Health Care : நுரையீரல் ஆரோக்கியம் ரொம்ப முக்கியம் - மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வழிமுறைகள்!
Health Care : நுரையீரன் ஆரோக்கியம் குறித்த தொகுப்பு.
நம் உடலில் உள்ள அனைத்து உள் உறுப்புகளின் ஆரோக்கியம் முக்கியம் என்று கருதுகிறோம். மூளைக்கு ஏற்ற உணவுகள்; கல்லீரலுக்கு ஏற்ற உணவுகள் என டயட் லிஸ்டி இருக்கும். ஆனால், நாம் நுரையீரலை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோமா என்ற கேள்வி எழுகிறது. நுரையீரல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது முக்கியமானது. நுரையீரலில் இருந்து தூசி மற்றும் பாக்டீரியாக்களை வெளியேற்றும் தற்காப்பு உள்கட்டமைப்பு இயற்கையிலேயே இருக்கிறது. இருப்பினும், அதன் செயல்பாடு சீராக இருக்க நம் உணவுப் பழக்கம் வாழ்க்கை நடைமுறை முக்கிய பங்கு வகிக்கிறது.
நம் உடல் சொல்வதற்கு செவி சாய்த்தாலே பாதி பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும். நுரையீரல் ஆரோக்கியத்தை பேணுவதற்கு மருத்துவர்கள் சொல்லும் ஆலோசனைகளை கீழே காணலாம்.
புகைபிடிக்க வேண்டாமே:
சிகரெட், அல்லது எந்த வகையான புகையிலை பொருட்களின் பயன்பாடு புற்றுநோய் மற்றும் பல நுரையீரல் தொடர்பான நோய்களுக்கு வழிவகுக்கிறது. புகைப்பிடிப்பது உடல்நலனுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை அறிந்தும் அதை அலட்சியமாக கருதுவது ஆபத்தானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
மாசில்லா வீடு:
கொசு வத்தி, வாசனை மெழுகுவர்த்திகள், உள்ளிட்ட புகை நுரையீரலை சேதப்படுத்தும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. தூசி அல்லது கடுமையான வாசனைக்கு ஒவ்வாமை, தும்மல், மூக்கில் இருந்து தண்ணீர் வடிதல் அல்லது மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவை அடிக்கடி ஏற்படும் பிரச்சனையாகும். இதனைத் தடுக்க வீட்டை அடிக்கடி சுத்தம் செய்து வைத்து கொள்ளவும். திரை சீலைகள் ஆகியவற்றை சுத்தமாக இருப்பதை உறுதிப்படுத்க்த வேண்டும். வீட்டிலும் ஒட்டடை இல்லாதவாறு பார்த்துகொள்ள வேண்டும்.
வெளிப்புற காற்று மாசுபாட்டைத் தவிர்க்கவும்:
காற்று மாசுபாட்டைக் குறைக்க நிறைய செய்ய முடியும். தனிப்பட்ட அளவில் மரம், குப்பை போன்றவற்றை எரிப்பதைத் தவிர்க்கவும். கார்பன் உமிழ்வைக் குறைக்க சைக்கிள், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துங்கள். பூமியைக் காப்பாற்றவும், நம்மைக் காப்பாற்றவும் மரங்களை வளர்க்க வேண்டும்.
உடற்பயிற்சி:
மாசு நிறைந்த சூழலில் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்கவும். மாசற்ற சுற்றுச்சூழலில் குறைந்தது 20 நிமிடங்களாவது சீரான, மிதமான உடற்பயிற்சியை மேற்கொள்வது உடல்நலனுக்கு நல்லது. இது நுரையீரல் மற்றும் இதயத்திற்கு சிறந்தது. நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், நிபுணர்களிடமிருந்து பயிற்சிகளைக் கற்றுக் கொள்ளுங்கள். அவர்களின் வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றுவதே சிறந்தது.
யோகா, பிராணயாமம்:
பிராணாயாமம் பல நூற்றாண்டுகளாக நுரையீரல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த எளிய நுட்பங்களைப் பயிற்சி செய்வது ஆரோக்கியமான நுரையீரல் வாழ்க்கை முறைக்கு உகந்தது.
தொற்றுநோயைத் தடுக்க:
பொருத்தமான முகமூடிகளை வழக்கமாகப் பயன்படுத்துவது கொரோனா மற்றும் காசநோய் ஆகியவற்றில் இருந்து தற்காத்து கொள்ள உதவுகிறது. நுரையீரல் தொற்றுநோயைத் தடுப்பதற்கான எளிய மற்றும் மிகவும் செலவு குறைந்த வழி இதுவாகும்.
தடுப்பூசி:
தொற்றுநோய்க்கான அதிக ஆபத்தில் உள்ள நபர்களுக்கு, இன்ஃப்ளூயன்ஸா வைரஸ், ’pneumococcal' பாக்டீரியா தடுப்பூசிகள் நிமோனியாவைத் தடுப்பதற்கு மிகவும் முக்கியமானவை. மருத்துவரை அணுகி இந்த தடுப்பூசிகள் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெறுங்கள்.
மருத்துவ ஆலோசனை:
நுரையீரல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி, வழக்கமான மருந்துகளை நிறுத்தக் கூடாது.
புகையிலை,புகைப்பிடித்தல் உள்ளிட்டவைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தைகளிடம் கற்பித்தால் அவர் மூலம் அவை எல்லாரிடமும் சென்று சேரும்.