Fact Check: "இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு.. ஆனா, வெளிப்படுத்த முடியாது" ஆர்.எஸ்.எஸ். தலைவர் அப்படி பேசினாரா?
ஆர்எஸ்எஸ், இடஒதுக்கீட்டிற்கு எதிரானது என்றும் இதைப் பற்றி வெளிப்படையாக சொல்ல முடியாது என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
"இடஒதுக்கீட்டை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு எதிர்க்கிறது. ஆனால், இந்த நிலைபாட்டை வெளிப்படையாக சொல்ல முடியாது" என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் மோகன் பகவத் பேசியது பின்வருமாறு, "சங்கத்தினர் (ஆர்.எஸ்.எஸ்) வெளியில் நன்றாக பேசுவார்கள். ஆனால், தங்களுக்கு உள்ளே பேசி கொள்ளும்போது இட ஒதுக்கீட்டை எதிர்ப்போம். இதை, வெளியில் சொல்ல முடியாது" என இந்தியில் பேசியுள்ளார். மோகன் பகவத் இப்படி பேசும் வீடியோக்கள், சமூக வலைதளங்களில் பதிவுகளாக பகிரப்பட்டன. பதிவில் குறிப்பிட்டது உண்மையா? என ஆய்வு செய்தோம்.
மோகன் பகவத் பேசியது உண்மையா?
அப்போதுதான், இந்த வீடியோ எடிட் செய்யப்பட்டது என்பது தெரிய வந்தது. கடந்த 2024ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி, ஹைதராபாத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் மோகன் பகவத் பேசிய காட்சிகள் வைரல் வீடியோவில் இடம்பெற்றிருந்தன.
கூட்டத்தில் பேசிய மோகன் பகவத், "ஆர்எஸ்எஸ் இடஒதுக்கீட்டிற்கு எதிரானது என்றும், இந்த நிலைப்பாட்டை எங்களால் வெளிப்படையாக தெரிவிக்க முடியாது என்று கூறுவது போல் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அது பொய்யான வீடியோ.
இடஒதுக்கீடு அமல்படுத்திய காலத்திலிருந்தே அரசியலமைப்பின்படி அனைத்து இடஒதுக்கீடுகளையும் ஆர்எஸ்எஸ் ஆதரித்து வருகிறது. பாகுபாடு இருக்கும் வரை அதைத் தொடர்ந்து ஆதரிப்போம்" என்றார். எனவே, வைரலாகும் பதிவில் குறிப்பிட்டிருப்பது பொய்யான தகவல்.
பொய்யான வீடியோ என கண்டுபிடித்தது எப்படி?
வைரலான வீடியோவை கவனமாகக் கவனித்ததில் மேல் வலது மூலையில் ANI செய்தி நிறுவனத்தின் லோகோ இருப்பதை கண்டறிந்தோம். இதை அடிப்படையாக வைத்து சம்பந்தப்பட்ட முக்கிய வார்த்தைகளை போட்டு கூகுளில் தேடினோம்.
அப்போது, வைரலான வீடியோவின் முழு நீள வீடியோ கிடைத்தது. கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோ பதிவேற்றப்பட்டது தெரிய வந்தது.
அந்த வீீடியோவின் கேப்ஷனில், "ஹைதராபாத், தெலங்கானா: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறுகையில், ஆர்எஸ்எஸ் இடஒதுக்கீட்டிற்கு எதிரானது என்று ஒரு வீடியோ பரப்பப்படுகிறது. இதைப் பற்றி நாங்கள் வெளிப்படையாக சொல்ல முடியாது என வீடியோவில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், இது முற்றிலும் தவறானது. தொடக்கத்தில் இருந்தே அரசியல் சட்டப்படி அனைத்து இடஒதுக்கீடுகளையும் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) ஆதரித்து வருகிறது" என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவானது எடிட் செய்யப்பட்டு, தவறான கூற்றுடன் பரப்பப்படுகிறது.
பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக Factly என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை சற்றே திருத்தி எழுதியுள்ளது.