(Source: ECI/ABP News/ABP Majha)
TTF Vasan: முதல் படம் வரதுக்கு முன்னாடியே 2வது படம்.. அனுபவ நடிகர்களுடன் களமிறங்கும் டிடிஎஃப் வாசன்!
TTF Vasan: சமீபத்தில் தான் டிடிஎஃப் வாசன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க விரைவில் நடைபெற உள்ள பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாகத் தகவல் வெளியானது.
சர்ச்சைக்குரிய யூடியூப் பிரபலம், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டு காவல் துறையினரிடம் சிக்கி கைதாவது, மற்றொருபுறம் 2கே கிட்ஸின் ஆதர்ச நாயகனாக வலம் வருவது என கடந்த 2 ஆண்டுகளாக லைம்லைட்டிலேயே இருந்து வருபவர் டிடிஎஃப் வாசன் (TTF Vasan).
மஞ்சள் வீரன் முதல் கைது வரை..
விரைவில் வெள்ளித்திரையில் நாயகனாக அறிமுகமாக உள்ள டிடிஎஃப் வாசன் தற்போது 'திரு.வி.க பூங்கா' எனும் படத்தை இயக்கிய செல்வம் இயக்கத்தில் "மஞ்சள் வீரன்" எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ரூ.5 கோடிக்கும் மேற்பட்ட பட்ஜெட்டில் இப்படம் உருவாகி வரும் நிலையில், கையில் சூலாயுதத்தை ஏந்தியபடி டிடிஎஃப் வாசன் பைக்கில் சீறிப்பாயும்படியான இப்படத்தின் போஸ்டர் சென்ற ஆண்டு வெளியாகி பேசுபொருளானது.
இதனிடையே ஏற்கனவே தன் இருசக்கர வாகனத்தினை வேகமாக இயக்கி கைதான டிடிஎஃப் வாசன், சமீபத்தில் செல்ஃபோன் பேசியபடி வாகனம் இயக்கி, தன் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு மீண்டும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து, தான் மஞ்சள் வீரன் படப்பிடிப்பில் கலந்துகொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட காரணங்களை சொல்லி ஜாமீன் கோரிய டிடிஎஃப் வாசனுக்கு, 10 நாட்களுக்கு மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் தினமும் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவுடன் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
பிரபல நடிகர்களுடன் இரண்டாவது படம்
இப்படிப்பட்ட சர்ச்சைகளுக்கு இடையே டிடிஎஃப் வாசன் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. ஐபிஎல் (IPL) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் பிரபல நடிகர் கிஷார், நடிகை அபிராமி ஆகியோருடன் டிடிஎஃப் வாசன் இணைந்து நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது, மேலும், இந்தப் படத்தினை இயக்குநர் கருணாகரன் இயக்குவதாகவும், ராதா ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்ப்தாகவும், அஸ்வின் விநாயகமூர்த்தி இப்படத்துக்கு இசையமைப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே விஜய்யின் தி கோட் படத்துக்கு ஐபிஎல் என்ற பெயரை தான் வெங்கட் பிரபு தேர்வு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் டிடிஎஃப் வாசன் நடிக்கும் இந்தப் படம் கிரிக்கெட் போட்டியை மையப்படுத்தி இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
Trending Star #TTFvasan's
— Tharani ᖇᵗк (@iam_Tharani) June 15, 2024
Second Movie Title as #IPL
(PAN World Title)😜😄 pic.twitter.com/a6HzbqxhNe
பிக்பாஸ் எண்ட்ரியும் இருக்கா?
சமீபத்தில் தான் டிடிஎஃப் வாசன் இந்த ஆண்டு நடைபெற உள்ள பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாகத் தகவல் வெளியானது. இவரது காதலியான ஸோயா தற்போது விஜய் தொலைக்காட்சியின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்டு வரும் நிலையில், இவர்கள் இருவரும் இந்த சீசனின் காதல் ஜோடியாக இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவனம் ஈர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது இந்நிலையில் டிடிஎஃப் வாசன் முதலில் சின்னத்திரையில் என்ட்ரி தருவாரா? அல்லது வெள்ளித்திரையில் என்ட்ரி தருவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.