Mari Selvaraj Speech: ‘தேவர் மகன் தான் மாமன்னன்.. வன்முறையை விரும்பும் ஆள் நான் இல்லை... மாரி செல்வராஜ் ஓபன் டாக்..!
திரைப்பட மொழியாக, தாக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வாக, அது சரியா தப்பா என தெரியாமல் தேவர் மகன் பார்த்து விட்டு குழம்பி போயிருந்தேன்.
வன்முறையை விரும்பும் ஆள் நான் இல்லை என மாமன்னன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் “மாமன்னன்”. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தில் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபஹத் ஃபாசில், லால், சுனில் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படம் வரும் ஜூன் 29 ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது.
என்னுடைய அப்பாவின் கேரக்டர்
இதில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், “எனக்கு எப்பவுமே தாழ்வு மனப்பான்மை உண்டு . அதற்கு காரணம் வாழ்க்கையில் பட்ட அடிகள். ஒரு தயக்கம் இருக்கும். அதைக் கொண்டு தான் அதனை எதிர்கொள்வேன். ஆனால் ரஹ்மான் கிட்ட பேசும்போது கிடைச்ச பாசிட்டிவ் எண்ணங்கள் வேற மாதிரியானது. மாமன்னன் படம் பார்க்க திருநெல்வேலிக்கு அவர் வந்தாரு. அந்த நாளை என்னால் மறக்க முடியாது.
மாமன்னன் படத்தின் மைய கேரக்டர் வடிவேலு தான். அது நிஜத்தில் என்னுடைய அப்பாவின் கேரக்டர். அதை சொல்லித்தான் வடிவேலுவிடம் கதை சொன்னேன். அவர் அசால்ட்டா படத்தை தன் தோளில் வைத்துக் கொண்டு போனார். கண்டிப்பா மாமன்னன் படம் என் வாழ்க்கையின் சாதனையாக இருக்கும்.
வாழ்க்கையில் மறக்க முடியாதது ஒரு சம்பவம். அது கமலுடன் உட்கார்ந்து மாமன்னன் படம் பார்த்தது தான். இந்த படம் உருவாக காரணம் தேவர் மகன் படம் தான் காரணம். அந்த படம் பார்த்த நாளில் இருந்து உருவானது தான் மாமன்னன். தேவர்மகன் பார்க்கும்போது எனக்கு ஏற்பட்ட விளைவுகள், அதிர்வுகள் என எனக்குள் ஏற்படுத்தியது. ஒரு சினிமாவாக பார்த்த படம், ஒரு சினிமா சமூகத்தை எப்படியெல்லாம் புரட்டிப் போடுகிறது.
தேவர் மகன் படம் இன்ஸ்பிரேஷன்
திரைப்பட மொழியாக, தாக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வாக, அது சரியா தப்பா என தெரியாமல் தேவர் மகன் பார்த்து விட்டு குழம்பி போயிருந்தேன். அந்த படம் பார்த்துவிட்டு தான் மாமன்னன் எடுத்துள்ளேன். தேவர்மகன் படத்தில் வடிவேலு பண்ணிய இசக்கி கேரக்டர் மாமன்னாக மாறினால் எப்படி இருக்கும் என்பது தான் மாமன்னன் படமாக மாறியுள்ளது. மாரி செல்வராஜின் அரசியலை ஏற்றுக்கொண்ட உதயநிதிக்கு மிகவும் நன்றி. அவர் மீது அரசியல், சினிமா ரீதியாக நிறைய கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அதற்கெல்லாம் பதில் உதயநிதி இந்த படத்தில் நடித்தன் மூலம் சொல்லப்பட்டுள்ளது.
நீங்கள் வாள், துப்பாக்கி எல்லாம் பார்த்துருப்பீங்க. உதயநிதிக்காக பில்ட் அப் பண்ணி போஸ்டர் ரெடி பண்ணியிருக்கோம். நான் வன்முறையை விரும்பும் ஆள் கிடையாது. ஒரு நிஜத்தோட வன்முறை என்பது ஒரு சிரிப்பாக, அழுகையாக, முறைப்பாக, மௌனமாக கூட இருக்கலாம். அப்படிப்பட்ட நிஜத்தோட சின்ன துளி விஷம் தடவப்பட்ட படம் தான் மாமன்னன். நிச்சயம் படம் எல்லோருக்கும் கேள்விகளை உருவாக்கும்” என தெரிவித்தார்.