Trisha: ‘மௌனம் பேசியதே’ சந்தியா டூ குந்தவை.. 21 ஆண்டுகளைக் கடந்த ‘சவுத் குயின்’ த்ரிஷாவின் திரைப் பயணம்!
21 Years Of Trisha: அமீரின் மௌனம் பேசியதே படத்தில் அறிமுகமாகி தன் திரைப்பயணத்துடன் சேர்ந்தே வளர்ந்து 21 ஆண்டுகளை ராணியாக சினிமாவில் கடந்துள்ளார் த்ரிஷா!
நூற்றாண்டு கடந்த தமிழ் சினிமாவில் ஏராளமான நடிகைகள் வந்து சென்றுள்ளார்கள். ஆனால் ஒரு நடிகை அன்று பார்த்தது போலவே இன்றும் அதே தோற்றத்தில் அதே புன்சிரிப்புடன் இரண்டு தசாப்தங்களாக ரசிகர்களை ஆக்கிரமித்திருக்கிறார் என்றால், நடிகை த்ரிஷாவை தவிர வேறு எவர் பெயரும் நமக்கு நினைவில் வராது.
துணை கதாபாத்திரம் டூ ஹீரோயின்
த்ரிஷா சினிமா உலகில் ஒரு ஹீரோயினாக அடியெடுத்து வைத்து இன்றுடன் இருபத்தி ஓரு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
அடையாளம் தெரியாத துணைக் கதாபாத்திரத்தில் ஒரு தோழியாக 'ஜோடி' படத்தில் நடித்த த்ரிஷா ஒரு ஹீரோயினாக முதலில் அறிமுகமானது இயக்குநர் அமீரின் 'மௌனம் பேசியதே' திரைப்படத்தில். தமிழ் சினிமாவின் க்யூட் குயினாக வளர்ந்து நிற்கும் த்ரிஷாவின் ராஜ்யம் தொடங்கியது அன்றுதான். முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித், விஜய் சேதுபதி, விக்ரம், தனுஷ், சிம்பு என அனைவருடனும் நடித்த த்ரிஷா, ஒரு கட்டத்தில் கோலிவுட்டின் மோஸ்ட் வான்டட் ஹீரோயினாக மாறினார்.
சந்தியா டூ குந்தவை
ஜெஸ்ஸி, அபி, ஜானு எனத் தொடர்ந்து தற்போது குந்தவை வரை கதாப்பாத்திரங்களில் அழுத்தமாக தன் முத்திரையை பதித்து கொண்டாட வைத்து வரும் த்ரிஷா இன்று 21 ஆண்டுகள் கழித்தும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகத் திகழ்கிறார்.
தான் அறிமுகமான படத்தில் அவர் எந்த அளவுக்கு அனைவரின் கவர்ந்தாரோ, அதே போல இன்றும் ரசிகர்களை தன் கைக்குள் த்ரிஷா அடக்கி வைத்திருப்பது மிக பெரிய சவால். இடையில் ஒரு சரிவு ஏற்பட்ட பிறகும் மீண்டும் ஜானுவாக ‘96’ திரைப்படம் மூலம் மாஸாக செகண்ட் இன்னிங்ஸைத் தொடங்கினார் த்ரிஷா.
எல்லா நடிகைகளுக்கும் அவ்வளவு எளிதில் கிடைத்து விடாத ஒரு வாய்ப்பு, இளவரசியாக அதுவும் மணிரத்னம் படத்தில் நடிக்கும் ஒரு ரோல். அந்த அந்தஸ்தையும் த்ரிஷாவுக்கு தந்து, அவரை குந்தவையாக சோழர் காலத்தில் உலவவிட்டு அழகு பார்த்தார் இயக்குனர் மணிரத்னம். குந்தவையாக த்ரிஷாவை தவிர வேறு யார் நடித்திருந்தால் நன்றாக இருக்கும் என்ற மறு யோசனை கூட யாருக்கும் வராத அளவுக்கு, பொன்னியின் செல்வன் படித்தவர்கள், படிக்கப்போகிறவர்கள் மனங்களில் குந்தவையாக பதிந்து விட்டார் த்ரிஷா.
21 ஆண்டுகளாக குயின்
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழி திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல், சிரஞ்சீவி, புனித், அக்ஷய் குமார் ஆகியோருடன் நடித்த தமிழ் நடிகை எனும் சாதனை படித்த த்ரிஷாவின் திரை வாழ்க்கை சிறப்பாக இருந்தாலும், அவரது தனிப்பட்ட வாழ்வு தொடர்பாக ஏராளமான சர்ச்சைகளுடன்தான் வலம் வந்துள்ளார். நாயகிக்கான பாதையில் ஏராளமான கற்கள் அவர் மீது வீசப்பட்டன.
2015ஆம் ஆண்டு பிரபல தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபர் வருண் மணியனுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பால் திருமணம் நிறுத்தப்பட்டது. ஆனாலும் இவற்றில் இருந்தெல்லாம் மீண்டு, தனது முழு கவனத்தையும் நடிப்பில் செலுத்தி டாப் கியரில் பயணித்து வருகிறார் த்ரிஷா.
சினிமா துறையில் 21 ஆண்டுகளுக்கு மேல் கோலோச்சி வரும் த்ரிஷாவுக்கு நடிக்க வேண்டும் என்பதில் எல்லாம் சிறு வயதில் ஆசையில்லை. அவரின் வாழ்நாளில் பெரும் கனவாக இருந்தது ஒரு கிரிமினல் சைக்காலஜிஸ்டாக வேண்டும் என்பதே!
தன் லட்சியத்தை அடைய வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்து அதற்காக தன்னை முழுமையாக தயார்படுத்தி வந்தார் த்ரிஷா. ஆனால் காலம் த்ரிஷாவை ஒரு நடிகையாக்கி கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்று தர வேண்டும் என்றே ஆசைப்பட்டுள்ளது. அமீரின் மௌனம் பேசியதே படத்தில் அறிமுகமாகி தன் திரைப்பயணத்துடன் சேர்ந்தே வளர்ந்து 21 ஆண்டுகளை ராணியாகக் கடந்துள்ள த்ரிஷா, தொடர்ந்து ரசிகர்களை ஆட்சி செய்ய ஏபிபி நாடு சார்பில் வாழ்த்துகள்!