Co-Parenting: தாய் - தந்தை பாசத்துடன் வளர்வது குழந்தைகளுக்கு ஏன் முக்கியமானது? பெற்றோர் ஹீரோக்கள் ஆவது எப்படி?
Co-Parenting: ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி விவாகரத்திற்கு மத்தியில் தாய் - தந்தை சேர்ந்தே குழந்தையை வளர்க்க வேண்டிய அவசியம் என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Co-Parenting: பெற்றோரின் பிரிவு குழந்தைகள் மத்தியில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
பெற்றோரின் அரவணைப்பு அவசியம்
பெற்றோர் இருவரும் சேர்ந்து அன்பையும், அரவணைப்பையும் கொடுத்து தங்களது குழந்தையை வளர்ப்பு என்பது இன்றைய காலத்தின் அவசியமாக மாறியுள்ளது. இதை அனைத்து நவீன பெற்றோர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். பெற்றோரில் யாரேனும் ஒருவர் குழந்தை வளர்ப்பின் முழு சுமையையும் ஏற்கும்போது முழு குடும்பமும் பாதிக்கப்படுகிறது. தாயின் மன ஆரோக்கியம் குழந்தைகளின் மன ஆரோக்கியத்தில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சிகள் எச்சரிக்கின்றன. இதனால்தான் பேற்றோர் இணைந்து குழந்தையை பராமரிப்பது என்பது இன்று இந்திய குடும்பங்களுக்கு அவசியமாகிவிட்டது.
பெற்றோரின் பொறுப்பில் மாற்றம்
பன்நெடுங்காலமாக, இந்திய குடும்பங்கள் தங்கள் கடைமைகளை கூர்மையாகப் பிரித்துக் கொண்டன. அதன்படி, தாய்மார்கள் குழந்தைகளை வளர்த்தனர், தந்தைகள் வெளியே சென்று குடும்பத்திற்கான வருமானத்தை ஈட்டினர். சில நேரங்களில் தந்தைகள் அடிக்கடி இடம் மாறக்கூடிய வேலைகளிலும் அல்லது வெளிநாடுகளில் கூட இருந்தனர். அத்தகைய சூழலில் குழந்தைகளின் அன்றாட வாழ்க்கையில் தந்தையின் இருப்பு என்பது அரிதாகவே இருந்தது. தாய்மார்கள் வீட்டை நடத்துதல், குழந்தைகளை நிர்வகித்தல் மற்றும் வயதான பெற்றோரை கவனிப்பது போன்ற சுமைகளை தனியாக சுமந்தனர். பெண்கள் வெளியே சென்று வேலை செய்யாதபோது அல்லது சொந்தமாக தொழில் செய்யாதபோது அது எளிதாக இருந்தது. ஆனால், அந்த சூழல் என்பது தற்போது முற்றிலும் மாற்றம் காண தொடங்கியுள்ளது.
பொறுப்புகளை பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயம்:
காலம் குடும்ப கட்டமைப்பில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கூட்டு குடும்பங்களின் எண்ணிக்கை என்பது குறைத்து, பெற்றோர் மற்றும் குழந்தைகள் மட்டுமே அடங்கிய சிறு குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நகரங்களில் அதிகளவில் குடியேறுவதால் செலவுகளை சமாளிக்க, பெற்றோர் இருவருமே பணிக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதேநேரம், குடும்பத்தில் மூத்த குடிமக்கள் இல்லாதபோது, பெற்றோரில் யாரேனும் ஒருவர் மட்டுமே எல்லாவற்றையும் நிர்வகிப்பது இனி சாத்தியமில்லை அல்லது ஆரோக்கியமானது அல்ல. இருவரும் சேர்ந்து குழந்தையை வளர்ப்பு என்பது உடல் ரீதியான வேலைகளைப் பிரிப்பது மட்டுமின்றி, குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கான அனைத்து முடிவுகளையும் சேர்ந்து எடுப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குகிறது. இதற்கான உதாரணமாக நகர்ப்புறங்களில் வசிக்கும் பெரும்பாலான குடும்பங்களை கண்கூடாக பார்க்க முடிகிறது.
நவீன கால பெற்றோர்களிடையே உருவான மாற்றம்
உதாரணமாக,
- பெற்றோர் பயிற்சிப் பட்டறை, பள்ளிகளில் நடைபெறும் பெற்றோர் ஆசிரியர் கூட்டங்கள் மற்றும் குழந்தையின் பொழுதுபோக்குகள் அல்லது சமூக நடவடிக்கைகளில் தாய் மற்றும் தந்தை என இருவருமே மாறி மாறி பங்கேற்று வருகின்றனர்
- சமைப்பது, வீடு சுத்தம் செய்வது, மளிகைப் பொருட்கள் வாங்குவது, பெற்றோரைப் பராமரிப்பது அல்லது குழந்தைகளுக்கான மருத்துவ முன்னெச்சரிக்கைகள் போன்ற வீட்டுப் பொறுப்புகளை இருவருமே பகிருந்து கொள்கின்றனர்
- குழந்தைக்கான திட்டமிடலை தொடங்குவதற்கு முன்பே பெற்றோர் மற்றும் வீட்டு நிர்வாகத்தினை குறித்து தீவிரமாக விவாதிக்கின்றனர்
- பேறுகால விடுப்பு எடுப்பது அல்லது தங்கள் முதலாளிகளுடன் நெகிழ்வான வேலை ஏற்பாடுகளைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவது, அல்லது குழந்தைகளை வளர்ப்பதற்கு உதவுவதற்காக வேலையிலிருந்து குறுகிய காலத்திற்கு விடுப்பு எடுப்பது போன்ற திட்டங்களையும் நவீன கால பெற்றோர் கையாளுகின்றனர்.
பெற்றோர் சேர்ந்து குழந்தையை வளர்க்க வேண்டியது ஏன்?
பெற்றோர் இருவரும் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ளும்போது, அதன் தாக்கம் குழந்தைக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த டும்பத்திற்கும் நன்மையை ஏற்படுத்தும். உதாரணமாக,
- குழந்தைகள் உணர்ச்சி ரீதியாக பாதுகாப்பாக உணர்கிறார்கள். இரு பெற்றோர்களுடனும் பிணைப்பை பெறுவதன் மூலம் பாலினப் பாத்திரங்கள் பற்றிய ஆரோக்கியமான கருத்துக்களை வளர்த்துக் கொள்கிறார்கள்.
- உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் இரு பெற்றோர்களும் இருப்பது அவர்களுக்குப் பாதுகாப்பாக உணர உதவுகிறது மற்றும் அவர்களுக்கு சமநிலை உணர்வைத் தருகிறது.
- பெற்றோர் சேர்ந்து குடும்பத்தை நிர்வகிப்பதன் மூலம், குழுவாக சேர்ந்து செயல்படுவதன் பலன்கள் மற்றும் பரஸ்பர மரியாதையை கற்றுக்கொள்கிறார்கள்.
- தாய்மார்கள் குறைந்த மன அழுத்தம், மேம்பட்ட மன ஆரோக்கியம் மற்றும் வலுவான திருமண ஆதரவை அனுபவிக்கிறார்கள். அவர்கள் ஓய்வெடுக்கவும், தங்கள் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளவும் அல்லது தங்கள் தொழில் இலக்குகளை அல்லது தனிப்பட்ட ஆர்வத்தைத் தொடரவும் அதிக நேரம் கிடைக்கும்.
- தந்தைகள் தங்கள் குழந்தைகளுடன் ஆழமான உணர்ச்சிப் பிணைப்புகளை உருவாக்குகிறார்கள்.
- பணிகளை பகிர்ந்துகொண்டு ஒருவருக்கு ஒருவர் பக்கபலமாக இருப்பதால், ஒட்டுமொத்த குடும்பத்தின் உறவுகளும் வலுப்படும்





















