Neeya Naana: மஞ்சுமெல் பாய்ஸ் சேட்டைகள்.. புலம்பித் தீர்த்த பொதுமக்கள் தரப்பு.. கோபிநாத் கேட்ட சுறுக் கேள்வி!
சுற்றுலா தளங்களில் இளைஞர்கள் குடித்துவிட்டு செய்யும் சேட்டைகளை இந்த வார நீயா நானா விவாதப் பொருளாக்கியுள்ளது
நீயா நானா
கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா ஒவ்வொரு வாரமும் பல முக்கியமான பிரச்னைகளை விவாதித்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் ஏப்ரல் 28ஆம் தேதி ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சி மிகவும் வைரலான ஒரு தலைப்பில் விவாதம் நடைபெற்றது. இதில் வாழ்க்கையை ஜாலியாக அனுபவிக்க சுற்றுலா தலங்களுக்குச் செல்லும் இளைஞர்கள் ஒருபக்கமும், கொண்டாட்டம் என்கிற பெயரில் இவர்கள் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பாதிப்புகள், பொதுமக்கள் சந்திக்கும் இடையூறுகள், சாகசம் என்கிற பெயரில் சில நேரங்களில் தங்களது உயிரையே விடுவது என பல விமர்சனங்களை முன்வைக்கிறார்கள் இன்னொரு தரப்பினர். இந்த இரு தரப்பினருக்கு இடையில் பரபரப்பான விவாதக்களமாக இந்த வார நீயா நானா நிகழ்ச்சி நடந்தது.
மஞ்சுமெல் பாய்ஸ்
மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி இந்தியா முழுவதும் கொண்டாடப் பட்ட படம் மஞ்சுமெல் பாய்ஸ். கொடைக்கானல் சுற்றுலாத் தலத்திற்கு சென்று ஒரு பள்ளத்தில் விழுந்துவிடும் தனது நண்பனை எப்படி ஒரு குழு மீட்கிறது என்பதே இந்தப் படத்தின் கதை. படம் கொண்டாடப்பட்டாலும் மஞ்சுமெல் பாய்ஸ் படம் ஒரு முக்கியமான விவாதத்தை பொதுவெளியில் தொடங்கி வைத்துள்ளது. இந்த மாதிரி சுற்றுலாத் தலங்களில் கொண்டாட்டம் என்கிற பெயரில் இளைஞர்கள் உயிர் போகும் எல்லை வரை செல்வதை விமர்சித்து பல கருத்து தெரிவித்திருந்தார்கள். எழுத்தாளர் ஜெயமோகன் தனது தளத்தில் மஞ்சுமெல் பாய்ஸ் பற்றி கடுமையான விமர்சனத்தை எழுதியிருந்தார்.
தேவ இல்லாத பிரச்சனைகள் வரும்..😐
— Vijay Television (@vijaytelevision) April 28, 2024
நீயா நானா - ஞாயிறு மதியம் 12:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #NeeyaNaana #VijayTV #VijayTelevision #StarVijayTV pic.twitter.com/TfZQGSlEnN
அதே நேரம் மஞ்சுமெல் பாய்ஸ் படம் வெளியான பின் இளைஞர்கள் சுற்றுலாத் தலங்களில் தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்கு சென்று உயிரிழக்கும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளதும் குறிப்பிடத்தகுந்தது. இதில் சுற்றுலாக்குச் செல்லும் தரப்பினர் “சின்ன வயதில் இருந்து தங்கள் பெற்றோர் கண்காணிப்பில் தான் சுற்றுலா சென்றிருக்க்கிறோம், வளர்ந்த பிறகு நாங்களாக செல்லும் போது எங்கள் மனதிற்கு பிடித்த இடங்களுக்கு சென்று எஞ்சாய் செய்ய ஆசைப்படுகிறோம். இதில் ஒரு சிலர் குடித்துவிட்டு பிரச்சனை செய்வதால் சில நேரங்களில் எங்கள் ஒட்டுமொத்த சுற்றுலாவும் வீணாகிவிடும்” என்று கூறினார்கள்.
மறுதரப்பில், “இப்படி எஞ்சாய் செய்கிறேன் என்று கடந்த மாதம் நீலகீரி மாவட்டத்திற்கு வந்த இளைஞர்கள் ரீல்ஸ் எடுக்கும்போது அதில் ஒருவர் மலையில் இருந்து கீழே விழுந்துவிட்டார். நீங்கள் எஞ்சாய் செய்கிறேன் என்று செய்யும் செயல்கள் உங்களைத் தவிர மற்றவர்களையும் எவ்வளவு பாதிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேள்வி எழுப்பினர்.
இதனை விவாதப் பொருளாக்கி இதில் இரு தரப்பினருக்கு இடையில் ஒரு சமரச புள்ளியை அடையும் நோக்கத்தில் இந்த வார நீயா நானா நிகழ்ச்சி அமைந்தது. சுற்றுலா தலங்களுக்கு சென்று குடிப்பது, சாகசங்களை செய்வது தான் சுற்றுலாவா, இதனால் பொதுமக்கள் என்ன மாதிரியான பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள், இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் என்பன முதலிய கேள்விகள் இந்நிகழ்ச்சியில் முன்வைக்கப்பட்டு பேசப்பட்டன.