உதவித்தொகையுடன் பயிற்சி: சென்ட்ரல் வங்கியில் வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்! கடைசி நாள்: 23.6.2025
ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 31.5.2025 தேதியின்படி 20 முதல் 28-க்குள் இருக்க வேண்டும்.

தஞ்சாவூர்: உதவித் தொகையுடன் பயிற்சிங்க... எங்கு தெரியுங்களா. முழு விபரங்கள் உங்களுக்காக அளிக்கப்பட்டுள்ளது.
பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா-வில் உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சிக்கான (அப்ரண்டிஸ்) 4,500 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி: Engagement of Apprentices(2025-26), மொத்த காலியிடங்கள்: 4,500 (தமிழ்நாட்டிற்கு 202, புதுச்சேரிக்கு 2 இடங்கள்) அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 31.5.2025 தேதியின்படி 20 முதல் 28-க்குள் இருக்க வேண்டும். ஓபிசி, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். அதை விண்ணப்ப அறிவிப்பில் பார்த்துக் கொள்ளலாம். உதவித்தொகை: பயிற்சியின்போது வங்கி விதிமுறையின்படி ஒவ்வொரு மாதமும் உதவித்தொகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வுக்கான நாள், இடம் போன்ற விவரங்கள் தகுதியானவர்களுக்கு அவர்களது மின்னஞ்சலுக்கு தெரிவிக்கப்படும். நேர்முகத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவோர் அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டுவர வேண்டும். எழுத்துத் தேர்வு வரும் ஜூலை முதல் வாரத்தில் நடைபெறும். எழுத்துத் தேர்வுக்கான வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் இருக்கும்.
தமிழ் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சென்னை, திருவள்ளூர், கோவை, மதுரை, நாமக்கல், திருச்சி, விருதுநகர், திருப்பூர், காஞ்சிபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நீலகிரி, சேலம், தேனி, தென்காசி, அரியலூர், தர்மபுரி, திண்டுக்கல் போன்ற இடங்களில் அமைந்துள்ள வங்கியின் கிளைகளில் பயிற்சி வழங்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பொது, ஓபிசி பிரிவினர்களுக்கு ரூ.800. எஸ்சி, எஸ்டி, பெண்களுக்கு ரூ.600, மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.400 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிப்போர் முதலில் தங்களது தகுதி குறித்த விவரங்களை www.nats.education.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பின்னர் www.centralbankofindia.co.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 23.6.2025. இன்னும் 3 நாட்களே இருக்கிறது. எனவே தாமதமின்றி உடனே விண்ணப்பம் செய்து விடுங்க. உங்களுக்கான அருமையான வாய்ப்பை இழந்து விடாதீர்கள்.
மத்திய அரசு துறை ஸ்டெனோகிராபர் குரூப் 'சி', 'டி' தேர்வுக்கான அறிவிப்பு
மத்திய அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள ஸ்டெனோகிராபர் குரூப் 'சி' மற்றும் 'டி' தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது. தகுதியானவர்களிடம் இருந்து வரும் 26ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வின் பெயர்: SSC-Stenographer Grade 'C' and 'D' Exam – 2025. காலியிடங்கள்: 261
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் சுருக்கெழுத்தில் ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் குரூப் 'டி' பிரிவிற்கு நிமிடத்திற்கு 80 வார்த்தைகளும், குரூப் 'சி' பிரிவிற்கு நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் நிமிடத்திற்கு 50 வார்த்தைகள் என்ற வேகத்தில் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பத்தாரர் குறைந்தபட்சம் 157 செ.மீ உயரம், 50 கிலோ எடையும், மார்பளவு சாதாரண நிலையில் குறைந்தது 75 செ.மீ அகலமும், 5 செ.மீ சுருங்கி விரியும் தன்மையும் இருக்க வேண்டும். வயதுவரம்பு: 1.8.2025 தேதியின்படி ஸ்டெனோகிராபர் குரூப் 'சி' பணியிடங்களுக்கு 18 முதல் 30 வயதிற்குள்ளும், குரூப் 'டி' பணிகளுக்கு 18 முதல் 27 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு 10 ஆண்டுகள் சலுகை வழங்கப்படும்.
எஸ்எஸ்சி நடத்தும் ஆன்லைன் சுருக்கெழுத்து தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் சுருக்கெழுத்து எழுத்தும் திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். தேர்வு நடைபெறும் நாள்: 6.8.2025 - 11.8.2025
தேர்வு நடைபெறும் இடங்கள்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, புதுச்சேரி, வேலூர். எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம் , சுருக்கெழுத்து தேர்வில் வெற்றி பெறத் தேவையான தகுதிகள் போன்ற விவரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள், இடம் போன்ற விவரங்கள் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி மற்றும் முன்னாள் ராணுவத்தினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் முறை: www.ssc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 26.6.2025. விபரங்களை சரியான முறையில் பார்த்து உடனே விண்ணப்பத்தை அனுப்புங்கள். வெற்றி நிச்சயம்.





















