Durga Stalin : ”வீட்டு சமையல் இப்படித்தான்.. அவருக்கு இதுதான் விருப்பம்” : மனம் திறக்கும் முதல்வரின் துணை துர்கா ஸ்டாலின்..
இது ஒருபக்கம் என்றாலும் முதலமைச்சரை சந்திக்கும் சாமானியர்கள் சொல்வதும் நீங்க ரொம்ப ஃபிட்டா இருக்கீங்க என்பதுதான்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்ற பிறகு மிகவும் கவனிக்கப்பட்டு வரும் விஷயங்களில் ஒன்று அவருடைய ஃபிட்னஸ். மகாபலிபுரம் செல்லும் சாலையில் சைக்கிள் பயணம், ஜிம்மில் பளுதூக்குவது என அவரது வீடியோக்கள் படு வைரல். இது ஒருபக்கம் என்றாலும் முதலமைச்சரை சந்திக்கும் சாமானியர்கள் சொல்வதும் நீங்க ரொம்ப ஃபிட்டா இருக்கீங்க என்பதுதான்.
உடற்பயிற்சி மட்டுமல்ல ஸ்ட்ரிக்ட்டான உணவுப் பழக்கமும் காரணம் என்கிறார் அவரது பெர்சனல் பக்கம் பகிரும் துர்கா ஸ்டாலின். “எங்க வீட்டில் நானும் அவரும் இருவருமே யோகா செய்வோம். நான் கடந்த 15 வருடங்களா யோகா செய்துட்டு வரேன். பத்மாசனம்,மூச்சுப் பயிற்சி என வாரம் ஒரு யோகாசனம் மாற்றி மாற்றி செய்வோம். இதுதவிர அவர் எப்போதுமே அரை வயிற்றுக்குதான் சாப்பிடுவார். முழு வயிற்றுக்குச் சாப்பிட மாட்டார். பசியோடதான் எழுந்திருப்பேன் என்பார். எங்கள் வீட்டில் எங்களது மாமனார் கலைஞர் உட்பட எல்லோருக்கும் உணவில் அசைவம் இருக்க வேண்டும். கோழி விரும்பி சாப்பிடுவார்.ஆனால் என் கணவருக்கு அப்படியில்லை. ரசமும் பருப்பு துவையலும் சுட்ட அப்பளமும் இருந்தாலே போதும். அவ்வளவாக அசைவம் சாப்பிட மாட்டார். இந்த உணவு மட்டும் உடற்பயிற்சி முறைதான் நாங்க ஃபிட்டா இருக்கக் காரணம் என்று நினைக்கிறேன். மேலும் வீட்டில் சமைக்க ஆட்கள் இருந்தாலும் நாங்க யாராவது போய் சமையலை மேற்பார்வையிடுவோம்” என்றார்.
முன்னதாக, முதலமைச்சர் முக ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் அண்மையில் தனது 63வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவரது பிறந்தநாளுக்கு முதலமைச்சர் கொடுத்த சர்ப்ரைஸ்தான் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. அண்மையில் கலைஞர் அரங்கத்தில் நிகழ்ந்த துர்கா ஸ்டாலின் அண்ணன் மகன் திருமணத்தில் தலைமையேற்றுக் கலந்து கொண்ட ஸ்டாலின் மேடையிலேயே தனது மனைவிக்கு வாழ்த்து தெரிவித்து அன்பைப் பரிமாறிக்கொண்டது அனைவரையும் பேரின்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
துர்கா ஸ்டாலின் அண்ணன் மகன் கருணாரத்தினத்தின் திருமணம் அன்மையில் கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. மேடையில் மணமக்களை வாழ்த்திப் பேசிய முக ஸ்டாலின் ‘முதலில் எனது துணைவியாருக்கு அவரது 63வது பிறந்தநாளில் மனமார்ந்த வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொள்கிறேன். ஏற்கெனவே நள்ளிரவு 12 மணிக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டாலும் மீண்டும் ஒருமுறை இங்கே எனது வாழ்த்தைப் பகிர்ந்துகொள்கிறேன். எல்லோரும் மேடையில் என் துணைவிக்கு வாழ்த்து தெரிவிக்கும்போது அவர்களுடன் எனது மகிழ்ச்சியை நானும் பகிர்ந்துகொள்கிறேன்’ என்றார். கருணாரத்தினம். திருவாவடுதுறை எஸ்.ஏ.ராஜரத்தினம் பிள்ளையின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. நாதஸ்வரக் கலைஞர் ராஜரத்தினம் பிள்ளை பற்றிய சுவாரஸ்யத் தகவல்களையும் முதலமைச்சர் மேடையில் பகிர்ந்துகொண்டார்.