EXCLUSIVE: குளிர்காலத்தில் வழக்கத்திற்கு மாறாக மழை...! என்ன காரணம்? விவரிக்கிறார் பூவுலகின் நண்பர்கள் வெற்றிச்செல்வன்
பருவங்கள் மாறி நிகழும் மாற்றங்கள் குறித்து பூவுலகின் நண்பர்கள் வெற்றிச்செல்வன் தெரிவிக்கும் தகவலை காண்போம்.
குளிர்காலம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், வழக்கத்திற்கு மாறாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இன்று காலை நெல்லை மாவட்டத்தில் லேசான மழை பெய்தது. இன்று மாலை திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பனி மூட்டத்துடன் மழை பெய்தது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
5 நாட்களுக்கு மழை:
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா, அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வழக்கத்திற்கு மாறாக குளிர் காலத்தில் மழை பெறுவது குறித்து பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தை சேர்ந்த வெற்றிச்செல்வன் ஏபிபி நாடு-விற்கு பேட்டியளித்தார்.
அவர் தெரிவித்ததாவது,
சங்க கால இலக்கியங்கள் மூலம் ஆடி மாதங்களில் காற்றடிக்கும், மார்கழி- தை மாதங்களில் குளிர் அடிக்கும் மற்றும் மழை பெறும் காலம் உள்ளிட்ட தகவலை அறியலாம். ஆனால் தற்போது காலநிலையில் மாற்றம் நிகழ்ந்து உள்ளதை பார்க்க முடிகிறது. கோடை காலத்தின் அளவு அதிகரித்துள்ளது. மழையின் தன்மையும் மாறியுள்ளது, குளிரின் தன்மையும் மாறியுள்ளது.
சில மணி நேரங்களில் கொட்டி தீர்க்கும் மழை:
பருவ மழையானது நிறுத்தி நிதானமாக பெய்ய வேண்டிய மழையானது, சில மணி நேரங்களிலே கொட்டி தீர்த்து விடுகிறது. இவையெல்லாம் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை புரிந்து கொள்ள முடிகிறது. இயல்பாக ஏப்ரல் மாதம் தொடங்கி மே, ஜூன் மாதங்கள் வரை கோடை காலம் இருக்கும். ஆனால் மார்ச் மாதத்திலேயே கோடை காலம் தொடங்கி விடுகிறது.
சென்னையில், கோடை காலத்தின் நாட்கள் அதிகரித்து உள்ளதாகவும், 212 நாட்கள் இருக்க கூடிய கோடை காலம் 252 நாட்களாக அதிகரித்து உள்ளதாகவும் ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. சென்னையில், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் வரை செல்லும், ஆனால் கடந்த மாதத்தில் 19 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை சென்றுள்ளது.
அதிக குளிர் நிலவுகிறது, வெப்பநிலை அதிகரிக்கிறது, குறைந்த நேரத்தில் அதிக மழை பெய்கிறது, அதிக புயல்கள் உருவாகின்றன. இவையெல்லாம் காலநிலை மாற்றத்தின் ஒரு பகுதிதான். நாம் புதிய காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.
”சரி செய்ய முடியாது,தடுக்க முடியும்”
இது, இந்தியாவில் மட்டுமன்றி உலகளவிலும் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை பார்க்க முடிகிறது. காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்து, முன்பு இருந்த நிலைமைக்கு செல்ல முடியுமா? என்பது குறித்தான கேள்விக்கு, அவர் தெரிவிக்கையில் முன்பு அடைந்த பாதிப்பை சரி செய்ய முடியாது, இனி வரக்கூடிய பாதிப்பை தடுக்க மட்டுமே முடியும். எனவே தடுக்கக்கூடிய வழிமுறைகளை நாம் கையாள வேண்டும். ஆகையால், புதிய சூழலுக்கு ஏற்ப வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.
”சரியான திட்டங்களை உருவாக்க வேண்டும்”
தொழில்புரட்சி ஏற்பட்ட பிறகு ( கடந்த 150 ஆண்டுகளில் ) 1.1 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பநிலை அதிகரித்துள்ளது. இன்னும் 20 முதல் 30 ஆண்டுகளில் 1.1 லிருந்து 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது. இது நிகழ்ந்தால் பூமியில் 60 சதவீதமான உயிரினங்கள் வாழ முடியாத சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது. 2 டிகிரி செல்சியஸாக உயர்ந்தால், 90 சதவீதமான உயிரினங்கள் வாழ முடியாத சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, மேலும் பாதிப்பு ஏற்படாத வகையில் சரியான திட்டங்களை உருவாக்க வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தை சேர்ந்த வெற்றிச்செல்வன் தெரிவித்தார்.