Surendar - Nivedhitha marriage: ரியல் ஜோடியான சீரியல் ஜோடி: திருமகள் நிவேதிதாவை கரம் பிடித்த மலர் ஹீரோ சுரேந்தர்!
Surendar - Nivedhitha marriage : திருமகள் சீரியலில் ஒன்றாக இணைந்து நடித்த சுரேந்தர் மற்றும் நிவேதிதா திருமணம் சென்னையில் கோலாகலமாக நடந்து முடிந்தது.
வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் ஒன்றாக சேர்ந்து நடிப்பவர்கள் நிஜ வாழ்க்கையில் ஜோடிகளாக மாறுவது என்பது ஒரு ட்ரெண்ட்டாகவே மாறிவிட்டது. அதிலும் சீரியலில் பல ரீல் ஜோடிகள் பலர் ரியல் ஜோடிகளாக காதலித்து திருமணம் செய்து கொள்வது அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த லிஸ்டில் தற்போது புதிதாக இணைந்துள்ளனர் சன் டிவியில் சீரியல் நடிகர்கள்.
சன் டிவியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான தொடரான 'திருமகள்' சீரியலில் நடித்த சுரேந்தர் மற்றும் நிவேதிதா ஜோடியின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இரு வீட்டாரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இவர்களின் திருமணம் சென்னையில் நடைபெற்றது. நெருக்கமான சின்னத்திரை நடிகர்கள் ஒரு சிலர் மட்டும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அவர்களின் திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. தற்போது சுரேந்தர் சன் டிவியின் 'மலர்' சீரியலின் ஹரோவாக நடித்து வருகிறார்.
சுரேந்தர் - நிவேதிதா ஜோடி திருமணத்திற்கு முன்னர் அவர்களின் ப்ரீ வெட்டிங் ஷூட் சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்ததும் அதை பார்த்த ரசிகர்கள் பலர் அதிர்ச்சி அடைந்தனர். அதற்கு காரணம் 2019ம் ஆண்டு தான் நிவேதிதாவுக்கும், சன் டிவியில் ஒளிபரப்பான மகராசி சீரியல் ஹீரோ ஆர்யனுக்கும் மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. இவர்களின் காதல் திருமணத்திற்கு ஏராளமான சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். பல கனவுகளுடன் நடைபெற்ற அந்த திருமணம் ஒரே ஆண்டில் முடிவுக்கு வந்து இருவரும் விவாகரத்து பெற்றனர்.
விவாகரத்திற்கு பிறகு மீண்டும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்க நிவேதிதாவுக்கு பல வாய்ப்புகள் வர அவரும் தொடர்ந்து நடித்து வந்தார். அப்படி அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் 'திருமகள்' சீரியலின் வில்லி கேரக்டர். அந்த சமயத்தில் தான் திருமகள் சீரியல் ஹீரோ சுரேந்தருக்கும் நிவேதிதாவுக்கும் நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக மலர்ந்தது. அவர்களின் ரொமான்டிக் புகைப்படங்களை பார்த்த பலரும் விமர்சனங்களை தெரிவித்து வந்தார்கள்.
விமர்சகர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் "எனக்கு விவாகரத்தாகி மூன்று ஆண்டுகள் முடிந்துவிட்டது. என்னுடைய காதலை நான் கண்டுபிடித்துவிட்டேன். என் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை ஸ்பெஷலான ஒருவருடன் வாழ போகிறேன். உங்கள் ஆர்வம் எனக்கு புரிகிறது, அதே சமயத்தில் உங்கள் புரிதலையும், அன்பையும் மரியாதையுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
அநாகரீகமான கேள்விகளை தயவு செய்து கேட்க வேண்டாம்" என நிவேதிதா தன்னுடைய சோசியல் மீடியா மூலம் விமர்சகர்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். நிவேதிதா - சுரேந்தர் திருமண புகைப்படங்களை பார்த்த அவர்களின் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.