Corona Regulations: 2000-ஐ எட்டிய தொற்று எண்ணிக்கை... ஆலோசிக்கும் முதல்வர்.. வருகிறதா அதிரடி கொரோனா கட்டுப்பாடுகள்?
தமிழ்நாட்டில் ஒருநாள் கொரோனா பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்திற்கு மேல் அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் கட்டுப்பாட்டில் இருந்து வந்த கொரோனா தொற்று பரவல் கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் 2,069 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 2வது வாரத்திற்கு பிறகு தற்போது மீண்டும் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2000-ஐ தாண்டியுள்ளது. மேலும் தற்போது தமிழ்நாட்டில் தொற்று பாதிப்பு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 11,000-ஐ தாண்டியுள்ளது.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையில் கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்று கருதப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு மேலும் சில கட்டுப்பாட்டுகள் விதிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவுடன் பொது இடங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் சிகிச்சை பெறுவதற்கு மருத்துவமனைகளின் தயார்நிலை குறித்தும் முதலமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்வார் என்று கருதப்படுகிறது. அத்துடன் மருத்துவ வசதிகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக நேற்று பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருந்தது. அத்துடன் பள்ளி மாணவர்கள் சமூக இடைவெளி கடைபிடிப்பது மற்றும் உடல் வெப்ப பரிசோதனை ஆகியவற்றை நிச்சயம் பின்பற்ற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருந்தது. தமிழ்நாட்டில் தற்போது அதிகரித்து வரும் கொரோனா எண்ணிக்கையில் 43% சென்னையில் தான் பதிவாகி வருகிறது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 909 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
சென்னைக்கு அடுத்தப்படியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 352 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எனினும் கொரோனா காரணமாக தமிழ்நாட்டில் தற்போது வரை உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. தமிழ்நாட்டில் தற்போது வரை 34,75,185 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. அவற்றில் 34,26,065 பேர் நோய் பாதிப்பிலிருந்து குணம் அடைந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்