Tollywood Update: விஜய்க்கு செக் வைத்த தெலுங்கு சினிமா.. வாரிசுக்கு புதிய சிக்கல்.. தீர்த்துவைப்பாரா தில்ராஜூ?
பண்டிகை காலங்களில் நேரடி தெலுங்கு திரைப்படங்களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என கூறி தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.
பண்டிகை காலங்களில் நேரடி தெலுங்கு திரைப்படங்களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என கூறி, தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
இது குறித்து தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் அறிக்கையில், “ தெலுங்கு திரைப்படங்களின் தயாரிப்பு செலவு அதிகரிப்பு, தயாரிப்பாளர்களின் நலன், தெலுங்குத் திரைப்படத் துறையை காப்பாற்றுதல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு 08.12.2017 அன்று நடைபெற்ற தெலுங்குத் திரைப்பட வர்த்தக சபையின் அவசரக் கூட்டத்தில், சக்ராந்தி (பொங்கல்) மற்றும் தசரா (விஜயதசமி) ஆகிய பண்டிகைகளின் போது, திரையரங்குகளில் நேரடி தெலுங்கு திரைப்படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Telugu Film Producers Council Press Note.#TFPC #PRESSNOTE pic.twitter.com/uu9oqqc0uc
— Telugu Film Producers Council (@tfpcin) November 13, 2022
இது தொடர்பாக, பிரபல தயாரிப்பாளரும், தெலுங்கு திரைப்பட வர்த்தக சபையின் தற்போதைய துணைத் தலைவருமான ஸ்ரீ தில்ராஜு, 2019ஆம் ஆண்டு ஊடகங்கள் மூலம், பண்டிகைக் காலங்களில் டப்பிங் செய்யப்பட்ட தெலுங்குப் படங்களுக்கு எப்படி திரையரங்குகளை வழங்குவது என்பது பற்றி கூறியிருக்கிறார். அதன்படி, பண்டிகை காலங்களில் நேரடி தெலுங்கு படங்களுக்கு முன்னுரிமை அளித்து, அந்தப்படங்களுக்கு அளித்தது போக, மீதமிருக்கும் திரையரங்குகளை தெலுங்கில் டப் செய்து வெளியிடப்படும் படங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அந்த முடிவின் படி, விநியோகஸ்தர்கள் சக்ராந்தி மற்றும் தசரா பண்டிகைகளில் நேரடி தெலுங்கு படங்களுக்கு முன்னுரிமை அளித்து, அவைகளுக்கு போக மீதமிருக்கும் திரையரங்குகளை தெலுங்கில் டப் செய்து வெளியிடப்படும் படங்களுக்கு கொடுக்க வேண்டுமென தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் கேட்டுக்கொள்கிறது” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாகுபலியின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு, பெரிய ஹீரோக்களின் படங்கள் பிற மொழிகளில் டப் செய்து வெளியிடப்படுவது என்பது மிகவும் இயல்பான ஒரு விஷயமாக மாறிவிட்டது. அந்த வகையில் பாகுபலிக்கு பின்னர் பிறமொழிகளில் வெளியான ஆர்.ஆர்.ஆர், கே.ஜி.எஃப் 2, காந்தாரா உள்ளிட்ட திரைப்படங்கள் மக்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றன. இதனிடையே தெலுங்கில் மிகப்பெரிய தயாரிப்பாளராக வலம் வரும் தில்ராஜூ நடிகர் விஜயை வைத்து ‘வாரிசு’ படத்தை தயாரிக்கப்போவதாக அறிவித்தார். இது தெலுங்கில் ‘வாரசடு’ என்ற பெயரில் வெளியாக இருக்கிறது.பிரபல இயக்குநர் வம்சி இயக்கத்தில் இசையமைப்பாளர் தமன் இசையில் உருவாகி இருக்கும் இந்தப்படம் பொங்களுக்கு வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில்தான் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் 2019 ஆம் ஆண்டில் தில்ராஜூ கூறியதை சுட்டிக்காட்டி தெலுங்கு திரைப்படங்களுக்கே பண்டிகை காலங்களில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று விநியோகஸ்தர்களுக்கு கோரிக்கை வைத்து இருக்கிறது. இதன் மூலமாக பொங்களுக்கு வெளியாகும் நேரடி தெலுங்கு திரைப்படங்களுக்கு கொடுக்கப்பட்ட திரையரங்குகள் போக, மீதமிருக்கும் திரையரங்குகளை மட்டுமே வாரிசு படத்திற்கு கொடுக்க வேண்டும் என்பதை மறைமுகமாக விநியோகஸ்தர்களுக்கு தெலுங்கு தயாரிப்பாளார் சங்கம் கூறியுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.