7 நாளில் 50 கோடி.. தெலுங்கிலும் பட்டையை கிளப்பும் தலைவன் தலைவி.. ரசிகர்கள் கொண்டாட்டம்
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி திரைப்படம் கோடி கணக்கில் வசூல் செய்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி - நித்யா மேனன் நடித்துள்ள தலைவன் தலைவி திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. கணவன் - மனைவிக்கும் இடையே இருக்கும் உறவுச் சிக்கல்களை மையமாக வைத்து உருவான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு பிறகு பாண்டிராஜ் கரியரில் மிக முக்கிய படமாக பார்க்கப்படுகிறது.
வழக்கமான கதை என்றாலும், ரக்கடான கணவன் மனைவி இருந்தால் எப்படி இருக்கும் என்பதை எதார்த்தமாக சொல்ல முயற்சித்திருக்கிறார். படம் பார்த்த ரசிகர்கள் அனைவரும் விஜய் சேதுபதி - நித்யா மேனன் நடிப்பை பாராட்டி பேசினர். குறிப்பாக படத்தில் இடம்பெற்ற கதாப்பாத்திரங்களின் பெயர்கள் ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறது.தமிழில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இப்படத்திற்கான காட்சிகளையும் திரையரங்குகளில் அதிகரித்துள்ளனர்.
மேலும், தெலுங்கிலும் தலைவன் தலைவி படத்தை டப்பிங் செய்து வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. படம் வெளியான 3 நாட்களிலேயே இப்படம் ரூ.25 கோடி வசூல் செய்திருப்பதாக தலைவன் தலைவி படக்குழு அறிவித்தது. இந்நிலையில் இப்படம் உலகம் முழுவதும் ரூ.50 கோடி வசூல் செய்திருப்பதாக சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், தெலுங்கில் 250 காட்சிகளில் தலைவன் தலைவி ரிலீஸ் செய்ய இருப்பதையும் உறுதி செய்துள்ளது. மகராஜா படத்திற்கு பிறகு விஜய் சேதுபதிக்கு மெஹா ஹிட் படமாக தலைவன் தலைவி அமைந்திருக்கிறது. வசூலிலும் பட்டையை கிளப்பி வருகிறது.





















