‛கோடநாடு வரை அலைக்கழிக்கப்பட்டோம்...’ தலைவா ரிலீஸ் பிரச்னையை 9 ஆண்டுகளுக்குப் பின் உடைத்த தயாரிப்பாளர்!
தலைவா படத்தின் போது ஜெயலலிதாவை சந்திக்க பட்ட கஷ்டத்தை அந்தப்படத்தின் தயாரிப்பாளர் சந்திரா பிரகாஷ் ஜெயின் பகிர்ந்து இருக்கிறார்.
தலைவா படத்தின் போது ஜெயலலிதாவை சந்திக்க பட்ட கஷ்டத்தை அந்தப்படத்தின் தயாரிப்பாளர் சந்திரா பிரகாஷ் ஜெயின் பகிர்ந்து இருக்கிறார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய்,அமலா பால், சத்யராஜ், சந்தானம் உள்ளிட்ட பலரும் நடித்த படம் ‘தலைவா’. ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இப்படம் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி ரிலீசானது. ஆனால் தலைவா படம் ரிலீசுக்கு முன்பே பல சர்ச்சைகளை சந்தித்தது. குறிப்பாக டைட்டிலின் கீழே “Time to lead" என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. விஜய்க்கு அரசியல் ஆர்வம் உள்ளதை வெளிப்படுத்து விதமாக இது அமைந்தது. இதனை ரசிகர்கள் கொண்டாட தொடங்கிய நிலையில் அன்றைய தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவை கடும் கோபத்தில் ஆழ்த்தியதாக சொல்லப்பட்டது.
படத்தை வெளியிடக்கூடாது என மிரட்டல்கள் வந்தது. இதனால் இந்த பிரச்சனையை கொடநாட்டில் இருந்த ஜெயலலிதாவிடம் கொண்டு செல்ல படக்குழு திட்டமிட்டது. ஆனால் அவரோ தன்னை சந்திக்க முயன்ற விஜய் உள்ளிட்ட படக்குழுவினரை சந்திக்கவே இல்லை. இதனால் தமிழகத்தில் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி தான் வெளியானது. அதற்குள் பிற மாநிலங்களில் படம் வெளியாகி படம் பற்றி விமர்சனம் பரவ தலைவா படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இன்றோடு தலைவா படம் வெளியாகி 9 வருடங்கள் ஆகியுள்ள நிலையில், அன்று என்ன நடந்தது என்பது குறித்து படத்தின் தயாரிப்பாளர் சந்திரா பிரகாஷ் ஜெயின் பேசியதை பார்க்கலாம்.
விஜய் படத்தின் தயாரிப்பாளர் சந்திரா பிரகாஷ் ஜெயின் பேசும் போது, “ தலைவா படத்தை தியேட்டரில் வெளியிட கூடாது என்று பிரச்னை செய்கிறார்கள் என்று போன் வந்தது. முதலில் அந்தப் பிரச்னையை பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை. பிரச்னை பெரிதாக, ஜெயலலிதாவை சந்திக்க நான், விஜய், டைரக்டர் விஜய் ஆகிய 3 பேரும் கோட நாட்டிற்கு சென்றோம். ஆனால் அங்கு அவர் சந்திக்க நேரம் கொடுக்க வில்லை. மிகவும் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தோம். அவர் சந்திக்க நேரம் தரவில்லை என்றாலும், ரிலீஸூக்கு நிச்சயம் உதவி செய்வார் என்று எதிர்பார்த்தோம்.
ஆனால் தமிழ்நாட்டில் படம் ரிலீஸ் ஆகவில்லை. தமிழ்நாடு தவிர பிற இடங்களில் படத்தை ரிலீஸ் செய்தேன். சரி கோட நாட்டில் இருந்து சென்னை வந்த பிறகாவது சந்திக்க வாய்ப்பு கொடுப்பார் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தோம். ஆனால் கடைசிவரை அவர் சந்திக்க நேரம் தரவில்லை. அப்போதுதான் நான் மிகுந்த மனவேதனைக்கு உள்ளானேன். என்ன பண்றதுண்ணே தெரியவில்லை.
அப்போ கொடுத்த பேட்டியிலதான் நான் ரொம்ப எமோஷனலாயி அழுதுட்டேன். அப்புறமா உடம்பு சரியில்லாம போக, அப்போல்லோ மருத்துவமனையில் சேர்ந்தேன். அப்பதான் எனக்கு படம் அடுத்த நாள் வெளியாகிறது என்ற செய்தி வந்தது. நாங்கள் ரிலீஸ் தேதியை அடுத்தடுத்த விடுமுறை நாட்களை மனதில் வைத்து குறித்தோம். ஆனால் அந்த நாட்களை கடந்துதான் படம் வெளியானது. அந்த இடைப்பட்ட நாட்களில் ரசிகர்கள் படத்தை இணையத்தில் பார்த்துவிட்டார்கள். இதனால் அந்தப்படம் எதிர்பார்த்த வசூலை கொடுக்கவில்லை.” என்று பேசினார்.