Tour ப்ளான் பண்ணியாச்சா? Beach மட்டுமில்ல.. இந்த ஏரிகளும் டாப் க்ளாஸ்.. பெஸ்ட் ஏரிகளின் லிஸ்ட் இதோ..
ஏரி சுற்றுலா என்பது அவற்றிற்கான முக்கியத்துவத்தை அதிகரிப்பதோடு, அவற்றைப் பாதுகாக்க உதவுகிறது. நாடு முழுவதும் நீங்கள் சுற்றுலா செல்ல வேண்டிய சில முக்கிய ஏரிகள் குறித்து இங்கு குறிப்பிட்டுள்ளோம்.
கடற்கரையில் விடுமுறைகளைக் கொண்டாடும் காலங்கள் முடிவுக்கு வரப் போகின்றன. அடுத்த ஆண்டும், தற்போதைய 2021ஆம் ஆண்டின் இறுதி விடுமுறை நாள்களிலும், மாலத்தீவுகளுக்குப் போகும் திட்டங்களைக் கைவிட்டு, உள்நாட்டில் உள்ள ஏரிகளுக்குச் சுற்றுலா செல்லலாம். பிண்டெரெஸ்ட் தளத்தில் அடுத்த ஆண்டுக்கான பயணக் கணிப்புகளின் படி, பலரும் `ஏரி சுற்றுலாவுக்கான உடைகள்’ என அதிகளவில் தேடியதாகத் தெரிகிறது.
ஏரிகளுக்குச் சுற்றுலா செல்வது என்பது அவற்றிற்கான முக்கியத்துவத்தை அதிகரிப்பதோடு, அவற்றைப் பாதுகாக்க உதவுகிறது. நாடு முழுவதும் நீங்கள் சுற்றுலா செல்ல வேண்டிய சில முக்கிய ஏரிகள் குறித்து இங்கு குறிப்பிட்டுள்ளோம்.
சில்கா ஏரி, ஒடிஷா.
நாட்டின் மிகப்பெரிய கடலோர ஏரியாகவும், உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஏரியாகவும் கருதப்படும் சில்கா ஏரி பல்வேறு காரணங்களுக்காகப் பிரசித்தி பெற்றது. எனினும், இந்திய உள்நாட்டுச் சுற்றுலா பயணிகளுக்குப் பெரிதும் தெரியாத பகுதியாகவே இருந்து வருகிறது. உப்புநீர் ஏரியான சில்கா, தயா ஆற்றின் முடிவில் இருக்கிறது. குளிர்க்காலங்களில் போது, பல்வேறு பறவைகள் இங்கு வந்து சேருவதால், குளிர்க் காலத்தில் இங்கு செல்வது சிறந்தது.
குருடொங்மார் ஏரி, சிக்கிம்.
குளிர்க் காலத்தில் சிறந்த சுற்றுலா அனுபவத்தைத் தரும் குருடொங்மார் ஏரி உலகின் இரண்டாவது உயர்ந்த இடத்தில் உள்ள ஏரி எனக் கருதப்படுகிறது. இது கடலின் அளவில் இருந்து சுமார் 17 ஆயிரம் அடிகள் உயரத்தில் இருக்கிறது. மேலும் பனிக்கட்டிகளின் காரணமாக இந்த ஏரி உருவாகிறது. குளிர்க் காலத்தில் ஐஸ் வடிவில் மாறும் இந்த ஏரியில், ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் ஐஸ் ஆகாமல் இருப்பதன் ரகசியம் யாருக்கும் தெரியாது.
லோக்டாக் ஏரி, மணிப்பூர்.
வடகிழக்கு இந்தியாவின் மிகப் பெரிய ஏரியான லோக்டாக், நாட்டின் ஒரே மிதக்கும் தேசிய பூங்காவான கீய்புல் லாம்ஜாவுக்கு வீடாகவும் செயல்படுகிறது. பும்டி என்று அழைக்கப்படும் மிதக்கும் செடிகளுக்காகப் பிரபலமானது லோக்டாக் ஏரி. பறவை விரும்பிகளுக்கும், புகைப்பட கலைஞர்களுக்கும் இந்த இடம் நல்ல அனுபவம் தருவதாக இருக்கும்.
பீம்தால், உத்தரகண்ட்.
நைனிதால் குறித்து பலருக்கும் தெரிந்தாலும், பீம்தால் மீது அதிக கவனம் குவிவதில்லை. உத்தராகண்ட் பகுதியின் மிகப்பெரிய ஏரிகளுள் ஒன்றான பீம்தால் ஏரியின் நடுவில் உள்ள தீவில் ஏரியில் வாழும் மீன் வகைகளின் கண்காட்சி இடம்பெற்றிருக்கிறது.
தால் ஏரி, காஷ்மீர்.
ஸ்ரீநகர் பகுதியின் சிறிய வடிவமாக கடைகள், வீடுகள், மருத்துவ வசதிகள், ஏடிஎம்கள், சந்தைகள், பள்ளிகள் முதலானவை மிதக்கும் இடமாக இருக்கிறது தால் ஏரி. தால் ஏரியின் படகு ஓட்டுநர்கள் இந்த ஏரியை நம்பி வாழ்கின்றனர். குளிர்க் காலத்தின் போது இந்த ஏரி முழுவதுமாக ஐஸ் வடிவில் மாறுகிறது.
ஊட்டி ஏரி, தமிழ்நாடு
மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அழகின் நடுவில் சுற்றுலா செல்வதற்கான சிறந்த இடம் ஊட்டி ஏரி. மனிதர்களால் மீன் பிடிப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த ஏரி, தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது. இங்கு படகு சவாரியும் நடத்தப்படுகிறது.
வெம்பநாட் ஏரி, கேரளா
கேரளா ஏரிகளைச் சுற்றிப் பார்ப்பதற்கு குளிர்காலமே சிறந்தது. கேரளாவின் மிகப்பெரிய ஏரியான வெம்பநாட் ஏரியில் வீடு வடிவிலான படகுகள் தங்குவதற்காகக் கிடைக்கின்றன.