Arun Bali: ஹேராம் படத்தில் நடித்த பிரபல நடிகர் மரணம்...திரையுலகினர் அதிர்ச்சி!
தமிழில் 2000 ஆம் ஆண்டில் வெளியாகி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய கமலின் ஹேராம் படத்தில் பிரிக்கப்படாத வங்காளத்தின் முதலமைச்சர் ஹுசைன் ஷஹீத் சுஹ்ரவர்தியாகவும் நடித்திருந்தார்.
பாலிவுட்டின் பழம்பெரும் நடிகராக வலம் வந்த அருண் பாலி உடல்நலக்குறைவால் மும்பையில் இன்று காலமானார்.
1991 ஆம் ஆண்டு ஒளிபரப்பான நாடகமான ஸ்வாபிமானில் குன்வர் சிங் கதாபாத்திரத்திலும், சாணக்யாவில் கிங் போரஸாகவும் நடித்ததன் மூலம் பிரபலமானவர் அருண் பாலி. இவர் தமிழில் 2000 ஆம் ஆண்டில் வெளியாகி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய கமலின் ஹேராம் படத்தில் பிரிக்கப்படாத வங்காளத்தின் முதலமைச்சர் ஹுசைன் ஷஹீத் சுஹ்ரவர்தியாகவும் நடித்திருந்தார்.
மேலும் ராஜு பன் கயா ஜென்டில்மேன், கல்நாயக், சத்யா, லகே ரஹோ முன்னா பாய், 3 இடியட்ஸ், ஓஎம்ஜி: ஓ மை காட், பர்ஃபி, பிகே, மன்மர்சியான், கேதர்நாத், சாம்ராட் பிருத்விராஜ் மற்றும் லால் சிங் சத்தா போன்ற படங்களில் நடித்திருந்தார். இவர் தேசிய விருது பெற்ற ஒரு படத்தையும் தயாரித்திருந்தார். அவரது கடைசிப் படமான குட் பை படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது.
View this post on Instagram
விகாஸ் பாஹ்ல் இயக்கியுள்ள இப்படத்தில் அமிதாப் பச்சன் , ரஷ்மிகா மந்தனா, நீனா குப்தா, சுனில் குரோவர், பவைல் குலாட்டி, ஆஷிஷ் வித்யார்த்தி, எல்லி அவ்ர்ராம், சாஹில் மேத்தா, ஷிவின் நரங் மற்றும் அபிஷேக் கான் ஆகியோர் நடித்துள்ளனர். குடும்ப உறுப்பினர் ஒருவரின் மரணத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. அதேசமயம் "தாத்தா" பாத்திரங்களுக்காக அதிகம் அறியப்பட்ட அருண் பாலி இந்த ஆண்டின் தொடக்கத்தில் மயஸ்தீனியா கிராவிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இதற்காக சிகிச்சைப் பெற்று வந்த தனது தந்தை தன் 79 வயதில் இன்று அதிகாலை உயிரிழந்ததாக அருண் பாலியின் மகன் அங்குஷ் தெரிவித்துள்ளார். முன்னதாக அங்குஷ் அளித்த நேர்காணலில் நடிப்பில் இருக்கும் ஆர்வம் தனது தந்தைக்கு மகிழ்ச்சியைத் தருவதால் அவர் கடைசி மூச்சு வரை பணியாற்ற வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என தெரிவித்திருந்தார். கடந்த 2 நாட்களாக மனநிலை பாதிப்பால் அவதிப்பட்ட அருண் பாலி இன்று அதிகாலை 4.30 மணியளவில் உதவியாளரிடம் தான் கழிவறைக்கு செல்ல விரும்புவதாகக் கூறியுள்ளார். வெளியே வந்த பிறகு உட்கார விரும்புவதாக சொன்ன அவர் அதன்பின்னர் எழுந்திருக்கவே இல்லை என அங்குஷ் தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டின் பழம்பெரும் நடிகரான அருண் பாலியின் மரணம் அவரது ரசிகர்களையும், திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.