Yash 19: டாக்ஸிக்.. ‘கேஜிஎஃப்' புகழ் யாஷின் அடுத்த படம்.. பெண் இயக்குநர்.. ரிலீஸ் தேதி இதுதான்!
பிரபல மலையாள இயக்குநர் கீது மோகன் தாஸ் உடன் இந்தப் படத்தில் யாஷ் முதன்முறையாக இணைந்துள்ளார்.
![Yash 19: டாக்ஸிக்.. ‘கேஜிஎஃப்' புகழ் யாஷின் அடுத்த படம்.. பெண் இயக்குநர்.. ரிலீஸ் தேதி இதுதான்! Yash Geetu Mohandas film titled 'Toxic' official announcement and release date Yash 19: டாக்ஸிக்.. ‘கேஜிஎஃப்' புகழ் யாஷின் அடுத்த படம்.. பெண் இயக்குநர்.. ரிலீஸ் தேதி இதுதான்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/08/23023b072215a5d218b5c636cfe899c61702020686529574_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கேஜிஎஃப் புகழ் நடிகர் யாஷின் அடுத்த படத்துக்கு டாக்ஸிக் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. கேஜிஎஃப் படத்தின் மூலம் பிரமாண்ட வெற்றியைப் பதிவு செய்து பான் இந்தியா நடிகராக உருவெடுத்த யாஷ், அடுத்ததாக பிரபல மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் உடன் கைக்கோர்த்துள்ளார்.
‘டாக்ஸிக்’
நடிகை சாய் பல்லவி இப்படத்தில் நாயகியாக நடிப்பதாக கடந்த சில நாள்களாகத் தகவல் வெளியாகி வருகிறது. யாஷின் 19ஆவது படமான இப்படத்தின் தலைப்பு இன்று அறிவிக்கப்படும் எனத் தகவல் வெளியானது. அதன்படி இப்படத்துக்கு டாக்ஸின் எனத் தலைப்பிடப்பட்டு இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் இந்தப் படம் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீசாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் கீது மோகன்தாஸ்
தமிழ் சினிமாவுக்கு ஏற்கெனவே பரிச்சயமான நடிகையான கீது மோகன்தாஸ் குழந்தை நட்சத்திரமாக சத்யராஜ் - சுஹாசினி நடித்த ‘என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார்.
தொடர்ந்து நடிகர் மாதவன் உடன் ‘நள தமயந்தி’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும் ஹீரோயினாக கீது மோகன்தாஸ் நடித்துள்ளார். பல மலையாள திரைப்படங்களில் நடித்துள்ள கீது மோகன் தாஸ், 'லையர்ஸ் டைஸ்' என்ற இந்தி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
இந்தப் படத்திற்கான தேசிய விருதை வென்ற முன்னதாக நிவின் பாலியை வைத்து இயக்கிய மூதோன் திரைப்படம் பெரும் பாராட்டுகளைக் குவித்தது இந்நிலையில், தற்போது கீது மோகன் தாஸ் யஷ் உடன் முதன்முதலாகக் கைகோர்த்துள்ளது சினிமா வட்டாரத்தில் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் யஷ் உடன் இணைந்துள்ளது குறித்து பேசியுள்ள கீது மோகன்தாஸ், ”எனது கதை சொல்லல் பாணியில் நான் எப்போதும் பரிசோதனை முயற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறேன். எனது முந்தைய படங்களான லையர்ஸ் டைஸ் மற்றும் மூத்தோன் ஆகியவை சர்வதேச அளவில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும், எனது நாட்டில் எனது சொந்த பார்வையாளர்களை திருப்திபடுத்தி வெற்றிப்படம் தர ஆசைப்பட்டேன்.
அந்த எண்ணத்தில் உருவானதுதான் இந்தத் திரைப்படம். இந்தப் படம் இரண்டு எதிர் உலகங்களின் கதையை அழகியல் கலந்து சொல்லும் ஒரு கலவையான படைப்பாக இருக்கும். இந்தப் படத்துக்காக யஷ் உடன் இணைந்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
யஷ் ரசிகர்கள் உற்சாகம்
நான் சந்தித்த மிகவும் புத்திசாலித்தனமான மனிதர்களில் ஒருவர் யஷ், அவருடன் இணைந்து இந்த மாயாஜால பயணத்தை எங்கள் குழு தொடங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” எனக் கூறியுள்ளார்.
கேவிஎன் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். கேஜிஎஃப் எனும் ஒற்றைப் படத்தின் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களைப் பெற்ற யஷ்ஷின் அடுத்த படம் பற்றிய இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)