Corona: சீனாவில் இருந்து சேலம் திரும்பிய ஜவுளி தொழிலதிபருக்கு கொரோனா உறுதி
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த ஜவுளி தொழிலதிபர் மற்றும் அவரது மனைவிக்கு கோவை விமான நிலையத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று அனைத்து உலக நாடுகளிலும் பெரும் பாதிப்பு மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்பொழுது சீனா, ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமிக்ரான் பி.எஃப் 7 வகை கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும், சீனா, ஹாங்காங், ஜப்பான், தாய்லாந்து, தென்கொரியாவில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் சீனாவிலிருந்து சிங்கப்பூர் வழியாக நேற்று கோவை விமான நிலையத்திற்கு மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வந்த சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த ஜவுளி தொழிலதிபர் மற்றும் அவரது மனைவிக்கு கோவை விமான நிலையத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மாதிரியானது பி.எஃப் 7 வகையானதா என்பதைக் கண்டறிய மரபணு சோதனைக்காக சென்னையில் உள்ள மாநில சுகாதார ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஜவுளி தொழிலதிபர் தற்போது நல்ல உடல்நிலையுடன் இருப்பதால் அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவரது குடும்ப உறுப்பினர்கள் யாருக்கும் நோய் அறிகுறியுடன் இல்லை. இருப்பினும் அனைவரும் மருத்துவத் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். மகுடஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சார்ந்த மருத்துவக் குழு கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு தினமும் காலை மற்றும் மாலை என இரு வேளையும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கொரோனா பாதிக்கப்பட்ட தொழிலதிபர் வசிக்கும் வீடு அருகில் உள்ள பகுதியில் கோவிட் நோய் அறிகுறிகள் கண்ட நபர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதிப்புக்குள்ளான நபர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கொரோனா நோய்த் தொற்று குறித்து எவ்வித அச்சமும் கொள்ள வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதி முழுவதும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு நோய் பரவாமல் இருப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகள் சேலம் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. பாதிக்கப்பட்ட ஜவுளி தொழிலதிபர் குடும்ப உறுப்பினர்களுக்குக் கொரோனா நோய்க்கான அறிகுறிகள் உள்ளனவா என தினமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. கிராமம் முழுவதும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஒலிப்பெருக்கி மூலம் நலக்கல்வி அளிக்கப்படுகிறது என சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
மேலும், சேலம் மாவட்டத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் 24 மணி நேர கொரோனா பரிசோதனை நிலையத்தில் நோயாளிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வீடு திரும்பும் மக்கள் கொரோனா பரிசோதனை எடுத்துக்கொண்டு, பரிசோதனை முடிவு வரும் வரை தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் அறிவுரை வழங்கி வருகின்றனர். தற்போது வரத் தொடங்கியுள்ள கொரோனா ஆனது அதிகம் பரவும் தன்மையைக் கொண்டிருந்தாலும், உயிருக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இருப்பினும் முகக் கவசம் அணிவது, சமூக இடைவேளையை போன்றவற்றை மக்கள் கடைபிடிக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )