![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Indian gooseberry : நெல்லிக்காய் உண்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன? லிஸ்ட் இதோ!
நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அகற்றி, ஆரோக்கியமான சருமத்தை வழங்குகிறது.
![Indian gooseberry : நெல்லிக்காய் உண்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன? லிஸ்ட் இதோ! The Indian gooseberry is just the magic pill you need to boost your overall health. Indian gooseberry : நெல்லிக்காய் உண்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன? லிஸ்ட் இதோ!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/08/5ab5128743028d8888713c02a526147d1667845975762224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நீண்ட ஆயுளையும் உடல் பலத்தையும் தரக்கூடிய நெல்லிக்காயானது, இந்திய மக்களிடையே பயன்பாட்டில் நிறைந்து காணப்படுகிறது தேன் நெல்லிக்காய்,நெல்லிக்காய் ஊறுகாய் மற்றும் பச்சையாக நெல்லிக்காயை உண்பது என, நெல்லிக்காயின் பயன்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
தகடூரை ஆண்ட குறுநில மன்னன் அதியமான்,அவருக்கு கிடைத்த அரிய நெல்லிக்கனியை உண்ணாமல், அவ்வையாருக்கு தந்தார்.ஏனெனில்,இந்த நெல்லிக்கனியை உண்டு தான் நீண்ட காலம் வாழ்வதை காட்டிலும், ஔவையார் உண்ணும் போது, தமிழ் நீண்ட காலம் வாழும் என்று எண்ணினார். இப்படியாக நெல்லிக்காயின் பலன்களை தமிழர்கள் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகவே உணர்ந்திருந்தனர்.
நெல்லிக்காயில் கால்சியம் சத்து நிறைய இருப்பதால், எலும்புகள் உறுதியாகும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவைக்கும். ரத்த சோகைக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்தாக பார்க்கப்படுகிறது. நெல்லிக்காய் குளிர்ச்சியான காய் என்பதால்,இதை தினமும் சாப்பிடுவதால் ஜலதோஷம் பிடிக்கும் என்று பரவலான நம்பிக்கை இருக்கிறது. கண்டிப்பாக அப்படி இல்லை.ஏனெனில் நெல்லிக்காய் சிறந்த நோய் எதிர்ப்பு உணவாகும்.
மேலும்,வைரஸ் மூலம் பரவும் நோய்களை எதிர்க்கும் தன்மை நெல்லிக்காய்க்கு உண்டு.
ஒரு நெல்லிக்காயில் 600 மில்லி கிராம் வைட்டமின் சி இருக்கிறது. நம் நாட்டில் இரும்பு சத்துக் குறைபாடு உடையவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். வைட்டமின் சி அதிகமாக நெல்லிக்காயில் இருப்பதால்,காய்கறியில் இருக்கும் இரும்புச் சத்தை ஈர்த்து உடலுக்குக் கொடுக்கும்.
மேலும், நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், இயற்கையாகவே முகப்பருவை உண்டாக்கும் நச்சுகள் மற்றும் பாக்டீரியாக்களை உடலில் இருந்து அகற்றி, ஆரோக்கியமான மற்றும் தெளிவான சருமத்தை வழங்குகிறது.
புதினா,இஞ்சி மற்றும் நெல்லிக்காயை கலந்து சாப்பிட்டு வருவதன் மூலம் வயிற்றுக் கோளாறுகள் சரியாகும்.
நெல்லிக்காயைத் துவையல் செய்தும் சாப்பிடலாம். சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் போன்றவற்றைச் சேர்த்து நெல்லிக்காய் உடன் துவையல் செய்து சாப்பிட்டால், ரத்தத்தில் கொழுப்பின் அளவு சீராகும். கொழுப்பைக் கட்டுப்படுத்துவதால் இதய சம்பந்தமான நோய்கள் நம்மை அண்டாது.
உடல் பருமனால் அவதிப்படுபவர்கள், தினமும் நெல்லிக்காயுடன்,சிறிதளவு இஞ்சி சாறையும் சேர்த்து சாப்பிட்டு வர,தேவையில்லாத கொழுப்புகள் குறைந்து,உடல் சீராகும். நெல்லிக்காயை தினமும் உண்டு வர, நீரிழிவு கட்டுக்குள் வரும் என நம்பப்படுகிறது.
நெல்லிக்காய் சிறிதளவு, துவர்ப்புத் தன்மை உடையது என்பதால், அதை வெறும் வாயில் மென்று சாப்பிடுவது, சிலருக்கு ஒத்து வராது. மேலும் சில குழந்தைகளுக்கு ஏற்றதாக இருக்காது. அவ்வாறான நேரங்களில், நெல்லிக்காயை,தயிர் சாதம்,கேரட் சாதம் மற்றும் பிரின்ஜி சாதம் ஆகியவற்றுடன் தொடுகறியாக, சாப்பிடலாம். மேலும் பச்சையாக சாப்பிட முடியாதவர்கள், நெல்லிக்காயை வெறும் தண்ணீரில் நன்றாக அரைத்து ஜூஸாக செய்து சாப்பிடலாம்.
நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வர,நாள்பட்ட மலச்சிக்கல் மற்றும் செரிமான கோளாறு,காலையில் எழுந்திருக்கும் சமயங்களில் வயிறு உப்புசமாக இருப்பது போன்ற, பிரச்சனைகள் குணமாகின்றது.
உடம்பில் இருக்கிற ரணங்களை சீக்கிரமாக ஆற்றும். வயிற்றுப் புண்களைக் குணமாக்கும்.
நெல்லிக்காயில் உள்ள பாலிபினால், டேனின், ஃப்ளேவினாய்ட்ஸ் போன்றவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்திற்கு மிகவும் இன்றியமையாததாகும்.
மாதவிடாய் காலத்தில், அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்படும் போது, தினமும் மூன்று முறை சிறிது நெல்லிக்காய் ஜூஸையும், கனிந்த வாழைப்பழத்தையும் சாப்பிட்டால், அதிகப்படியான ரத்தப்போக்கு சரியாகிறது.
முகம் நன்கு அழகாக பொலிவோடு இருப்பதற்கு, தினமும் காலையில் நெல்லிக்காய் சாற்றுடன், சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும். உடலில் இரத்தம் குறைவினால் ஏற்படும் ஞாபக மறதியைத் தடுக்க, தினமும் நெல்லிக்காய் சாற்றை குடித்தால், இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகமாகி, ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.
இவ்வாறு, உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிரம்பப்பெற்ற,நெல்லிக்காயை அனுதினமும் உண்டு,பலன் பெறுவோம்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)