Karnataka Reservation Bill: கன்னடர்களுக்கு வேலையில் இடஒதுக்கீடு மசோதா; பின்வாங்கிய கர்நாடக அரசு!
பெரும் எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து, கன்னட மக்களுக்கு தனியார் நிறுவனங்களில் ஒடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறுத்தி வைப்பதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
கன்னட மக்களுக்கு தனியார் நிறுவனங்களில் ஒடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அந்த மசோதாவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
கவனமான பரிசீலனைக்குப் பிறகே அமல்படுத்தப்படும் என்று பெரிய மற்றும் நடுத்தரத் தொழில்கள்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்துள்ளார்.
அதேபோல கர்நாடக தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் எஸ் லாட், மாநிலத்தில் போதிய திறன்கள் இல்லாதபட்சத்தில், பிற மாநிலங்களிலும் இருந்தும் ஆட்கள் வேலைக்கு எடுத்துக்கொள்ளப்படுவர் என்று தெரிவித்துள்ளார்.
உள்ளூர் மக்களுக்கு வேலை
கர்நாடக மாநிலத்தில் தொழில்கள், தொழிற்சாலைகள் மற்றும் பிற நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கான கர்நாடக மாநில வேலைவாய்ப்பு மசோதா, 2024-க்கு அம்மாநில கேபினட் அமைச்சர்கள் குழு அண்மையில் அனுமதி வழங்கியது.
இந்த மசோதாவின்படி, அங்குள்ள தனியார் நிறுவனங்களில் சி, டி பிரிவு பணியிடங்களில் கன்னடர்களுக்கே 100% வேலை வழங்கப்பட வேண்டும் என்றும் இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. இந்த மசோதாவை மீறும் தனியார் நிறுவனங்களுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட உள்ளதாகக் கூறப்பட்டது.
எனினும் இதற்குத் தொழிலதிபர்கள், பயோகான் நிர்வாகத் தலைவர், ஐடி நிறுவனங்களின் சங்கமான நாஸ்காம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். ‘’உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்ற அரசின் முனைப்பு, தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் கர்நாடகாவின் திறனை பாதித்துவிடக் கூடாது’’ என்று கருத்துத் தெரிவித்து இருந்தனர்.
பதிவுகளை நீக்கிய முதல்வர் சித்தராமையா
இதற்கிடையே கர்நாடக தனியார் நிறுவனங்களில் சி, டி பிரிவு பணியிடங்களில் கன்னடர்களுக்கே 100% வேலை குறித்து கன்னட முதல்வர் சித்தராமையா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். எனினும் இது தவறான தகவல் என அவர் பதிவுகளை நீக்கினார். பேசுபொருளானது.
எனினும் பிறகு வெளியான தகவலின்படி, தொழிற்சாலைகள், ஃபேக்டரிகள் மற்றும் பிற நிறுவனங்களில் மேலாண்மைப் பதவிகளுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடும் மேலாண்மை அல்லாத பதவிகளுக்கு 70 சதவீத ஒதுக்கீடும் கன்னடர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவனமான பரிசீலனைக்குப் பிறகே அமல்
கன்னட மக்களுக்கு வேலையில் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா, கவனமான பரிசீலனைக்குப் பிறகே அமல்படுத்தப்படும் என்று பெரிய மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்துள்ளார்.
அதேபோல கர்நாடக தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் எஸ் லாட், மாநிலத்தில் போதிய திறன்கள் இல்லாதபட்சத்தில், பிற மாநிலங்களிலும் இருந்தும் ஆட்கள் வேலைக்கு எடுத்துக்கொள்ளப்படுவர் என்று தெரிவித்துள்ளார். இதனால் கன்னடர்களுக்கு வேலையில் இட ஒதுக்கீடு மசோதாவில் அரசு பின்வாங்குகிறதா என்று கேள்வி எழுந்துள்ளது.