Social Distancing a Joke? | ஆடி தள்ளுபடியால் சென்னை தியாகராய நகரில் குவிந்த மக்கள்.. காற்றில் பறந்த கொரோனா விதிகள்!
செப்டம்பர் மாதத்தில் கொரோனா மூன்றாம் அலை உச்சத்தை அடையலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் தி.நகரில் ஆடி சிறப்பு விற்பனைக்காக கூட்டம் அலைமோதியது
ஆடி மாத பிறப்பு மற்றும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடைகள் வாங்குவதற்காக வார இறுதிநாளான இன்று தி.நகர் ரங்கநாதன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் அதிகப்படியான மக்கள் கூட்டம் அலைமோதியது. இதன் காரணமாக தியாகராய நகரில் உள்ள பல்வேறு வணிக நிறுவனங்களிலும் சாலைகளிலும் தனிமனித இடைவெளியானது கடைப்பிடிக்கப்படாமலும், கொரோனா தொற்று விதிமுறைகளை பின்பற்றாமலும் மக்கள் ஷாப்பிங் செய்தது கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்குமோ என்ற கேள்வியை சென்னைவாசிகள் மத்தியில் எழுப்பியுள்ளது.
ஏப்ரல் முதல்வாரத்தில் தொடங்கி மே மாதத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையானக்து உச்சம் அடைந்தது, வரும் ஆகஸ்ட் இரண்டாம் வாரம் தொடங்கி செப்டம்பர் மாதத்தில் கொரோனா தொற்றின் மூன்றாம் அலை உச்சமடையும் என கரக்பூர் ஐஐடி மற்றும் எஸ்.பி.ஐ ஆகிய அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் கொரோனா பொதுமுடக்கத்திற்காக தளர்வுகளை அளிப்பதில் தமிழ்நாடு அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. ஆடி மாதம் பிறந்துள்ள நிலையில் ஆடை விற்பனை நிறுவனங்கள் ஆடித்தள்ளூபடி மூலம் விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது, இதனால் தி.நகரில் உஸ்மான் சாலை, ரங்கநாதன் தெரு, பாண்டிபஜார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு ஜவுளி மற்றும் நகைக்கடைகளிலும் பல்வேறு உணவகங்களிலும் தனிமனித இடைவெளி இன்றி அதிகப்படியான மக்கள் கூடினர்.
தி.நகரில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்பட்டுத்துவதற்காக சென்னை மாநகராட்சி சார்பாக 7 சுகாதார அலுவலர்களுடன் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 50 சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து நெரிசல் ஏதும் ஏற்படாமல் தடுப்பதற்காக போக்குவரத்து காவலர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தி.நகர், புரைசைவாக்கம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் முகக்கவசம் அணியாமலும் ஷாப்பிங் செய்யும் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களிடம் இருந்து இதுவரை 3.35 கோடி ரூபாய் அபராதத்தை சென்னை மாநகராட்சி வசூலித்துள்ளது. இந்த நிலையிலும் விதிகளை பின்பற்றாமல் ஆடைகள், அணிகலன்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்காக தி.நகரில் மக்கள் தொடர்ந்து குவிந்தவண்ணம் உள்ளனர்.
சென்னையில் கொரோனா தொற்று காரணமாக 1,632 பேர் தற்போது சிகிச்சை பெற்றுவரும் நிலையில் இதுவரை கொரோனா தொற்றால் 8292 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஜூன் மாதத்தின் இறுதி வாரத்தில் இருந்து கொரோனா இரண்டாம் அலைக்காக போடப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் படிப்படியாக தமிழக அரசால் தளர்த்தப்பட்டு வரும் நிலையில் மீண்டும் தனிமனித இடைவெளியின்றி பொதுமக்கள் ஷாப்பிங் செய்யத் தொடங்கி உள்ளது. பல்வேறு தரப்பினரிடையே கொரோனா மூன்றாவது அலை குறித்த பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் காலை வேளைகளில் இறைச்சி கடைகளிலும் மாலை நேரங்களில் ஜவுளி, நகைகள் மற்றும் உணவகங்களிலும் அதிகப்படியான மக்கள் கூட்டம் வருவது தொடர்வதால் இதனை முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது