Fact Check: சென்னையில் போலீசாரை தாக்கிய இளைஞர்கள், ஆந்திராவில் வெடித்த சர்ச்சை - உண்மை என்ன?
Fact Check: சென்னையில் போலீசாரை இளைஞர்கள் தாக்கிய வீடியோ, ஆந்திர அரசியலில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Fact Check: சென்னையில் போலீசாரை இளைஞர்கள் தாக்கிய வீடியோ, ஆந்திராவில் வைரலாவதற்கான காரணம் என்ன என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
இணையத்தில் பரவும் வீடியோ..!
டிவிட்டர் பயனாளி ஒருவர், காவலரை இளைஞர்கள் தாக்கும் விடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். மேலும், இந்த சம்பவம் தென்னிந்திய மாநிலமான ஆந்திராவில் நடைபெற்றதாகவும் குறிப்பிட்டு, ”பட்டப்பகலில் காவலரை தாக்கும் இந்த சம்பவம் மாநிலத்தில் சூழல் எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை காட்டுவதாக” வலியுறுத்தியுள்ளார். கூடுதலாக, ஆந்திர மாநிலத்தை காப்பாற்ற தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி), பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) மற்றும் ஜன சேனா ஆகிய எதிர்க்கட்சி கூட்டணிக்கு வாக்களிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பான புகைப்படத்தை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, முதலமைச்சர் ஜெகன் மோகனுக்கு எதிராக பரப்புரை செய்து வருகின்றனர். ஆனால், காவலரை இளைஞர்கள் அறையும் சம்பவம் ஆந்திராவில் நிகழவே இல்லை என்பதே உண்மை.
இணையத்தில் வைரலாகும் புகைப்படம் (Source:Facebook/Modified by Logically Facts)
சென்னையில் நடந்த சம்பவம் - உண்மை என்ன?
வீடியோ தொடர்பான புகைப்படங்களை கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்ததில், காவலரை அறைவது தொடர்பான வீடியோ கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இணையத்தில் இருப்பது தெரிய வந்தது. அதன்படி, டிசம்பர் 24, 2017 அன்று தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் செய்தி ஒன்று வெளியானது. அதில், “சென்னை: கடமையை செய்த போலீசாரை மாணவர் அறைந்தார், வீடியோ வைரலாகிறது. இரு சக்கர வாகனத்தில் சென்ற இலைஞர் தன்னுடன் மேலும் இரண்டு பேரை அழைத்துச் சென்றார். இதைகண்டு போக்குவரத்து விதிகளை மீறியதாக, இளைஞர்கள் மீது போலீஸ் தாக்குதல் நடத்தினார். இதனால், ஆத்திரமடைந்த 21 வயது இளைஞர் போலீசாரை தாக்கினார். தொடர்ந்து காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்” என செய்தி அறிக்கை கூறுகிறது. செய்தி இணையதளமான ஒன்இந்தியா ( இங்கே காப்பகம் ) இந்த வீடியோவை டிசம்பர் 30, 2017 அன்று தனது YouTube சேனலில் பதிவேற்றியது.
டிசம்பர் 26, 2017 அன்று வெளியான தி இந்துவின் மற்றொரு அறிக்கை , தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகரான வட சென்னையில் உள்ள குமரன் நகரில் இந்த சம்பவம் நடந்ததாக தெரிவித்துள்ளது. இதுகுறித்த குறிப்பை பெற்று குமரன் நகர் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பெயர் வெளியிட விரும்பாத காவல்நிலைய அதிகாரி ஒருவர் , ”இந்த சம்பவம் 2017 ஆம் ஆண்டு நடந்ததாகவும், வீடியோவில் காணப்பட்ட காவல்துறை அதிகாரி மகேஸ்வரன் பிள்ளை, காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்ததாகவும் தெளிவுபடுத்தினார். மகேஸ்வரன் இப்போது வேறொரு காவல் நிலையத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்” என தெரிவித்தார்.
தீர்ப்பு
விசாரணையின் முடிவில், 2017 ஆம் ஆண்டு சென்னையில் காவல்துறை அதிகாரியை இளைஞர் அறைந்த சம்பவத்தின் வீடியோ, ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியின் கீழ் நடந்ததாக தவறாக இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
also read: Video from Chennai passed off as youth slapping police in Andhra Pradesh
பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக logicallyfacts என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை தமிழில் மொழிபெயர்த்து எழுதியுள்ளது.