Kabir Duhan Singh: நீண்ட நாள் காதலியை கரம்பிடித்த ‘வேதாளம்’ பட வில்லன்... குவியும் வாழ்த்துகள்!
றெக்க, காஞ்சனா 3, அருவம் ஆகிய தமிழ் படங்கள் என 50க்கும் மேற்பட்ட தென்னிந்தியத் திரைப்படங்களில் கபீர் துஹான் சிங் நடித்துள்ளார்.
பிரபல வில்லன் நடிகர் கபீர் துஹான் சிங் தன் நீண்ட நாள் காதலியை இன்று திருமணம் செய்து கொண்ட நிலையில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
வேதாளம் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளவர் நடிகர் கபீர் துஹான் சிங். மாடலிங் மூலம் தன் திரைப்பயணத்தைத் தொடங்கிய கபீர் துஹான் சிங், மும்பையைச் சேர்ந்தவர்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய சினிமாக்களில் பிரபல வில்லனாக ஹீரோக்களுடன் மல்லுக்கட்டும் நடிகர் கபீர் துஹான் சிங், கிக் தெலுங்கு படத்தில் முதலில் அறிமுகமானார்.
தொடர்ந்து அதே ஆண்டில் கோலிவுட்டில் முதல் படத்திலேயே நடிகர் அஜித்துக்கு வில்லனாக வேதாளம் படத்தில் அறிமுகமானார் கபீர் துஹான் சிங். அதன் பின் றெக்க, காஞ்சனா 3, அருவம் ஆகிய தமிழ் படங்கள் என 50க்கும் மேற்பட்ட தென்னிந்தியத் திரைப்படங்களில் கபீர் துஹான் சிங் நடித்துள்ளார்.
இவருக்கும் இவரது நீண்ட நாள் காதலியும் ஹரியானவைச் சேர்ந்த ஆசிரியையுமான சீமா சாஹல் என்பவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
தொடர்ந்து கபீருக்கும் திரைத்துறையினரும் சினிமா ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், நேற்று (ஜூன்.24) தன் காதலியை டெல்லியில் கரம்பிடித்தார்.
டெல்லி பரீதாபாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் சூழ இவர்களது திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இவர்களது புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வெளியாகியுள்ளன. இவர்கள் இருவருக்கும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த மாதம் முழுவதுமே திரைத்துறையில் கல்யாண சீசன் களைக்கட்டி வருகிறது. முன்னதாக டோலிவுட் நடிகர் சர்வானந்துக்கு சென்ற 3ஆம் தேதி ஜெய்ப்பூரில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் சூழ திருமணம் நடைபெற்றது.
தெலுங்கு, தமிழ் மொழிகளில் பிரபல நடிகரான சர்வானந்த், கோலிவுட்டில் ‘எங்கேயும் எப்போதும்’, ‘ஜேகே எனும் நண்பனின் கதை’ ஆகிய திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.
டோலிவுட்டின் பிரபல நடிகரான சர்வானந்த், 38 வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வந்த நிலையில், நீண்ட நாள்களாக அவர் ஒருவரைக் காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகி வந்தன.
அதன்படி, சென்ற ஜனவரி மாதம் ரக்ஷிதா எனும் பெண்ணை தான் மணப்பதாக சர்வானந்த அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தொடர்ந்து சென்ற ஜூன் 3ஆம் தேதி ஜெய்ப்பூரில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் சூழ சர்வானந்த் - ரக்ஷிதாவின் திருமணம் நடைபெற்றது.
இதேபோல் பிரபல தெலுங்கு நடிகர் வருண் தேஜ் நடிகை லாவண்யா திரிபாதிக்கு முன்னதாக நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், இவர்களுக்கு தொடர்ந்து டோலிவுட் ரசிகர்கள் வாழ்த்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.