The Kerala Story: வெறுப்பு பிரச்சார சர்ச்சையில் தி கேரளா ஸ்டோரி.. ஏன்?
அண்மையில் வெளியான கேரளா ஸ்டோரி கடும் எதிர்ப்பை சந்தித்து வந்த நிலையில், இந்தப் படம் வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாக படக்குழுவினரை விமர்சித்துள்ளார் கேரள முதலமைச்சர் பினராய் விஜயன்
கடந்த வாரம் வெளியான கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்சமயம் கடும் எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் கேரளா ஸ்டோரிஸ் படத்தை பிரிவினைவாத கருத்துகளைக் கொண்டிருப்பதாக விமர்சித்து உள்ளார். கேரளா ஸ்டோரி இவ்வளவு விமர்சிக்கப்படுவதற்கான காரணம் என்ன?
கடந்த வாரம் 26-ஆம் தேதி கேரளா ஸ்டோரி படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இந்த படத்தில் அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சித்தி இத்னானி, சோனியா பாலானி ஆகியவர்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். நடிகை அதா ஷர்மா இந்த படம் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்திற்கு மாற்றப்படும் பெண்கள் குறித்தான பிரச்சனையைப் பேசும் படம் என தெரிவித்துள்ளார்.
உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப் பட்டதாக சொல்லப்படும் இந்தப் படம் கிட்டதட்ட 30,000 கேரளப் பெண்கள் தங்களது விருப்பமின்றி இஸ்லாமிற்கு மதமாற்றம் செய்யப்பட்டு ஐ. எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்க்கப்பட்டதாகவும் காட்சிப்படுத்தி உள்ளது. இதற்காக கடும் எதிர்ப்புகளை சந்தித்தது.
கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் இந்தப் படம் பொய்யான தகவல்களை பரப்பி வெறுப்பு பிரச்சாரம் செய்வதாக இந்த படத்திற்கு தனது கண்டனங்களைத் தெரிவித்தார். மேலும் லவ் ஜிஹாத் பிரச்சனையை முற்றிலுமாக கேரள மாநிலத்தை மையப்படுத்திய ஒரு நிகழ்வாக சித்தரிப்பது உலகத்தின் முன் கேரளாவை அசிங்கப்படுத்துவதன் நோக்கத்தில் செய்யப்படும் முயற்சி என அவர் தெரிவித்தார். இதற்கு அடுத்ததாக 30,000 என குறிப்பிடப்பட்டிருந்த ட்ரெய்லரில் 3 பெண்கள் என படக்குழு சார்பாக மாற்றப்பட்டது. கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் எழுத்தாளரான சுதிப்தோ சென் கேரளாவில் 32,000 பெண்கள் காணாமல் போனதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக கூறியுள்ளார். ஆனால் இதுவரை அவர் எந்த விதமான ஆதாரங்களையும் வெளியிடவில்லை. அண்மையில் யூ டியூப் சானல் ஒன்றில் பேசிய சுதிப்தா சென் கடந்த 2010-ஆம் அண்டு வருடந்தோறும் 2800 முதல் 3200 பெண்கள் இஸ்லாமிற்கு மதமாற்றம் செய்யப்படுவதாக அன்றைய கேரள முதலமைச்சராக இருந்த உம்மென் சண்டி அறிக்கை ஒன்றில் வெளியிட்டதாக கூறினார்.
இந்த பிரச்சனையை கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக தான் கவனித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.ஆனால் சென் குறிப்பிட்ட ஆண்டில் அந்த மாதிரியான எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை என இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
கேரளா ஸ்டோரி படத்தை வெளியிடுவதற்கு தடைவிதிக்கக் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. ஆனால் நீதிமன்றம் படத்தின் மேல் தடையை விதிக்க மறுத்துவிட்டது. கிட்டத்தட்ட 16 மில்லியன் பார்வைகளை யூ ட்யுபில் தொட்டிருக்கிறது தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் ட்ரெய்லர் என்பது குறிப்பிடத்தக்கது