Diarrhoea: நெருங்கும் மழைக்காலம் - அதிகரிக்கும் வயிற்றுப்போக்கு, அறிகுறிகளும் & தடுப்பு நடவடிக்கைகளும்..
Diarrhea: மழைக்காலம் நெருங்கி வருவதால் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
Diarrhea: வயிற்றுப்போக்கு பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், அறிகுறிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
வயிற்றுப்போக்கு பிரச்னை:
மழைக்காலம் தொடங்கியுள்ள சூழலில், தொற்று நோய்கள் அதிகம் பரவ தொடங்கியுள்ளன. டெங்கு, மலேரியா போன்ற பாதிப்புகள் ஏற்படும் சூழலில், அண்மைக்காலமாக நாடு முழுவதும் வயிற்றுப்போக்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளுக்கு வருபவர்களில் பெரும்பாலானோர் வயிற்றுப்போக்கு அறிகுறிகளுடன் அனுமதிக்கப்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் காய்ச்சல், கடுமையான வயிற்று வலி, வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். பெரும்பாலான சூழலில் வயிற்று வலி மற்றும் வாந்தி பாதிப்பு ஏற்பட்ட, இரண்டு நாட்களுக்குப் பிறகு வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது.
வயிற்றுப்போக்கு என்றால் என்ன?
வயிற்றுப்போக்கு இது மிகவும் பொதுவான ஒரு பாதிப்பாகும். இருப்பினும், சில சந்தர்ப்பங்களில் குமட்டல், வாந்தி, வயிற்று வலி அல்லது எடை இழப்பு போன்ற பிற அறிகுறிகள் ஏற்படுகின்றன. வயிற்றுப்போக்கு பொதுவாக குறுகிய காலத்தில் குறையும். இருப்பினும், இது சில நாட்கள் அல்லது வாரங்களுக்கு நீடித்தால், மற்றொரு சிக்கல் உள்ளது. அதன்படி, தொடர் வயிற்றுப்போக்கு என்பது வயிற்று தொற்று மற்றும் குடல் நோய்களின் அறிகுறியாகும்.
வயிற்றுப்போக்கின் அறிகுறிகள்:
- வயிற்றுப் பிடிப்புகள் அல்லது வலி
- வீக்கம்
- குமட்டல்
- வாந்தி
- காய்ச்சல்
- மலத்தில் ரத்தம்
- மலத்தில் சளி
- தளர்வான இயக்கம்
மேற்கண்ட அறிகுறிகள் இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும். வயிற்றுப்போக்கு ஏற்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, உங்கள் உடல் நீரிழப்புக்கு ஆளாகும். வயிற்றுப்போக்கு குழந்தைகளில், குறிப்பாக சிறு குழந்தைகளில் விரைவாக நீரிழப்புக்கு வழிவகுக்கும். சில சமயங்களில் உயிரிழக்கும் வாய்ப்பு உள்ளது.
வயிற்றுப்போக்குக்கான காரணங்கள்:
ரோட்டா வைரஸ் போன்ற வைரஸ்கள் மற்றும் ஈ கோலை போன்ற பாக்டீரியாக்களால் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. நுண்ணுயிர் எதிர்ப்பிகள் போன்ற மருந்துகள், சில உணவுப் பொருட்கள் உள்ளிட்டவை வயிற்றுப்போக்கு மற்றும் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
வயிற்றுப்போக்குக்கான சிகிச்சை:
சில சந்தர்ப்பங்களில் வயிற்றுப்போக்கு நோய்த்தொற்று சிகிச்சையின்றி ஒரு சில நாட்களுக்குள் தானாகவே மறைந்துவிடும். ஆனால் மிகவும் கடுமையான நிலை ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
தற்காப்பு நடவடிக்கைகள்:
- வயிற்றுப்போக்கு ஏற்படாமல் இருக்க, சுற்றுப்புறத்தை தூய்மையுடன் வைத்திருப்பதுடன், குழந்தைகளை சுத்தமாக வைத்திருப்பதும் மிக அவசியம் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்
- குழந்தைகளை திறந்த வெளியில் மலம் கழிக்க அனுப்பினால் தொற்று நோய் பரவ வாய்ப்பு உள்ளது
- வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், காய்ச்சிய தண்ணீர், மோர், பார்லி போன்ற திரவங்களை அதிகம் குடிக்க வேண்டும்
- எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை உண்ணுங்கள்.
- நொறுக்குத் தீனிகள் மற்றும் தெரு உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
- வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு அடிக்கடி ஏற்பட்டால் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவரை அணுகலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )