TCS Layoff: பெரியவர் இருந்தா இப்படி நடக்குமா? நரகம், கட்டம் கட்டி தூக்கும் டிசிஎஸ்.. கதறும் ஐடி ஊழியர்கள்
TCS Layoff: நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் தங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி பணியில் இருந்து நீக்குவதாக, முன்னாள் ஊழியர்கள் சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டி வருகின்றனர்.

TCS Layoff: டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட பிறகு தங்களது வாழ்க்கையே நரகமாகிவிட்டதாக பலர் வேதனை தெரிவித்துள்ளார்.
டிசிஎஸ் நிறுவனத்தின் பணிநீக்க நடவடிக்கை:
எதிர்கால சூழலுக்கு ஏற்ப நிறுவனத்தை தயார்படுத்துவது என்ற திட்டத்தின் கீழ், பல்வேறு தொழில்நுட்பம் நுட்ப அம்சங்களில் டிசிஎஸ் நிறுவனம் முதலீடு செய்து வருகிறது. அதற்கு ஈடாக ஊழியர்கள் எண்ணிக்கையை மறுக்கட்டமைப்பு செய்வதாக, 2 சதவிகிதம் அதாவது 12 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அண்மையில் அறிவித்தது. இதனால், ஒட்டுமொத்த அலுவலகமே ஒருவிதமான கலக்கத்தில் இருப்பதாக முன்னாள் மற்றும் இந்நாள் ஊழியர்கள் சமுகக் வலைதளங்களில் கதறி வருகின்றனர்.
கொத்து கொத்தாக பணிநீக்கம்
பல ஆண்டுகாலம் நிறுவனத்திற்காக உழைத்தவர்களை கூட ஒரே நாளில் வீட்டிற்கு அனுப்புவதாகவும், இதனால் யாருக்கு எப்போது வேலை பறிபோகுமோ? என்ற அச்சத்திலேயே ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனராம். தொலைபேசி வாயிலாகவு, மின்னஞ்சல் வாயிலாகவும், எச்.ஆர். அதிகாரிகள் நேரடியாக அழைத்தும் உடனடியாக பணியில் இருந்து நீக்கப்பட்டதாக இடியை இறக்குகின்றனராம். சில நேரங்களில் ஒட்டுமொத்த குழுவுமே ஒரே அடியாக வீட்டிற்கு அனுப்பப்படுகிறதாம். நிர்பந்தத்தை ஏற்று சிலர் உடனடியாக ராஜினாமா செய்கின்றனராம், மறுப்பவர்களை குறிவைத்து தொல்லை தருவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
”கட்டம் கட்டப்படும் ஊழியர்கள்”
யாரை பணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற பட்டியலை நிர்வாகம் தயாரித்து வைத்து இருப்பதாகவும், அதன்படி நபர்களை டார்கெட் செய்து பெஞ்சில் அமர வைப்பது, செயல்திறனில் குறை கூறுவது, மோசமாக நடத்தி மன உளைச்சலை ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனராம். இதனால் ரத்தன் டாடா மறைவுக்கு பின் டிசிஎஸ் நிறுவனம் தன் மாண்பை இழந்துவிட்டதாக ரெடிட் தளங்களில் பல ஊழியர்களும் பதிவு செய்து வருகின்றனர். அதில், “தங்களை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைக்கின்றனர், ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர், மாஃபியா போல செயல்படுகின்றனர்” என தங்களது அனுபவங்களை பதிவு செய்து வருகின்றனர்.
நரகமான வாழ்க்கை..
இந்நிலையில் தான் டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து அண்மையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர் ஒருவர், தனியார் நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், “நிறுவனத்திற்காக 13 ஆண்டு காலம் வேலை செய்திருக்கிறேன், ஐந்து மாதங்களாக டிசிஎஸ் நிறுவன HR பிரிவு அதிகாரிகள் என்னை டார்ச்சர் செய்தனர். டார்கெட் செய்து நெருக்கடி கொடுத்து வேலையில் இருந்து ராஜினாமா செய்ய நிர்ப்பந்தம் செய்தனர். திடீரென ஒருநாள் உங்களை வேலையை விட்டு நீக்கிவிட்டோம் என கூறினர். 10 ஆண்டுகளுக்கு மேலாக விஸ்வாசமாக வேலை செய்த என்னை டிசிஎஸ் நிறுவனம் ஏமாற்றி விட்டது.
வேண்டுமென்றே தேவையில்லாத காரணங்களை சுட்டிக்காட்டி என்னை வேலையில் இருந்து நீக்கிவிட்டனர். பெஞ்ச் எனப்படும் எந்த ப்ராஜெக்டிலும் இல்லாமல் இருந்த காலகட்டத்திற்கு ரெக்கவரி கட்டணமாக 7 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என டிசிஎஸ் நிறுவனம் நிர்பந்தித்ததோடு, அந்த தொகையை என்னுடைய கிராஜுவிட்டி பணத்தில் இருந்து பிடித்தம் செய்து கொண்டார்கள். குறிவைக்கப்பட்ட காலத்தில் அலுவலகத்தில் இருந்த ஒவ்வொரு நாளையும் நரகத்தில் இருப்பதைப் போல உணர்ந்தேன். தற்போது புனேவில் நண்பர்களின் வீட்டில் தங்கியிருந்தபடி வேறு இடத்தில் வேலை செய்து வருகிறேன். சொந்த ஊரில் இருக்கும் என்னுடைய மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு இந்த விஷயம் தெரியாது. அவர்களிடம் எனக்கு வேலை போன விஷயத்தை கூறும் தைரியம் இல்லை” என்றும் அந்த டிசிஎஸ் நிறுவன முன்னாள் ஊழியர் கண்கலங்கியபடி தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.





















