Vijay Antony: விஜய் ஆண்டனி மகள் மரணம்.. ‘லியோ’ படத்தின் அப்டேட் இன்று இல்லை என அறிவித்த படக்குழு..!
நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா மரணமடைந்த நிலையில், அவரது மறைவுக்கு லியோ திரைப்படக் குழு இரங்கல் தெரிவித்துள்ளது.
நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா மரணமடைந்த நிலையில், அவரது மறைவுக்கு லியோ திரைப்படக் குழு இரங்கல் தெரிவித்துள்ளது.
விஜய் - லோகேஷ் கனகராஜ் காம்போ
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் 2வது முறையாக இணைந்துள்ள படம் “லியோ”. செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லியோ படத்தில் த்ரிஷா, சஞ்ஜய் தத், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த், அர்ஜுன், மன்சூர் அலிகான்,மேத்தியு தாமஸ்,ஜோஜூ ஜார்ஜ், மடோனா செபாஸ்டியன், அனுராஜ் காஷ்யப், இயக்குநர்கள் கெளதம் மேனன், மிஷ்கின், ஜவஹர் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
படம் அக்டோபர் 19 ஆம் தேதி திரைக்கும் வரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை ஒரு பாடலும், சஞ்சய் தத், அர்ஜூன் உள்ளிட்டோரின் கேரக்டர் அறிமுகமும் இதுவரை வெளியாகியுள்ள நிலையில், கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் தொடர்ந்து அப்டேட் வெளியாகி வருகிறது. அதன்படி செப்டம்பர் 17 ஆம் தேதி தெலுங்கு போஸ்டரும், செப்டம்பர் 18 ஆம் தேதி கன்னட போஸ்டரும் வெளியானது. இதனைத் தொடர்ந்து இன்று (செப்டம்பர் 20) மலையாள போஸ்டர் வெளியாகவிருந்தது.
விஜய் ஆண்டனி மகள் மரணம்
இந்நிலையில் இன்று அதிகாலை பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா எதிர்பாராதவிதமாக தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலரும் சமூக வலைத்தளங்களிலும், நேரிலும் விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
மீரா கடந்த சில நாட்களாகவே அவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தேனாம்பேட்டை போலீசார் மீராவின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதற்கிடையில் லியோ படக்குழுவினரும் மீரா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இன்று லியோ அப்டேட் இல்லை
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம், ‘விஜய் ஆண்டனியின் ஈடுசெய்ய முடியாத இழப்பு எங்கள் இரங்கல்கள். உங்களுக்காகவும், குடும்பத்தினருக்காகவும் பிரார்த்தனைகள் செய்கிறோம். மேலும் மீராவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்றைய லியோ போஸ்டர் வெளியீடு ஒத்திவைக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நடிகர் விஜய்க்கு மிகவும் நெருக்கமானவர் விஜய் ஆண்டனி. எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான சுக்ரன் படத்தில் தான் இசையமைப்பாளராக அவர் அறிமுகமானார். தொடர்ந்து விஜய் நடித்த வேட்டைக்காரன், வேலாயுதம் ஆகிய படங்களுக்கு விஜய் ஆண்டனி தான் இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Vijay Antony: அன்று அப்பா.. இன்று மகள்.. சோகங்கள் நிறைந்த விஜய் ஆண்டனியின் வாழ்க்கை.. வைரலாகும் வீடியோ..