தியேட்டரில் நடக்கும் பகல் கொள்ளை.. பப்ஸ், பாப்கார்ன் இவ்வளவா? அப்றம் எப்படி வருவாங்க?
திரையரங்குகளில் சிற்றுண்டிகள், பார்க்கிங் கட்டணங்களின் விலை மிகவும் அதிகளவு இருக்கும் காரணங்களாலே குடும்பங்களுடன் பலரும் திரையரங்கிற்கு வர தயக்கம் காட்டுகின்றனர்.

திரைப்படங்களை நம்பி நடக்கும் வர்த்தகம் ஆண்டுக்கு ஆண்டு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால், திரையரங்குகள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது.
தியேட்டருக்கு வர தயங்கும் குடும்பங்கள்:
திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைவதற்கு திருட்டு டிவிடி, இணையத்தில் வெளியிடுதல், ஓடிடி வெளியீடு என்று பல காரணங்களை கூறினாலும் திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வரும் எண்ணிக்கை குறைந்ததற்கு தியேட்டர்களும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது.
அநியாய விலை:
சாதாரண தியேட்டர், பல திரைகள் கொண்ட திரையரங்கம், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்கம் என தியேட்டர்கள் பல வகைகளாக உள்ளன. சாதாரண தியேட்டர்களில் டிக்கெட்டின் விலையும், வணிக வளாகங்களில் உள்ள தியேட்டர்களின் டிக்கெட்டின் விலையும் மாறுபட்டவை. வணிக வளாகங்களில் உள்ள தியேட்டர்களில் டிக்கெட்டுகள் விலை சாதாரண தியேட்டர்களை காட்டிலும் 80 ரூபாய் முதல் அதிகளவில் வைத்து விற்கப்படும்.
குடும்பங்களுடன் சென்று படம் பார்க்க விரும்புபவர்களின் முதன்மை தேர்வாக இந்த வணிக வளாகங்களில் உள்ள தியேட்டர்களே உள்ளது. ஆனால், அதுபோன்ற வணிக வளாகங்களில் தியேட்டர்களின் டிக்கெட்டிற்கு செய்யும் செலவைக் காட்டிலும் இதர செலவுகள் அதிகளவில் இருக்கும். அதாவது, இரு சக்கர வாகனம் அல்லது காரில் சென்றால் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படும்.
தண்ணீர் பாட்டில் 150 ரூபாயா?
இது மட்டுமின்றி வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகளில் விற்கப்படும் பாப்கார்ன், தண்ணீர் பாட்டில், ஜுஸ், சிற்றுண்டிகளின் விலை வெளியில் விற்கப்படும் விலையை காட்டிலும் பன்மடங்கு அதிகளவில் விற்கப்படுகிறது. உதாரணத்திற்கு சென்னையின் பிரபலமான வணிக வளாகத்தில் உள்ள திரையரங்கில் விற்கப்படும் ஒரு தண்ணீர் கேனின் விலை ரூபாய் 150 ஆகும். அந்த கேன் வெளியில் 20 அல்லது 30 ரூபாய்க்கு மட்டுமே விற்கப்படும்.
அதேபோல, சாதாரண முட்டை பப்ஸ்சின் விலை ஒரு வணிக வளாகத்தில் இருக்கும் திரையரங்கில் 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்படுகிறது. இது வெளியில் உள்ள கடைகளில் 20 ரூபாய் மட்டுமே ஆகும். சாதாரண திரையரங்குகளிலும் விற்கப்படும் உணவுகள், சிற்றுண்டிகளின் விலையும் தாறுமாறாகவே காணப்படுகிறது. ரசிகர்கள் கூட்டம் அதிகளவு இல்லாத நாளில் பழைய சிற்றுண்டிகளையே விற்பனை செய்வதாகவும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது.
தனி நபராக சென்றால் திரையரங்குகளில் அதிக கட்டணத்திற்கு விற்கப்படும் சிற்றுண்டிகளை வாங்காமல் தவிர்க்கலாம். ஆனால், குழந்தைகள் உள்பட குடும்பங்களுடன் சென்றால் இந்த பொருட்களை வாங்காமல் இருக்க முடியாது.
குடும்பஸ்தன் வர முடியுமா?
தமிழக அரசு திரையரங்குகளில் கட்டாயம் இலவசமாக ரசிகர்களுக்கு தண்ணீர் வசதி செய்து தர வேண்டும் என்று உத்தரவிட்ட பிறகே திரையரங்குகளில் தண்ணீர் வசதியே செய்யப்பட்டது. அதற்கு முன்பு குடிக்க தண்ணீர் கூட காசு கொடுத்து வாங்கும் நிலையிலே இருந்தது.
இந்த சிற்றுண்டி விற்பனைகள் மூலம் தங்களுக்கு ஓரளவு லாபங்கள் கிடைப்பதாக திரையரங்குகள் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தாலும் அநியாய விலையில் விற்கப்படும் இந்த சிற்றுண்டிகளின் விலையே குடும்பங்களுடன் திரையரங்கிற்கு வரும் ரசிகர்களை வரவிடாமல் செய்யும் முதல் காரணமாகவும் மாறி வருகிறது.
இதனால், திரையரங்கத்திற்கு குடும்பத்துடன் வரும் ரசிகர்களை அச்சுறுத்தாத வகையில் சிற்றுண்டிகளின் விலை, பார்க்கிங் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.




















