வன்மத்தின் உச்சத்தில் தவெக தொண்டர்கள்...ஓவியாவை ஆபாசமாக திட்டி சோசியல் மீடியாவில் குவியும் பதிவுகள்
கரூர் கூட்ட நெரிசலில் மக்கள் உயிரிழந்தது குறித்து விஜயை கைது செய்யக் கோரி நடிகை ஓவியா பதிவிட்ட நிலையில் ஓவியாவை தவெக தொண்டர்கள் ஆபாசமாக திட்டி சமூக வலைதளத்தில் தாக்கி வருகிறார்கள்

ஓவியாவை ஆபாசமாக திட்டும் தவெகவினர்
கரூரில் விஜயின் பரப்புரையின் போது 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியிருக்கிறது. இச்சம்பவத்திற்கு காரணமான விஜயை கைது செய்ய வேண்டும் என நடிகை ஓவியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து ஓவியாவை சமூக வலைதளங்களில் தவெக தொண்டர்கள் ஆபாச வார்த்தை பேசி தாக்கத் தொடங்கினர். இதனால் ஓவியா தனது பதிவை நீக்கினார். பதிவை நீக்கியபின்னும் ஓவியாவின் முந்தைய பதிவுகளில் ஆபாசமாக கமெண்ட் செய்து பதிவிட்டு வருகின்றனர் தவெகவினர். இதனை ஸ்கிரீன்ஷாட் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஓவியா.
View this post on Instagram
விஜய் பரப்புரையில் 41 பேர் உயிரிழப்பு
கடந்த சனிக்கிழமை இரவு கரூர் வேலுச்சாமிபுரத்தில், தமிழக வெற்றிக் கழகம் நடத்திய பிரசார கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றினார். அந்த நிகழ்ச்சிக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடினர். அந்த நேரத்தில் கூட்டத்தில் ஏற்பட்ட கடும் நெரிசலால் பலர் சிக்கினர். அதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்ந்தன. இன்று காலை நிலவரப்படி மொத்தம் 41 பேர் உயிரிழந்துள்ளனர். கரூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 82 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
34 மணி நேரத்திற்கு பின் தலைகாட்டிய விஜய்
இந்த துயரச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலை கிளப்பிய நிலையில், சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி தவெக சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கரூரில் கூட்ட நெரிசல் நடந்த உடனே அங்கிருந்து புறப்பட்ட விஜய், சென்னையில் உள்ள தனது இல்லத்திற்கு சென்றார். அங்கிருந்தபடியே அவர் வெளியே வராமல் இருந்த நிலையில் சுமார் 34 மணி நேரத்திற்குப் பிறகு இன்று காலை தனது இல்லத்திலிருந்து புறப்பட்டார். பலத்த பாதுகாப்புடன் கிளம்பிய அவர் எங்கு சென்றார் என்பது தொடர்பான தகவல் வெளியாகவில்லை.
அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை
இதனிடையே, கரூர் சம்பவம் தொடர்பான விசாரணையை முன்னெடுத்து வரும் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருங்கிணைப்பு ஆணையம், இன்று இரண்டாம் நாளாக சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொள்கிறது. மேலும், கரூர் விஜய் பிரசார கூட்ட நெரிசல் சம்பவ விசாரணைக்காக புதிய விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி பிரேமானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.





















