Job Notification : காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது தேர்வு வாரியம்.. முழு விவரம்..
இரண்டாம் நிலைக் காவலர், சிறப்பு காவல்படை, இரண்டாம் நிலை சிறைக் காவலர், தீயணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கான பொதுத்தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறித்துள்ளது.
இரண்டாம்நிலைக் காவலர், சிறப்பு காவல்படை, இரண்டாம் நிலை சிறைக் காவலர், தீயணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கான பொதுத்தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறித்துள்ளது.
பணியிடங்களின் எண்ணிக்கை:
காவல்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட துறைகளுக்கான பதவிகள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக நிரப்பப்படும். பொதுத்தேர்வு, நேர்முகத்தேர்வுகள் அறிவிக்கப்பட்டு அதன் பின்னர் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். கடந்த சில நாள்களுக்கு முன்பு காவல்துறை துணை ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வுகள் நடைபெற்ற நிலையில் இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் தீயணைப்புத்துறைக்கான பதவிகளுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 30.06.2022 தேதியிட்ட அறிவிப்பாணை எண் 02/2022 வழியாக இத்தேர்வுகளுக்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியின் கீழ் வரும் இந்த பதவிகள் முழுநேரப் பணியாகும். இதில் இரண்டாம் நிலைக் காவலர் மாவட்ட மற்றும் மாநகர ஆயுதப்படைக்கு பொது மற்றும் ஆண்கள் பிரிவில் 1526 பேரும், பெண்கள் 654 பேர் என மொத்தமாக 2180 பதவிகளுக்கான தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, இரண்டாம் நிலைக் காவலர் தமிழ்நாடு சிறப்புக் காவல்படைக்கு பொது மற்றும் ஆண்கள் பிரிவில் 1091 பணியிடங்களும், சிறை மற்றும் சீர்திருத்தத்துறையில் இரண்டாம் நிலை சிறைக்காவலர் பணியிடங்களுக்கு பொது மற்றும் ஆண்கள் பிரிவில் 153 பணியிடங்களும், பெண்கள் பிரிவில் 8 பணியிடங்களும் என மொத்தமாக 161 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் தீயணைப்பாளர் பணிகளுக்காக பொது மற்றும் ஆண்கள் பிரிவில் 120 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேற்கண்ட நான்கு பதவிகளுக்கு ஆண்கள் 2,890 பேர் பெண்கள் 662 பேர் என்று மொத்தமாக 3552 பதவிகளுக்கு பொதுத் தேர்வுகள் மூலம் பணியாளர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பம்:
இப்பதவிகளுக்கு வரும் ஜூலை 7ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 15.08.2022 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை https://www.tnusrb.tn.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக அனுப்பலாம்.
கல்வித்தகுதி & வயது வரம்பு:
இப்பதவிகளுக்கு கல்வித்தகுதியாக 10ம் வகுப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 18 வயது பூர்த்தியடைந்தவர்களும், 26 வயதுக்கு மிகாதவர்களும் விண்ணப்பிக்கலாம். பிற்படுத்தப்பட்டோர், இஸ்லாமியர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் 28வயது வரையும், பட்டியலின வகுப்பு, அருந்ததியர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் 31 வயது வரையும், மாற்று பாலினத்தவர்கள் 31 வயது வரையும், கைம்பெண்கள் 37 வயது வரையும், முன்னாள் ராணுவத்தினர் 37 வயது வரையும் விண்ணப்பிக்கலாம். இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் முன்னாள் ராணுவத்தினர், தேர்வு நாள் இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து 3 ஆண்டுகளுக்குள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
இட ஒதுக்கீடு:
இடஒதுக்கீட்டைப் பொருத்தவரை பொதுப்பிரிவில் 31% பேரும், பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 26.5% பேரும், இஸ்லாமியர்கள் 3.5% பேரும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 20% பேரும், பட்டியலினத்தவர்கள் 15% பேரும், அருந்ததியர்கள் பிரிவில் 3% பேரும், பழங்குடியினருக்கு 1%மும் இடஒதுக்கீடு வழங்கபட்டது. தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ள சாதிச்சான்றிதழே இடஒதுக்கீட்டுக்கு சான்றாக ஏற்றுக்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
தேர்வு நடைபெறும் முறை:
1.பகுதி 1- எழுத்துத் தேர்வு - தமிழ் மொழி தகுதித் தேர்வு
2.பகுதி -2 எழுத்துத் தேர்வு - முதன்மை எழுத்துத் தேர்வு
3. உடற் தேர்வு
4.சகிப்புத்தன்மை சோதனை
5.உடற் தகுதித் தேர்வு
6.சான்றிதழ் சரிபார்ப்பு
7.தேர்வு செய்யப்பட்ட இறுதி பட்டியல்