The Elephant Whisperers: ஆஸ்கர் விருதுடன் யானைக் காப்பாளர்கள் பொம்மன் - பெள்ளி தம்பதி... புகைப்படம் பகிர்ந்த இயக்குநர்!
”இவர்களைப் பிரிந்து 4 மாதங்கள் கடந்துவிட்டது, நான் இப்போது என் குடும்பத்தை அடைந்தது போல் உணர்கிறேன்” என இயக்குநர் பதிவிட்டுள்ளார்.
![The Elephant Whisperers: ஆஸ்கர் விருதுடன் யானைக் காப்பாளர்கள் பொம்மன் - பெள்ளி தம்பதி... புகைப்படம் பகிர்ந்த இயக்குநர்! The Elephant Whisperers Bomman and Belli pose with the Oscar photo goes viral The Elephant Whisperers: ஆஸ்கர் விருதுடன் யானைக் காப்பாளர்கள் பொம்மன் - பெள்ளி தம்பதி... புகைப்படம் பகிர்ந்த இயக்குநர்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/23/ca434d6e708fcfb751613922fa51cb251679566449039574_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
‘தி எலெஃபேண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்தில் தோன்றிய யானைக் காப்பாளர்களான பொம்மன், பெள்ளி இருவரும் ஆஸ்கர் விருதுடன் இருக்கும் புகைப்படத்தை இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ் பகிர்ந்துள்ளார்.
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சென்ற 13ஆம் தேதி நடைபெற்ற ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் யானைகளைப் பராமரிக்கும் முதுமலையைச் சேர்ந்த தம்பதியைப் பற்றிய ஆவண்ப்படமான ‘தி எலிஃபேண்ட் விஸ்பரரஸ்’ சிறந்த ஆவணக் குறும்படத்துக்கான விருதினைப் பெற்று ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் பெருமை சேர்த்தது.
முதுமலைப் பகுதியில் யானைகளைப் பராமரித்து வரும் பொம்மன் - பெள்ளி இவர்களுக்கும் குட்டி யானை ரகுவுக்கும் இடையேயான அழகிய உறவை இயற்கை எழில்கொஞ்ச படம்பிடிக்கப்பட்ட இந்த ஆவணப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது முதலே கவனமீர்த்து லைக்ஸ் அள்ளி வந்த நிலையில், ஆஸ்கருக்கும் பரிந்துரையானது.
தொடர்ந்து கடந்த மார்ச் 13ஆம் தேதி நடைபெற்ற ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த ஆவணக் குறும்படத்துக்கான விருதினை தி எல்ஃபேண்ட் விஸ்பரர்ஸ் படம் தட்டிச்சென்றது. இந்தப் படத்துக்காக இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ், தயாரிப்பாளர் குனீத் மோங்கா இருவரும் பெற்ற நிலையில் பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி பல்வேறு தரப்பினரும் இவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இந்நிலையில், ‘த எலெஃபேண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்தில் தோன்றியிருந்த தம்பதியான பொம்மன் - பெள்ளி இருவரும் ஆஸ்கர் விருதுடன் இருக்கும் புகைப்படத்தை முன்னதாக கார்த்திகி கொன்சால்வ்ஸ் தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ”இவர்களைப் பிரிந்து 4 மாதங்கள் கடந்துவிட்டது, நான் இப்போது என் குடும்பத்தை அடைந்தது போல் உணர்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
முன்னதாக பொம்மன் - பெள்ளி இருவரும் சென்னை, தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றனர். இருவருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் கேடயங்கள், சான்றிதழ்கள் வழங்கியதுடன் பொன்னாடை போர்த்தியும் இருவரையும் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பித்தார்.
மேலும் இந்தத் தம்பதிகளைப் பாராட்டி ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையையும், வனத்துறையில் பணியாற்றி வரும் 91 யானைப்பாகன்கள், அவர்களின் உதவியாளர்களுக்கு ஒரு லட்சம் வழங்கவும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார்.
பழங்குடியினருக்காக குரல் கொடுப்பதற்காக இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டதாக கார்த்திகி கொன்சால்வ்ஸ் கூறிய நிலையில், முன்னதாக அவர் சென்னை, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆஸ்கர் விருதினை அவரிடம் காண்பித்து தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். இந்நிலையில், கார்த்திகி கொன்சால்வ்ஸுக்கு ஒரு கோடி பரிசுத்தொகையும் பாராட்டு சான்றிதழையும் முதலமைச்சர் ஸ்டாலின் அவருக்கு வழங்கினார்.
புகைப்படப் பத்திரிகையாளரான கார்த்திகி கொன்சால்வெஸ் காட்டுயிர் ஆர்வலர் ஆவார். பயணங்களில் ஆர்வம் கொண்ட கார்த்திகி இயற்கைக்கும் இந்திய பழங்குடியின சமூகத்துக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆவணப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)