MRB Recruitment 2022: ரூ.1.12 லட்சம் வரை ஊதியம்; 889 அரசு காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
MRB Recruitment 2022: மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் 889 மருந்தாளுநர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணியிடத்துக்கு மாத சம்பளமாக ரூ.1,12,400 வரை வழங்கப்படுகிறது.
மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் 889 மருந்தாளுநர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணியிடத்துக்கு மாத சம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை வழங்கப்படுகிறது.
தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர மருத்துவ பணியாளர்களை தேர்வு செய்ய மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) உருவாக்கப்பட்டது. இந்தத் தேர்வு வாரியம் 2012ஆம் ஆண்டு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறையின் அரசாணை மூலம் தோற்றுவிக்கப்பட்டது.
மருத்துவத் துறை பணியாளர்களை தேர்வு செய்வதற்கென்று தனியாக ஒரு தேர்வு வாரியம் அமைக்கப்படுவது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை ஆகும். மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் ஒரு தலைவர், ஒரு உறுப்பினர் , ஒரு உறுப்பினர் செயலர் மற்றும் 19 பணியாளர்களைக் கொண்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு மருத்துவத் துறையில் உள்ள மருந்தாளுநர் பணியிடத்தில் இருக்கும் 889 காலிப் பணியிடங்களை நிரப்ப உள்ளதாக மருத்துவ பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதில் அலோபதி, சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட பணியிடங்களில் தகுதியான நபர்களை நியமிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க மருத்துவத் துறை சார்ந்த துறையில் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். இப்பணியில் தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவர்.
ஊதியம்
மருந்தாளுநர் பணியிடத்துக்கு மாத சம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை வழங்கப்படுகிறது. (ஊதியக் குழு நிலை II-ன்படி ஊதியம் வழங்கப்பட உள்ளது.)
விண்ணப்பக் கட்டணம்
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க பொதுப் பிரிவினர், பிசி, எம்பிசி பிரிவினருக்கு ரூ.600 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டோர், அருந்ததியர், பழங்குடிப் பிரிவினருக்கு ரூ.300 கட்டணம் ஆகும்.
விண்ணப்பிப்பது எப்படி?
மருந்தாளுநர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பிற வகைகள் மூலம் விண்ணப்பிப்பதை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் ஏற்றுக்கொள்ளாது.
கடைசித் தேதி
இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நாளை (ஆகஸ்ட் 10) முதல் www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் தொடங்குகிறது. தேர்வர்கள் ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு http://www.mrb.tn.gov.in/notifications.html என்ற இணைய முகவரியை க்ளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்.