(Source: ECI/ABP News/ABP Majha)
Vikram : நான் உங்க பெரிய ரசிகன்... ரஞ்சித்தை கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன விக்ரம்...
Vikram : 'தங்கலான்' படத்தின் சக்சஸ் மீட்டில் பா. ரஞ்சித்துக்கு மனதார நன்றியை தெரிவித்தார் நடிகர் விக்ரம்.
பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியான திரைப்படம் 'தங்கலான்'. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படத்தின் சக்சஸ் மீட் இன்று நடைபெற்றது. படக்குழுவினர் மற்றும் பலர் இதில் கலந்து கொண்டு தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
அந்த வகையில் நடிகர் விக்ரம் பேசுகையில் 'தங்கலான்' படத்திற்காக அத்தனை பேரும் கடுமையாக உழைத்தோம். நாங்கள் நடித்தோம் என சொல்வதை காட்டிலும் அவர்களாகவே வாழ்ந்தோம். அப்போது தான் அந்த உணர்ச்சியை கொண்டு வர முடிந்தது. வெயில், குளிர் என எதையுமே பொருட்படுத்தாமல் தேளும் பாம்பும் விளையாடிய களத்தில் நாங்கள் கபடி விளையாடினோம். இந்த வெற்றியை பார்க்கும்போது நாங்கள் பட்ட கஷ்டம் மறந்தே போனது.
ரஞ்சித் என்னை வந்து சந்தித்து வித்தியாசமாக ஒரு படம் பண்ணலாம் என சொல்லி இந்த கதையை சொன்னார். பாதி தலை வரைக்கும் மொட்டை அடிக்கணும் என சொன்னார். கொஞ்ச நேரம் அமைதிக்கு பிறகு கோமணம் கட்டிக்கணும் என சொன்னார். அதை கேட்டவுடனே முதலில் எனக்கு பக் என இருந்துச்சு. கொஞ்சம் எக்ஸ்சைட்டிங்காகவும் இருந்துச்சு. பா. ரஞ்சித் மாதிரி ஒரு இயக்குநர் வந்து என்னை ஆதாம் மாதிரி நடிக்கணும் என சொன்னால் கூட நான் நடிப்பேன். சில இயக்குநர்களை நம்பி நாம நடிக்கலாம். நான் சரி என சொன்னதும் அவருக்கே ஒரு மாதிரி அதிர்ச்சியாக போச்சு.
முதலில் கோமணம் கட்டிட்டு நடிக்க எனக்கு மட்டும் இல்ல.. எல்லாருக்குமே கொஞ்சம் கூச்சமா தான் இருந்துது. ஆனா போக போக நாங்க அந்த கேரக்டருக்கு உள்ள போயிட்டோம். எங்க எல்லாரையும் கையை புடிச்சு இழுத்து கூட்டிட்டு போனார். அவருடைய இந்த ஆதரவு இல்லாம இந்த சவாலான ஒரு கேரக்டரை பண்ணி இருக்கவே முடியாது. கமர்ஷியல் மசாலா படத்தை எடுத்து விடலாம் ஆனால் இது போல மெஸேஜ் உள்ள ஒரு படத்தை ஜனரஞ்சக ரீதியாக எடுத்து மக்களுக்கு கொண்டு செல்வது மிகவும் கஷ்டமான ஒரு விஷயம்.
சேது படத்தில் தொடங்கி நான் வேலை செய்துள்ள பாலா, மணிரத்னம், ரஞ்சித், தரணி, ஷங்கர் என அனைவருடனும் எனக்கு தொழில் முறை தாண்டிய நட்பு இன்று வரைக்கும் இருக்கிறது. வேலை செய்யும்போது ரொம்ப சீரியஸாக அதே நேரத்தில் மற்ற சமயங்களில் ரொம்ப ஜாலியாக இருப்போம். பா. ரஞ்சித்தின் மிகப்பெரிய ரசிகன் நான்.