(Source: ECI/ABP News/ABP Majha)
Dandruff : குளிர்கால பொடுகுத் தொல்லையா? தலை வறண்டு போகுதா? 7 வழிமுறைகள் இதோ..
அதிகப்படியான ஈரப்பதம், மன அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள் அல்லது தவறான உணவு பழக்கம், விட்டமின் குறைபாடுகள் காரணமாக பொடுகு தொல்லை ஏற்படுகிறது.
குளிர்காலத்தில் அதிகப்படியான வறட்சி காரணமாக தலையில் பொடுகு தொல்லை ஏற்படுகிறது. குளிர்காலத்தில் ஏற்படும் இந்த வறட்சியை தடுப்பதற்காகவே தலையில் இயற்கையாகவே எண்ணெய்த்தன்மை உருவாவதாக கூறப்படுகிறது.
குளிர்காலத்தில், முடி மற்றும் தோல் வறட்சியை சரிசெய்ய அவை அதிக எண்ணெயை உற்பத்தி செய்கின்றன. இதனால் பொடுகை உண்டாக்கும் ஈஸ்ட் இன்னும் அதிகமாக உற்பத்தியாவதாக கூறப்படுகின்றது. தலையில் வைக்கும் எண்ணையானது வறட்சியை எதிர்த்துப் போராடினாலும், அது குளிர்காலத்தில் அதிகப்படியான பொடுகு ஏற்படுவதற்கும் காரணமாக அமைகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பொதுவாக குளிர்காலத்தில், காற்று வறண்டு, ஈரப்பதம் இல்லாமல் இருக்கும். இவ்வாறு வறட்சியான காற்று உடலில் படும்போது சருமம் மற்றும் தலையில் வறட்சி ஏற்பட தொடங்குகிறது. இதனால் தலையில் அதிகப்படியான பொடுகு ஏற்பட காரணமாக அமைகிறது. மலாசீசியா என்ற இயற்கையாகவே உச்சந்தலையில் காணப்படும் நுண்ணுயிரியின் வளர்ச்சி அதிகரிக்கும்போது தலையில் பொடுகு தொல்லை அதிகமாகிறது. அதிகப்படியான ஈரப்பதம், மன அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள் அல்லது தவறான உணவு பழக்கம், விட்டமின் குறைபாடுகள் காரணமாக பொடுகு தொல்லை ஏற்படுவதாக கூறப்படுகிறது.
பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட உதவும் சில வழிமுறைகளை பார்க்கலாம்:
1. நன்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டுமென மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். தினம் தோறும் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் பழங்கள், காய்கறிகள் என இயற்கை முறையிலான உணவுகளை உண்ணுவதே சிறந்தது என கருதப்படுகிறது .அதிக அளவிலான விட்டமின்கள் தாதுக்கள் ,தலையில் பொடுகு ஏற்படுவதை கட்டுப்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதிலும் துத்தநாகம், ஒமேகா 3, மற்றும் வைட்டமின் பி அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் சிறப்பு என வலியுறுத்தப்படுகிறது.
2) குளிர் காலத்தில் பொடுகு தொல்லையை தவிர்க்க அதிகளவான சர்க்கரை உணவை குறைத்துக் கொள்ளுமாறு மருத்துவர்கள் கூறுகின்றனர்.
3) அயர்னிங் மெஷின் மற்றும் ஹேர் ட்ரையர்களில் இருந்து பெறப்படும் நேரடி வெப்பத்தை தலைக்கு வழங்குவதை தவிர்க்குமாறு வலியுறுத்தப்படுகிறது.
4) அதிக தண்ணீர் குடிப்பது சிறந்தது என கருதப்படுகிறது. குளிர்காலத்தில் சருமம் மற்றும் கூந்தலை வறட்சியில் இருந்து பாதுகாக்க தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும் என ஆய்வுகள் கூறுகின்றன.
5. தலைக்கு அவ்வப்போது எண்ணெய் வைத்து நன்கு தலைமுடியின் வேர்க்கால்களை மசாஜ் செய்வதால் ரத்த ஓட்டம் சீராக இருக்கும் எனவும், பொடுகு தொல்லையிலிருந்து விடுபட உதவும் என கூறப்படுகிறது.
6. நாள்தோறும் உடற்பயிற்சி செய்யும் போது தலையை கட்டாயமாக சுத்தம் செய்யுமாறு வலியுறுத்தப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தலை வியர்க்கும் போதும் அதனை துணி வைத்து சுத்தம் செய்வது சிறந்தது.
7. குளிர் காலத்தில் ஏற்படும் பொடுகு தொல்லையை தவிர்க்க துத்தநாக பைரிதியோன், செலினியம் சல்பைட் அல்லது 2% கெட்டோகனசோல் கொண்ட ஷாம்புகளைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.
ஆகவே குளிர்காலத்தில் ஏற்படும் பொடுகு தொல்லையை தவிர்க்க வீட்டில் இயற்கை முறையிலான மருத்துவ முறைகளையும் செய்வது சிறப்புக்குறியதாகும். அதேபோல் தலைமுடிக்கு ஏற்றவாறும் ,உடலின் தன்மைக்கு ஏற்றவாறும், அதிக குளிர், அதிக சூடு இல்லாதவாறு பராமரிப்புகளை மேற்கொள்வது மிகவும் சிறந்தது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )