Mahanadhi Serial: கொண்டாட்டத்தில் விஜய் டிவி 'மகாநதி' சீரியல் குழுவினர்! சாதனைக்கு குவியும் வாழ்த்துக்கள்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரான, மகாநதி சீரியல் செய்துள்ள சாதனையை தொடர்ந்து, ரசிகர்கள் பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

விஜய் டிவியில் கனா காணும் காலங்கள், ராஜா ராணி, ராஜா ராணி 2, பாரதி கண்ணம்மா, போன்ற பல ஹிட் சீரியல்களை இயக்கி புகழ்பெற்றவர் பிரவீன் பென்டன்ட். தற்போது இவர் இயக்கத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் 'மகாநதி'. விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் செய்துள்ள சாதனை குறித்து விஜய் டிவி தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், ரசிகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
'மகாநதி' சீரியலில் ஹீரோயினாக லட்சுமி பிரியா நடித்து வரும் நிலையில், அவருக்கு ஜோடியாக சுவாமிநாதன் நடித்து வருகிறார். மேலும் தாரணி ஹெப்ஸிபா, கம்ருதீன், ஆதிரை சௌந்தர்ராஜன், ருத்ரன் பிரவீன், பேபி காவியா, சுஜாதா போன்ற பலர் நடித்து வருகின்றனர்.
ஊட்டியில் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு குடும்பம், தன்னுடைய தந்தை இறப்பதாலும் தந்தை கஷ்டப்பட்டு வாங்கிய இடம் அவருடைய நண்பராலேயே ஏமாற்றப்பட்டதாலும்... சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு வருகின்றனர். தன்னுடைய தங்கை உயிரை காப்பாற்றுவதற்காக வாங்கிய பணம் தொலைந்து போக, ஹீரோயினான காவேரி வேறு வழியின்றி அக்ரீமெண்ட் போட்டு கதாநாயகன் விஜயை திருமணம் செய்து கொள்ள நேர்கிறது. ஒரு கட்டத்தில் காவிரி மற்றும் விஜய் இருவரும் நிஜத்திலும் காதலிக்க துவங்கி கணவன் மனைவியாக வாழ துவங்குகிறார்கள்.
இவர்களின் காதலுக்கு அடையாளமாக தற்போது காவேரி கர்ப்பமாக உள்ளார். அதே நேரம் விஜய் வாழ்க்கையில், அவருடைய முன்னாள் காதலி வருவதால் இருவரும் சேர்ந்து வாழ முடியாத சூழல் உருவாகிறது. எதிர்பாராத திருப்புமுனைகளுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர், 2023 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் நிலையில்... தற்போது வெற்றிகரமாக 600 எபிசோடுகளை எட்டியுள்ளது. இதனால் சீரியல் குழுவினர் கொண்டாட்டத்தில் உள்ளனர். அதேபோல் ரசிகர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை சீரியல் குழுவினருக்கு தெரிவித்து வருகின்றனர்.
சமீப காலமாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ஒரு வருடம் தாக்குப் பிடிப்பதே பெரிய விஷயமாக இருக்கும் நிலையில்... விஜய் டிவியில் குறுகிய காலத்தில் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியலாக மாறிய மகாநதி 600 எபிசோடுகளை எட்டியுள்ளது சாதனையாகவே பார்க்கப்படுகிறது.





















