அதிகரிக்கும் மூன்றாம் அலை அச்சம் : மீண்டும் தடுப்பூசி தட்டுப்பாட்டில் தமிழ்நாடு!
டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் பரவிவரும் நிலையில், தமிழ்நாட்டில் தடுப்பூசிகள் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பது, ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வரும் மக்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா வைரசின் தினசரி பாதிப்பு கடந்த மே மாதம் 31 ஆயிரம் என்ற அளவில் உச்சத்தில் இருந்தது. ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளால் நேற்றைய நிலவரப்படி கொரோனா தினசரி பாதிப்பு 4 ஆயிரத்து 800 என்ற அளவில் குறைந்துள்ளது. கடந்த மே மாதம் 7-ந் தேதி பதவியேற்ற தி.மு.க. அரசு தமிழ்நாட்டில் மக்கள் தடுப்பூசி செலுத்துவதற்கு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்காரணமாக, தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு மாதமாக பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். ஆனால், தமிழகத்திற்கு போதிய அளவு தடுப்பூசிகள் மத்திய அரசால் ஒதுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடக்கம் முதல் தமிழக அரசால் முன்வைக்கப்படுகிறது. நேற்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் தமிழகத்தில் கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் இன்றுடன் முடிந்துவிடும் என்று கூறியிருந்தார்.
இதுதொடர்பாக, மதியம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியிருந்தார். அவர் எழுதிய கடிதத்தில், தடுப்பூசிகள் கிடைப்பது கடந்த சில வாரங்களில், தடுப்பூசி போடும் இயக்கத்திற்கு முக்கியத் தடையாக உள்ளது. அவசியமான இந்த தடுப்பூசி ஆயிரம் மக்கள்தொகை கொண்ட அளவீட்டைப் பொறுத்தவரை, எங்களுக்கு ஒதுக்கப்பட்டவை நாட்டின் மற்ற மாநிலங்களின் அளவை விட மிகக்குறைவான ஒன்றாக உள்ளது.
கடந்த காலங்களில் போதிய ஒதுக்கீட்டைச் சரிசெய்ய 1 கோடி டோஸ் தடுப்பூசிகள் ஒதுக்குமாறு நான் கடிதம் எழுதியிருந்தேன். ஆனால், அது நிறைவேற்றப்படவில்லை. இந்த விவகாரத்தில் தாங்கள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்று முதல்வர் எழுதியுள்ளார். மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில், தடுப்பூசிக் கொள்கையின்படி மத்திய அரசு 75 சதவீத தடுப்பூசிகளை வாங்குகிறது. மீதமுள்ளவை தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளுக்கு இந்த 25 சதவீதம் ஒதுக்கீடு என்பது உண்மையான அளவீடுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் அதிகளவில் உள்ளது என்றும், மாநிலங்களுக்கு தேவையான அளவு தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், தற்போதைய ஒதுக்கீடான 75:25 என்ற அளவை 90:10 என்ற அளவில் மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் அரசுத் தரப்பில் 1.43 கோடி டோஸ்கள் முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் தனியார் மருத்துவமனைகள் 6.5 லட்சம் அளவை மட்டுமே பயன்படுத்தியுள்ளது. அதாவது, தனியார் மருத்துவமனைகளில் 4.5 சதவீத அளவை மட்டுமே பயன்படுத்தியுள்ளது. இந்த ஜூன் மாதத்தில் கூட மாநிலத்தால் நிர்வாகிக்கப்படும் 43.5 லட்சம் டோஸ்களில் தனியார் நிறுவனங்கள் 10 சதவீத ஒதுக்கீடாக 4.5 லட்சம் டோஸ் மட்டுமே பயன்படுத்தியுளளது. மேலும், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழ்நாட்டில் தடுப்பூசி நிலவரம் மிகவும் வேதனை அளிக்கும் விதத்தில் இருப்பாக கூறினார். அவர் பேசும்போது, தடுப்பூசி இல்லை என்கிற பலகை ஆங்காங்கே தொங்கிக் கொண்டிருக்கும் நிலை மிகவும் வருத்தமாக உள்ளது. கிராமப்புறம் மட்டுமல்ல மலைவாழ் மக்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வமாக உள்ளனர். ஆனால், தடுப்பூசி இல்லை என்பது ஒரு வருத்தமான நிகழ்வாக உள்ளது. தடுப்பூசி இல்லை என காலை முதல் செய்திகள் வருகின்றது. மதியத்திற்கு மேல் தடுப்பூசி தட்டுப்பாடு நிலைதான் என்று வருத்தத்துடன் பேசினார்.
இதுவரை தமிழகத்திற்கு வந்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை 1 கோடியே 44 லட்சத்து 39 ஆயிரத்து 940 ஆகும். நாம் இதுவரை செலுத்திய தடுப்பூசிகள் 1 கோடியே 41 லட்சத்து 50 ஆயிரத்து 749 ஆகும். நேற்றைய நிலவரப்படி கையிருப்பில் 2 லட்சத்து 7 ஆயிரத்து 345 இருந்தது. தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக மாநிலத்தின் தலைநகரான சென்னையில் மட்டும் 45 இடங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தப்பட்டது. தடுப்பூசிகள் பற்றாக்குறை உள்ளதாக முதல்வர், சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோர் கூறியிருந்த நிலையில், தமிழ்நாட்டிற்கு நேற்று மாலை 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தடைந்தது. அந்த தடுப்பூசிகள் உடனடியாக மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டது.
டெல்டா பிளஸ் கொரோனா வைரசின் பாதிப்பு நாடு முழுவதும் 12 மாநிலங்களில் பரவி வரும் நிலையில், தடுப்பூசிகள் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பது ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வரும் பொதுமக்களுக்கு மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பொதுப்போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ள சூழலில், தடுப்பூசிகள் செலுத்துவதில் மந்த நிலை ஏற்பட்டால் மீண்டும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கும் நிலை ஏற்படும் என்று பலரும் அச்சம் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக தடுப்பூசி எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )