NCS portal: தேசிய வேலைவாய்ப்பு தளத்தில் 4.82 லட்சம் வேலைகள்: விண்ணப்பிப்பது எப்படி?- முழு விவரம்
தேசிய வேலைவாய்ப்பு இணையதளத்தில் காலியாக உள்ள வேலைவாய்ப்பின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவு 4.82 லட்சமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய வேலைவாய்ப்பு இணையதளத்தில் (National Career Service (NCS)) காலியாக உள்ள வேலைவாய்ப்பின் எண்ணிக்கை இதுவரை இல்லதா அளவு 4.82 லட்சமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் ஏராளமானோருக்கு பயனளித்திடும் நோக்கத்தில் தேசிய வேலைவாய்ப்பு வலைதளம் உருவாக்கப்பட்டது. இதனை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015- ஆம் ஆண்டு ஜுலை மாதம் தொடங்கிவைத்தார்.
தகுதி வாய்ந்த வேலை தேடக்கூடியவர்களை, அவர்களுக்கு பொருத்தமான வேலைவாய்ப்பை அளிக்கக் கூடியவர்களுடன் இணைத்து உதவும் வகையில், தேசிய வேலைவாய்ப்பு சேவை இணையதளம் செயல்பட்டு வருகிறது. அத்துடன் வேலைவாய்ப்பு குறித்து கலந்தாய்வு, தொழில் வழிகாட்டுதல் மற்றும் வேலைவாய்ப்பு திறன் பயிற்சி ஆகியவற்றின் மூலம் வேலை தேடுவோரின் தனித்தன்மையை மேம்படுத்தவும், இந்த இணையதளம் உதவுகிறது.
இந்நிலையில், செப்டம்பர் 26, 2022- இன் படி, தேசிய வேலைவாய்ப்பு சேவை இணையதளத்தில் இடம்பெற்றுள்ள காலி பணியிடங்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவாக, 4,82,264 ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக, கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்த எண்ணிக்கை 3,20,917 என்ற அதிகளவாக இருந்தது.
தேசிய வேலைவாய்ப்பு சேவை இணையதளம் தொடங்கப்பட்டதிலிருந்து 1.09 கோடிக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் பற்றிய தகவல்கள் இந்தப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. நடப்பாண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் 26 வரை, வேலை தேடுவோரின் எண்ணிக்கை 25 லட்சத்தை கடந்துள்ளது.
தேசிய இணையதள வலைதளத்தில் இதுவரை நிதி மற்றும் காப்பீட்டு துறை, உணவு வழங்கல் துறை, ஹோட்டல், கேட்டரிங், மருத்துவம் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் உள்ள காலிபணியிடங்கள் குறித்து வேலைவாய்ப்பு அறிவிப்புகள் அதிகமாக இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
2022-2023 ஆம் ஆண்டு வேலைக்காக தெரிவு செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்தாண்டு 2021 முதல் செப்டம்பர் மாதங்கள் வரை வேலைக்கு விண்ணப்பித்ததற்காக முதல் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 90 ஆயிரத்து 335 ஆக இருந்தது. இந்தாண்டு செப்டம்பர் மாதம் வரை பணிக்காக தேர்ந்தெடுக்கப்படுவர்களின் எண்ணிக்கை 25 லட்சமாக அதிகரித்துள்ளது.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தினர் உதயம் இணையதளத்தில் தங்கள் நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்களை பதிவு செய்கின்றனர். தேசிய வேலைவாய்ப்பு சேவை மற்றும் உதயம் இணையதளம் இணைப்பு மூலம் இதுவரை 39,000க்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தினர் தேசிய வேலைவாய்ப்பு இணைய தளத்தில் பதிவு செய்துள்ளனர். இ-ஷ்ரம் இணையதளத்தில் பதிவு செய்துள்ள அமைப்புச்சாரா தொழிலாளர்கள் 9.72 லட்சம் பேர் தேசிய வேலைவாய்ப்பு சேவை இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்.
Skill India Portal (SIP) என்ற இணையதளம் மூலம் இளைஞர்கள் சான்றிதழ் உடன் கூடிய திறன் மேம்பாட்டு படிப்புகளை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://www.ncs.gov.in/ என்ற இணையதள முகவரி மூலம் வேலை தேடி வருவோர் பல்வேறு துறைகளில் உள்ள ஏராளமான வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்து தெரிந்து கொள்ள https://www.ncs.gov.in/Pages/Search.aspx?DA=6gqhwycyVHE%3D என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
அரசு துறையில் உள்ள வேலைவாய்ப்பு குறித்து தெரிந்துகொள்ள https://www.ncs.gov.in/job-seeker/Pages/Search.aspx?OT=lp9dNs3%2FpQ%2FJ1WtoCNHP9Q%3D%3D என்ற லிங்கில் காணலாம்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வழங்கும் ”DigiSaksham” https://www.ncs.gov.in/Pages/default.aspx என்ற லிங்கை கிளிக் செய்து, பைதான், ஜாவா, உள்ளிட்ட தொழில்நுட்ப கோர்டிங் மற்றும் எக்ஸல் உள்ளிட்டவற்றிற்கான பயிற்சியை பெறலாம்.