Yearender 2021: மாஸ்டர் முதல் மாநாடு வரை.. 2021ல் தியேட்டரில் கொண்டாடப்பட்ட திரைப்படங்கள்!
2021 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்த திரைப்படங்களை இந்தக்கட்டுரையில் பார்க்கலாம்.
2021 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு மிகவும் மோசமான ஆண்டாக அமைந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். காரணம், கொரோனா பரவல். கொரோனா முதல் அலை காரணமாக, திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் தயாரிப்பாளர்கள் ஓடிடியில் தங்களது படங்களை வெளியிடத்தொடங்கினர். இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் தங்களது கடுமையான கண்டனங்களை முன்வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து கொரோனா பரவல் குறைந்த நிலையில், மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டன. அரசு தளர்வுகளை தளர்த்திய நிலையில் திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில், முதல் படமாக விஜயின் மாஸ்டர் படம் வெளியானது.
மாஸ்டர்
விஜய், விஜய் சேதுபதி கூட்டணியில் வெளியான திரைப்படம் மாஸ்டர். மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்த இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றும் விஜய் அங்கு ஏற்பட்ட பிரச்னை காரணமாக, சீர்த்திருத்த பள்ளியின் வாடனாக பொறுப்பேற்கிறார்.
அதனைத்தொடர்ந்து அங்கு போதைக்கு அடிமையாக இருக்கும் மாணவர்களை திருத்த முயல்கிறார். இதனால் விஜய் சேதுபதிக்கும் விஜய்க்கும் மோதல் உண்டாகிறது. இந்த மோதலில் யார் இறுதியாக வெற்றிபெறுகிறார் என்பதை கதையாக கொண்டு லோகேஷ் கனகராஜ் படத்தை இயக்கியிருந்தார். விஜயின் வழக்கமான படமாக இல்லாமல் வெளிவந்த மாஸ்டர் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த போதும் வசுலை குவித்தது.
கர்ணன்
தனுஷ் நடிப்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கர்ணன். நெல்லை மாவட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்தப்படம் எடுக்கப்பட்டிருந்தது. தனது கிராமமான பொடியங்குளத்தில் பேருந்து நிற்காத நிலையில் தனுஷ் உட்பட அந்த கிராம மக்கள் பேருந்தை அடித்து நொறுக்குகின்றனர்.
இது தொடர்பான விசாரணையில் போலீஸ் அதிகாரியாக களமிறங்கும் நட்ராஜை, அந்த மக்கள் அணுகிய விதம் அவருக்கு பிடிக்காமல் போகிறது. இதனையடுத்து அந்த ஊர் என்னாகிறது, இறுதியில் ஊருக்கு அடிப்படை வசதிகள் கிடைத்ததா என்பதைக் கொண்டு கதை வடிவமைக்கப்பட்டிருக்கும்.
மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த வசுல் ரீதியாகவும் வரவேற்பை பெற்றது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருந்ததால் சாதரண நேரங்களில் வசுலிக்கும் தொகையை விட வசுல் குறைவு என்று தயாரிப்பாளர் தாணு கூறியிருந்தார்.
சுல்தான்
கார்த்தி, ராஷ்மிகா நடிப்பில் வெளியான திரைப்படம் சுல்தான். தனது அப்பாவிடம் இருந்த 100 ரவுடிகளை காப்பாற்றுவதற்காக அவர்களை அழைத்து சேலம் செல்கிறார் கார்த்தி. அந்த கிராமத்தை கார்ப்ரேட் வில்லனிடம் இருந்து காப்பாற்ற கார்த்தி மோதும் சூழ்நிலை உருவாகிறது.
அந்தக் கிராமத்தை இறுதியில் கார்த்தி காப்பாற்றினாரா இல்லையா என்பதை கொண்டு இயக்குநர் பாக்கிய ராஜ் கண்ணா படத்தை இயக்கியிருந்தார். இந்தப்படமும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
டாக்டர்
தனது காதலியின் அண்ணன் மகள் திடீரென கடத்தப்பட, அவரை மீட்க களமிறங்கும் சிவகார்த்திகேயனுக்கு, பல குழந்தைகள் இதுபோல கடத்தப்பட்டிருப்பது தெரியவர அனைத்தும் குழந்தைகளையும் மீட்க முடிவெடுக்கிறார்.
இறுதியில் குழந்தைகளை அவர் மீட்டாரா இல்லையா என்பதைக் கொண்டு இயக்குநர் நெல்சன் திலிப் குமார் படத்தை இயக்கியிருந்தார். கொரோனா இராண்டாவது அலைக்கு பிறகு, திரையரங்குகளுக்கு மக்களை கொண்டு வந்த படமாக டாக்டர் படம் மாறியது. வசுலையும் குவித்தது
அண்ணாத்த
ரஜினி நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான திரைப்படம் அண்ணாத்த. தங்கைப் பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தத்திரைப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், நல்ல வசுலை ஈட்டியதாக சொல்லப்பட்டது.
மாநாடு
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெளியான திரைப்படம் மாநாடு. டைம் லூப்பை மையப்படுத்தி, எடுக்கப்பட்ட இந்தப்படம் மக்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும், எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பும் பெரிதளவில் பாராட்டப்பட்டது. வசூலையும் குவித்தது.