Vijay : அம்பேத்கர் பிறந்தநாளுக்கு தயாராகும் விஜய்... ஜெட் வேகத்தில் நடைபெறும் பணிகள்... என்ன பின்னணி?
ஏப்ரல் 14 தேதி அம்பேத்கரின் 132-வது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் சிலை மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய அறிவுறுத்தியுள்ளார் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் தொடங்க உள்ளதால் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான ஆயுத்த பணிகளில் மும்மரம் காட்டி வருகிறார்கள். அரசியல் கட்சிகளும் தலைவர்களும் தீவிரம் காட்டி வரும் வேளையில் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் நடிகர் விஜய் பெயரில் இயங்கி வரும் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் பல்வேறு மக்கள் நல உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.
சட்டமேதை என அழைக்கப்படும் அம்பேத்கரின் 132வது பிறந்தநாளை வரும் ஏப்ரல் 14 தேதி கொண்டாடப்பட உள்ளது. அவரின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அம்பேத்கர் சிலை மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய அறிவுறுத்தியுள்ளார் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்.
இந்நிலையில் அம்பேத்கரின் 132வது பிறந்தநாள் அன்று மாவட்டம் தோறும் நடைபெற இருக்கும் விழாவில் விஜய் மக்கள் இயக்க தலைவர்களும், நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் முன்கூட்டியே காவல் துறையிடம் அதற்கான அனுமதி பெற்று இருக்க வேண்டும் எனவும் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
விஜய் மக்கள் இயக்கத்திற்கு புதிதாக உறுப்பினர்களின் சேர்க்கை பணிகள் தற்போது ஆன்லைன் மூலம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் புதிதாக இன்ஸ்டாகிராமில் கணக்கை தொடங்கினார் விஜய். அவர் சேர்ந்த சுமார் ஒன்றரை மணி நேரத்திலேயே கிட்டத்தட்ட 10 லட்சம் பாலோவர்களை பெற்று சாதனை படைத்தார். தற்போது 64 லட்சம் பாலோவர்களை பெற்று உலக அளவில் மூன்றாம் இடத்தை கைப்பற்றியுள்ளார் நடிகர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே விஜய் தனது திரைப்படங்களின் மூலம் அரசியல் சம்பந்தப்பட்ட கருத்துக்களை முன்வைத்து வரும் இந்த வேளையில் அம்பேத்கர் பிறந்த நாளை கொண்டாடுவதன் மூலம் மக்கள் ஆதரவைப்பெற இது போன்ற முன்னேற்பாடுகளை செய்துள்ளாரா என்றும் இதன் மூலம் அரசியல் களம் காண உள்ளாரா நடிகர் விஜய் என கேள்விகளை எழுப்பி வருகிறார்கள் நெட்டிசன்கள்.