Thalapathy 68: தளபதி 68-ல் மீண்டும் விஜய் - பிரபுதேவா கூட்டணி! டஃப் கொடுக்க தயாரான டாப் ஸ்டார் பிரசாந்த்!
லியோ திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடித்து வரும் 'தளபதி 68' படத்தின் முதல் பாடலின் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளதாம்!
தளபதி 68
லியோ திரைப்படத்தைத் தொடர்ந்து தற்போது நடிகர் விஜய் தனது 68ஆவது படத்தில் நடித்து வருகிறார். ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்புக்குப் பின் இயக்குநர் வெங்கட் பிரபு இந்தப் படத்தை இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். முதல்கட்ட பணிகளுக்குப் பிறகு தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் ஆரம்பித்தது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது.
நடிகர்கள்
தளபதி 68 படத்தின் பூஜையில் நடிகர் விஜய்யைத் தவிர்த்து நடிகர் பிரபுதேவா நடிகர் பிரஷாந்த் மற்றும் நடிகர் மைக் மோகன் உள்ளிட்டவர்கள் காணப்பட்டார்கள். இதனைத் தொடர்ந்து தெலுங்கு நடிகையான மீனாக்ஷி செளத்ரி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
மேலும் முதலில் ஜோதிகா பின் சிம்ரன் மற்றும் பிரியங்கா மோகன் என பல நடிகைகளில் பெயர்கள் அடிபட்டன. ஆனால் படக்குழு சார்பில் படத்தின் மற்ற நடிகர்கள் குறித்து எந்த ஒரு தகவலாக இருந்தாலும், அது லியோ திரைப்படத்தின் ரிலீசுக்குப் பின் வெளியிடப்படும் என்பது உறுதியாகக் கூறப்பட்டுள்ளது.
நட்பைப் புகழும் பாடலில் விஜய்
முதல் கட்டமாக தளபதி 68 படத்தில் பாடல் காட்சி ஒன்றின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இணையதளத்தில் தெரிவிக்கப்படும் தகவல்களின்படி, நட்பை புகழும் வகையிலான ஒரு பாடலாக இந்தப் பாடல் இருக்கும் என்று தெரியவந்துள்ளது.
நடிகர்கள் விஜய், பிரபுதேவா, பிரஷாந்த் உள்ளிட்ட மூவரும் சேர்ந்து இந்தப் பாடலுக்கு நடனமாடி உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. ராஜூ சுந்தரம் இந்தப் பாடலுக்கு கொரியோ செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. விஜய் நடித்து இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான வாரிசு திரைப்படத்திற்கு நடனம் அமைத்தவர் ராஜூ சுந்தரம் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் படப்பிடிப்பு
இந்தப் பாடலைத் தொடர்ந்து ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் மீண்டும் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருக்கிறது. இந்த முறை படத்தின் முக்கியமான காட்சிகள் சிலவற்றை எடுக்க இயக்குநர் வெங்கட் பிரபு திட்டமிடுள்ளதாக தெரியவந்துள்ளது. படப்பிடிப்புக்கு முன்னதாக விஜய் அமெரிக்க சென்று டீஏஜிங் என்கிற வயதை குறைத்து காட்டும் தொழில் நுட்பத்தில் தன்னை ஸ்கேன் செய்து வந்திருக்கும் நிலையில், இந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எந்த மாதிரியான காட்சிகள் எடுக்கப்பட இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
லியோ
சிறிது காலத்திற்கு தளபதி 68 படம் பற்றி ரசிகர்கள் மறந்து தான் இருக்கப் போகிறார்கள். காரணம் விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. விஜய் , த்ரிஷா, மிஸ்கின், கெளதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத், சாண்டி மாஸ்டர் உள்ளிட்டவர்கள் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் விஜய்யின் பயணத்தில் ஒரு மைல் கல்லாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்