமாறலாம்.
பீட்ரூட் கட்லெட்:
காலை நேர உணவிற்கான கலர்ஃபுல் உணவுதான் இந்த பீட்ரூட் கட்லட் ஆகும் .சிறுவர்கள் விரும்பி உண்ணும் உணவாகவும் இது இருக்கிறது. உருளைக்கிழங்கு மற்றும் பீட்ரூட் போன்றவற்றை சேர்த்து செய்யும் போது கட்லெட் கூடுதல் சுவையை தருகிறது.
முதலில் பீட்ரூட்டை நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் உள்ள மேலதிக தண்ணீரை பிழிந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் பீட்ரூட் மற்றும் அவித்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். அதில் கூடுதல் சுவைக்கு உப்பு, சிவப்பு மிளகாய் தூள் ,கரம் மசாலா தூள் ,சீரகத்தூள், கொத்தமல்லி தூள் மற்றும் சாட் மசாலா அத்துடன் உலர்ந்த பொருட்களை சேர்த்து உருளைக்கிழங்கு பீட்ரூட் கலவையுடன் நன்கு பிசையவும்.
பின்னர் மாவு கலவையுடன் சேர்த்து உருண்டைகளாக பிடிக்கவும் .
அவற்றை சிறிய வட்ட வடிவமாக தட்டி வறுத்தெடுக்கவும்.
புதினா சட்னி அல்லது கெட்ச்அப் உடன் பரிமாற மேலும் சுவை கூடும்.
பீட்ரூட் சில்லா (தோசை):
பீட்ரூட்டை நறுக்கிய பின் அதனை நன்கு அரைத்து கூழாக்கி கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, பீட்ரூட் கூழ் ,உப்பு ,மிளகாய் மற்றும் சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் தோசை சுடும் கடாயில் தோசை ஊற்றுவது போன்று இந்த பீட்ரூட் கலவையை அதில் வட்டமாக ஊற்றி அதன் மேல் சிறிய பீட்ரூட் துண்டு கலவைகளை போட்டு அலங்கரித்து இறக்கி பறி மாறலாம்.
பீட்ரூட் அவல் கலவை:
முதலில் அவலை நன்றாக கழுவி நீரை வடிகட்டிய பின்னர் மென்மையாக மாறும் வரை சிறிது நேரம் அப்படியே வைக்க வேண்டும். தொடர்ந்து பீட்ரூட்டை துருவி வைத்துக் கொள்ளவும். பின்னர் கடாயை அடுப்பில் வைத்து ஒரு டீஸ்பூன் எண்ணெய் போட்டு மிதமான தீயில் உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம், பச்சை பருப்பு, கடுகு போன்றவற்றை நன்கு வறுத்துக் கொள்ளவும். பின்னர் மேலும் ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் சிறிது சீரகம், கறிவேப்பிலை மற்றும் துருவி வைத்துள்ள பீட்ரூட்டை சேர்த்து நன்கு கிளறி கொள்ளவும்.
பீட்ரூட் துருவல் மென்மையானதும் ஊற வைத்த அவலை சேர்ந்து நன்கு கிளறவும். பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். தொடர்ந்து குறைந்த தீயில் சுமார் மூன்று நிமிடங்கள் வரை நான்கு கிளறி சமைத்துக் கொள்ளவும் பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு ,அதில் தேவை என்றால் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம் இல்லாவிட்டால் எலுமிச்சை சாறு சிறிதாக சேர்த்து மற்றும் வறுத்து வைத்துள்ள பருப்புகளை இந்த அவலில் சேர்த்து ஒன்றாக கலந்து 2 நிமிடங்கள் மூடி வைக்கவும். கொத்தமல்லி இலைகளால் அலங்கரித்து பரிமாறிக் கொள்ளலாம்.
பீட்ரூட்-கேரட் சாறு:
பீட்ரூட் கேரட் சாறு என்பது மிகவும் ஊட்டச்சத்து மிக்க பானமாகும். முதலில் கேரட் மற்றும் பீட்ரூட்டை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய பீட்ரூட், கேரட் துண்டுகளை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். தேவையான அளவு நீர் சேர்த்துக் கொள்ளலாம். தயாராகி உள்ள பீட்ரூட் கேரட் ஜூஸை காலை உணவாக வீட்டில் உள்ளவர்கள் எடுத்துக் கொள்ளலாம். குழந்தைகளுக்கும் வழங்கலாம்.