Trisha Birthday: தடை... அதை உடை...! தசாப்தங்களை தாண்டி தன்னிச்சையாக கெத்துக்காட்டும் த்ரிஷா…!
2002ல் வெளிவந்த மௌனம் பேசியதே தான் நடிகையாக இவரது முதல் படம். அவர் அதற்கு முன்பு லேசா லேசா, உனக்கு 20, எனக்கு 18 ஆகிய படங்களில் நடிக்க துவங்கினார்.
"நடிகைகளுக்கெல்லாம் மார்க்கெட் 5, 6 வருஷம்தான்பா" என்னும் எழுதவேபடாத விதியை மாற்றி எழுதியவர் த்ரிஷா. விமர்சனங்கள், காதல், மார்க்கெட், தோல்வி, வெற்றி என்று பல ஏற்ற இறக்கங்களுடன் கூடிய கிராஃப்தான் திரிஷாவுடையது. 'எப்பப்பா கல்யாணம்' என்பது தொடங்கி, 'என்ன வயசாவுது' வரை எதிர்கொள்ள முடியாத அத்தனை கேள்விகளும் அவரிடம் கேட்கப்பட்டுவிட்டன. எல்லாவற்றையும் லெப்ட் ஹாண்டில் டீல் செய்து தனித்து நின்று, இன்றுவரை தனக்கென மார்க்கெட் உருவாக்கி, வீழாமல் காத்து வரும் பெரும் வேலையை சுலபமாக செய்து வருகிறார்.
நடிகை த்ரிஷா, 1999-ம் ஆண்டு வெளியான ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக நடித்து கோலிவுட்டில் தலை காட்டினார். 2002ல் வெளிவந்த மௌனம் பேசியதே தான் நடிகையாக இவரது முதல் படம். அவர் அதற்கு முன்பு லேசா லேசா, உனக்கு 20, எனக்கு 18 ஆகிய படங்களில் நடிக்க துவங்கினார். ஆனால் அவை தாமதமாக ரிலீஸ் ஆனதால் மௌனம் பேசியதே படம் தான் முதல் படம் ஆனது.
அதன் பிறகு சாமி, கில்லி, திருப்பாச்சி என தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் புது உயரத்திற்கே சென்றார் த்ரிஷா. அதே சமயத்தில் தெலுங்கிலும் அறிமுகம் ஆகி முன்னணி நடிகையாக வலம் வந்தார் த்ரிஷா. விஜய், அஜித், பிரபாஸ், மகேஷ் பாபு, ரஜினி என தென்னிந்திய சினிமாவின் டாப் ஹீரோக்கள் அனைவருடனும் நடித்துவிட்டார் த்ரிஷா. அவர் சினிமாவில் நடிக்கவந்து கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. தற்போதும் தனக்கான இடத்தை தக்கவைத்து கொண்டுள்ளார். 2000ங்களில் வந்தது போல த்ரிஷாவுக்கு தற்போது படங்கள் அமைவதில்லை என்ற குற்றச்சாட்டு பல நாட்களாக வைக்கப்பட்டு வர, எல்லாவற்றிற்கும் சேர்த்து ஒரே படத்தில் தந்த பதில்தான் 96. தன் அனுபவம் மூலம் தேர்ந்த நடிப்பை வழங்கி ஜானு கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருந்தார்.
தற்போது தனக்கு அதிகம் முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டும் அதிகம் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் த்ரிஷா. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் த்ரிஷா நல்ல கதை உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். திரைப்படங்களில் நடிக்கத் துவங்கும் முன் சென்னை அழகியாக 1999ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் திரையுலகத்திற்கு வர முக்கிய காரணமாக இருந்தது இந்த மிஸ் சென்னை பட்டம்தான் என்று அவரே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். இவ்வளவு வருடம் தமிழ் சினிமாவில் இருந்தால் சர்ச்சைகள் சும்மா விடுமா… வருடா வருடம் ஒரு சர்ச்சையில் சிக்கினாலும் அனைத்தில் இருந்தும் சிறப்பாக மீண்டு வருவதுதான் த்ரிஷா ஸ்டைல்.
சர்ச்சைகள்
முதலாவதாக சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் வருண் மணியனுடன் த்ரிஷாவுக்கு 2015 இல் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஒரு சில காரணங்களால் இவர்கள் தங்களது நிச்சயதார்த்தத்தை முறித்துக் கொண்டனர்.
ராணா டகுபதி மற்றும் திரிஷா இருவரும் உறவில் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அதை இருவரும் மறுத்து வந்தனர். அதன் பிறகு இவர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சுசித்ரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அதன் பிறகு த்ரிஷாவே இதனை ஏற்றுக் கொண்டு மர்மத்தை நீர்த்துப் போகச் செய்தார்.
த்ரிஷா பீட்டாவின் பிராண்ட் அம்பாசிடராக இருந்தபோது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் பீட்டாவுக்கு எதிராகவும் போராடினர். இதனால் சமூக ஊடகங்கள் என எல்லா இடங்களிலும் திரிஷாவை கேலி செய்தனர். அதன் பிறகு த்ரிஷா, நடிகர் சங்கம் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டு இதற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறினார். இப்படி பல சர்ச்சைகள் அவரை சுற்றி நிகழ்ந்தாலும், எல்லாவற்றையும் மென்மையாக கையாண்டு அதில் இருந்து வெளியில் வருவதால் இன்னமும் மக்கள் மனதில் பெரும் இடம் பிடித்துள்ளார் த்ரிஷா.
சினிமாவில் நடிகைகளின் இருப்பு, தேவை, உள்ளடக்கம் எல்லாம் அறிமுகம் ஆன காலத்தில் இருந்து இப்போதுவரை எவ்வளவு மாறினாலும் அத்தனைக்கும் ஏற்றார்போல தன்னை தகவமைத்துக் கொண்டு ஒவ்வொருமுறை தோல்வியை சந்திக்கும்போதும் மீண்டு வந்து நின்று நம்மை பலமுறை ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார். சினிமா பொதுவாகவே கலைஞர்களை சுரண்டிக்கொண்டிருக்கும் தொழில், அதிலும் பெண்கள் என்றால் சொல்லவே வேண்டாம். அத்தனையும் கடந்து நம் முன் இன்றும் அதே த்ரிஷாவாக நின்று கொண்டிருக்கும் மகா நடிகைக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.