சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படம் சீதா ராமம்: எல்லை தாண்டிய காதலுக்கு கண்டம் தாண்டி விருது...!
இந்திய ரசிகர்கள் மட்டுமே கொண்டாடி வந்த சீதாராமம் திரைப்படம் சர்வதேச அளவில் சிறந்த இந்திய படமாக தேர்வாகி உள்ளது.
துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த சீதா ராமம் படத்திற்கு சர்வதேச திரைப்பட விழாவில், சிறந்த படத்திற்கான விருது கிடைத்துள்ளது.
இயக்குநர் ஹனுராகவ புடி இயக்கிய சீதா ராமம் படத்தில் துல்கர் சல்மான், மிர்னாள் தாக்கூர், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளனர். கடந்த ஆண்டு வெளியான இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பிரபல முன்னணி தயாரிப்பு நிறுவனங்களான வைஜெயந்தி மூவிஸ் மற்றும் ஸ்வப்னா சினிமாஸ் இணைந்து வழங்கிய சீதா ராமம் படத்திற்கு, விஷால் சந்திரசேகர் இசை அமைத்திருந்தார். பி. எஸ். வினோத் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
வரலாற்று காதல் காவியமான சீதா ராமம் திரைப்படம் சர்வதேச அளவில் நடந்த இந்திய திரைப்பட விழாவில், சிறந்த படத்துக்கான விருதை பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவின் மெல்ஃபெர்ன் நகரில் நடைபெற்று வரும் 14வது இந்திய திரைப்பட விழாவில், சிறந்த திரைப்படம் எந்த பிரிவில் சீதா ராமம் படம் போட்டியிட்டது. அதில் சிறந்த படத்திற்கான விருது சீதாராமம் படத்திற்கு வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது. இதனால் சீதாராமம் படத்தில் நடித்திருந்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரும் மகிழ்ச்சியுள்ளனர்.
யாருமில்லாத அனாதையான எல்லை காட்கும் போர் வீரனின் காதலை கூறுவது தான் சீதாராமம் படத்தின் ஒன்லைன் ஸ்டோரி. மதம், அரசியல், மொழி என அனைத்தையும் கடந்தது தான் காதல் என்பதை இயக்குநர் ஹனுராகவ புடி கூறியிருப்பார். ராம் ஆக நடித்து இருக்கும் துல்கர் சல்மானும், சீதாவாக நடித்திருக்கும் மிருனாள் தாகூரும் படத்தில் நடிக்காமல் வாழ்ந்து இருப்பார்கள். இருவரது காதல் மொழிகள் நிகழ்கால காதலர்களை கொண்டாட வைத்தது.
கடிதம் மூலம் யாரென தெரியாத காதலியை தேடி வரும் காதலன் கடைசியாக நாட்டிற்காக போரில் இறப்பதும், அந்த காதலுக்காக கடைசி வரை காத்திருப்பதும், இறுதியாக மரணத்தின் விளிம்பில் சீதாவிற்காக ராம் எழுதும் கடிதம் என ஒவ்வொரு காட்சிகளும் பார்வையாளர்களின் உணர்வுகளுடன் இடம்பெற்றிருக்கும். படத்தில் காதல் காவியத்திற்கு ஏற்ற அழகில் மிர்னாள் தாகூர் வலம் வந்திருப்பார்.
இப்படி இந்திய ரசிகர்கள் மட்டுமே கொண்டாடி வந்த சீதாராமம் திரைப்படம் சர்வதேச அளவில் சிறந்த இந்திய படமாக தேர்வாகி இருப்பதற்கு திரைபிரபலங்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். மலையாள நடிகர் மம்முட்டியின் மகனான துல்கர் சல்மான் வித்யாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். இவரின் நடிப்பில் உருவாகி இருக்கும் கிங் ஆப் கோதா படம் ஓணம் பண்டிகையை ஒட்டி வெளியாகி உள்ளது. அபிலாஷ் ஜொஷி இயக்கி இருக்கும் கிங் ஆப் கோதாவில், துல்கர் சல்மானுடன் ஐஸ்வர்யா லக்ஷ்மி, ரித்திகா சிங், சார்ப்பட்டா பரம்பரை புகழ் 'டான்சிங் ரோஸ்' சபீர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 1980களில் நடைபெறும் பீரியட் படமே கிங் ஆஃப் கோதாவின் கதை என கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:Independence Day 2023: சுதந்திர தின விழாவுக்கு ஜீ தமிழ் சேனலில் என்னென்ன சிறப்பு நிகழ்ச்சிகள்? - வாங்க பார்க்கலாம்..!