Vetrimaaran: பொல்லாதவன் முதல் அசுரன் வரை.. தன்னுடைய படங்கள் மீதே சுயவிமர்சனம் வைத்த வெற்றிமாறன்!
Vetrimaaran: இயக்குநர் வெற்றிமாறன் தன்னையும் தனது படங்களையும் விமர்சனம் செய்த தருணங்கள்.
![Vetrimaaran: பொல்லாதவன் முதல் அசுரன் வரை.. தன்னுடைய படங்கள் மீதே சுயவிமர்சனம் வைத்த வெற்றிமாறன்! Times When Director Vetrimaran criticizes himself and his movies Vetrimaaran: பொல்லாதவன் முதல் அசுரன் வரை.. தன்னுடைய படங்கள் மீதே சுயவிமர்சனம் வைத்த வெற்றிமாறன்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/22/6fec15a3ca1c5edcc6f902d797f956441711084628956572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வெற்றிமாறன்
இயக்குநர் வெற்றிமாறன் எப்போதும் தன்னை சுயவிமர்சனத்திற்கு உட்படுத்திக் கொள்ளும் ஒரு இயக்குநர். எந்த வகையிலும் ஒரு குறிப்பிட்ட மக்களை, பெண் பாலினத்தவரை இழிவுபடுத்தும் வகையிலான காட்சிகளை எடுத்துவிடக் கூடாது என்பதில் அதிக கவனம் எடுத்துக் கொள்பவர். அதே நேரத்தில் தனது படங்களைப் பார்த்தோ, தனது பேச்சைக் கேட்டோ இளைஞர்கள் தவறான முன்னுதாரணங்களை எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதிலும் கவனமாக இருப்பார். வெற்றிமாறன் தன்னை சுயவிமர்சனம் செய்துகொண்ட ஒரு சில தருணங்களைப் பார்க்கலாம்.
பொல்லாதவன்
பொல்லாதவன் படம் வெற்றிமாறன் ரசிகர்களுக்கு பிடித்த ஒன்றாக இருக்கலாம். ஆனால் இந்தப் படத்தை வெற்றிமாறன் கிட்டதட்ட நிராகரிக்கும் மனநிலையில் ஒருமுறை பேசியிருக்கிறார். இந்தப் படத்தில் தனக்கு விருப்பம் இல்லாமல் தான் ஒரு சில காட்சிகளையும் பாடல்களையும் வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தனது மைல்ஸ் டூ கோ தொடரில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆடுகளம்
ஆறு தேசிய விருதுகளை வென்ற ஆடுகளம் படத்தில் வெற்றிமாறனுக்கு இருக்கும் குறை என்ன தெரியுமா? டாப்ஸியைப் பார்த்து தனுஷ் பாடும் ' உன்ன வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாங்களா' என்கிற ஒற்றை வரிதான். வெள்ளை நிறத்தை உயர்த்திப் பேசி நிற வேற்றுமையை ஊக்குவிக்கும் வரியாக இந்த வரி இருக்கிறது. அது ஒரு பாடலாக இருந்தாலும் அதைத் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று வெற்றிமாறன் கூறியிருக்கிறார்.
வட சென்னை
வட சென்னை படம் வெளியானபோது பல்வேறு வகையான விமர்சனங்கள் எழுந்தன. வட சென்னை மக்களை தொடர்ச்சியாக ரவுடிகளாக மட்டுமே படங்கள் சித்தரிக்கின்றன என்கிற விமர்சனம் வட சென்னை படத்தின் மீதும் வைக்கப்பட்டது. பார்வையாளர்களுடனான சந்திப்பில் வெற்றிமாறனின் மேல் ஒருவர் இந்த விமர்சனத்தை வைத்தார். அதற்கு வெற்றிமாறன் “இப்போ நான் வடசென்னை 2 எடுக்காம இருந்தா உங்களுக்கு திருப்தினா நான் எடுக்கல " என்று பதிலளித்தார்.
அதேபோல் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் போட்டியாளர் ஒருவர் சென்னை மக்களை தவறாக சித்தரித்ததை வெற்றிமாறன் கண்டித்தார். “சென்னை மக்கள் என்றால் நம் எல்லார் மனதிலும் ஒரு பொதுபுத்தி இருக்கிறது. இந்த பொதுபுத்திக்கு நாங்கள் எடுக்கும் படங்களும் தான் காரணம்” எனப் பேசி இருந்தார்.
அசுரன்
அசுரன் படம் தனக்கு மிக மோசமான அனுபவமாக இருந்ததாக வெற்றிமாறன் கூறியிருக்கிறார். எப்போது தான் ஒரு படம் எடுக்கையில் அந்தப் படம் தன்னை ஒரு மனிதனாக மாற்றுகிறதா என்பது தனக்கு முக்கியம் ஆனால் அசுரன் படம் தனக்கு அதிகமான சோர்வை மட்டுமே கொடுத்ததாகவும் இனிமேல் தன்னை இவ்வளவு வருத்திக் கொண்டு தான் இனிமேல் ஒரு படத்தை இயக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)