தமிழ் ராக்கர்ஸின் சிஷ்யன்...கதறிய தயாரிப்பாளர்கள்... ஐபொம்மா ரவி சிக்கியது எப்படி?
தெலுங்கு சினிமாவையே கதிகலங்க வைத்த ஐபொம்மா ரவி கைதான பின்னரும், தயாரிப்பாளர்களுக்கு மீண்டும் வந்த தலைவலி.

தெலுங்கு திரையுலகிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்த ஐபொம்மா திருட்டு சைட்டை நடத்தி வந்த எமாண்டி ரவி என்பவரை தெலங்கானா போலீசார் நேற்று முன்தினம் செய்தனர். இதனால், தயாரிப்பாளார் நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனால், அதற்குள் புதிய தளம் ஒன்று மீண்டும் ஆன்லைனில் தோன்றி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் ராக்கர்ஸ் என்ற பைரசி தளம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவை எப்படி நிலைகுலையச் செய்தது என்று சினிமா ரசிர்களுக்கு நன்கு தெரியும். புதிய திரைப்படங்கள் வெளியாகும் நாள் அன்றே, நல்ல பிரிண்டில் அந்தப் படம் வெளியாகும். இதனால், தயாரிப்பாளார்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகினர். தமிழ் ராக்கர்ஸ் பைரசியை செயல்படுத்தி வந்த நபரை சில மாதங்களுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர். ஆனாலும், வேறு வேறு பெயர்களில் தற்போது இந்த பைரசி தளம் செயல்பட்டு கொண்டுதான் இருக்கிறது.
டோலிவுட்டை அதிர வைத்த ஐபொம்மா ரவி
தமிழ் ராக்கர்ஸை போல டோலிவுட் சினிமாவிற்கு பெரும் தலைவலியாக இருந்து வந்தது iBOMMA என்ற பைரசி தளம். தெலுங்கில் iBOMMA .com திருட்டு வீடியோ தளம் பப்பம் டிவி என்ற பெயரில் படங்களை திரையிட்டு வந்தன. 24 மணி நேரமும் எந்த ஒரு சினிமாவையும் டவுன்லோட் செய்யாமல் பார்க்கு வசதியையும் இந்த தளம் கொடுத்து வந்தது. இந்த திருட்டு தளத்தை யார் செயல்படுத்தி வருகிறார் என்று ஹைதராபாத் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில், ஆந்திர மாநிலம் விசாப்பட்டினத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ரவி என்று கண்டுபிடிக்கப்பட்டது. இவரை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர். காரணம், வெளிநாட்டில் இருந்து இந்த தளத்தை இயக்கி வந்தார் ரவி. கரீபியன் நாட்டில் குடியுரிமை பெற்ற ஐபொம்மா ரவி, அங்கிருந்து கொண்டு போலீசாருக்கு சவால் விடுத்து வந்தார். அவர் திருட்டுதனமாக செயல்படுத்தி பைரசி தளம் மற்றும் சேனல் மூலம் பல கோடிகளை சம்பாத்தித்து வெளிநாட்டில் ஜாலியாக இருந்த வந்தார்.

இந்த நிலையில், தன்னுடைய சொத்துகளை விற்க ஹைதராபாத் வந்த ரவியை போலீசார் விமான நிலையத்திலேயே சுற்றி வளைத்து கைது செய்தனர். ரவியின் ஹார்டு டிஸ்கில் பல மொழிகளை சேர்ந்த 21 ஆயிரம் திரைப்படங்கள் சேமித்து வைத்திருப்பது தெரியவந்தது. இதுபோக, ஆன்லைன் கேமிங், சூதாட்ட விளம்பரங்கள் மூலமும் பல கோடிகளை சம்பாதித்து உள்ளார் என்பது தெரியவந்தது. விசாரணைக்கு பின் ரவியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
புதிய பைரசி தளம்
சினிமா துறையை பெரிதும் பாதித்த iBOMMA பைரசி தளத்தின் கதை முடிவுக்கு வந்ததாக நினைத்த நேரத்தில் , அதே பெயரில் புதிய தளம் ஒன்று மீண்டும் ஆன்லைனில் தோன்றி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘iBOMMA One’ என்ற புதிய பைரசி தளம் இணையத்தில் செயல்படத் தொடங்கியுள்ளது. இந்த புதிய தளத்தில் புதிய படங்கள், ஓடிடி சீரியஸ்கள் உள்ளிட்டவை காணப்படுகின்றன.
சமூக வலைதளங்களில் பலர் இந்த விசயத்தை வெளிச்சம் போட்டுக் கூறியதையடுத்து, iBOMMA எகோ சிஸ்டத்தில் 65-க்கும் மேற்பட்ட மிரர் தளங்கள் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதில் ஒரு பகுதியாகவே, பிரபலத்தை பயன்படுத்தும் நோக்கில் ‘iBOMMA One’ உருவாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
பைரசி தளங்களுக்கு முழுமையான தடை
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஆன்லைனில் செயல்படும் அனைத்து பைரசி தளங்களையும் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை திரையுலகத்திலிருந்து மீண்டும் எழுந்துள்ளது. குறிப்பாக ‘மூவி ரூல்ஸ்’, ‘தமிழ் வன்’ போன்ற தளங்களும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும் எனத் தொழில் நுட்ப நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
திருட்டு வலைதளங்களைப் பார்த்தால்...
பைரசி தளங்களில் செல்லாமல் இருக்க பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த தளங்களில் நுழைந்தால், பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள், தரவுகள் முழுவதும் திருடப்படும் அபாயம் உள்ளதாகவும், இலவசம் எனக் காட்டப்படும் லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம். கிளிக் செய்வதன் மூலம், நாம் தேவையற்ற பிரச்சனைகளை வாங்குகிறோம் எனவும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.





















