Sa Re Ga Ma Pa: ‘சரிகமப’வில் இலங்கை குயில்.. என்ட்ரி கொடுக்கும் புது போட்டியாளர் அசானி... இவருக்கு பின்னாடி இப்படியொரு நெகிழ்ச்சி கதையா?
தேயிலைத் தோட்ட தொழிலாளியின் மகளான அசானி சரிகமபவில் திடீர் என்ட்ரி கொடுத்துள்ளார். யார் இவர்? முழு விவரம் இதோ!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சியான ‘சரிகமப லிட்டில் சேம்ப்ஸ்’ நிகழ்ச்சி 28 போட்டியாளர்களுடன் தொடங்க, ஐந்து பேர் வெளியேறிய நிலையில் தற்போது 23 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் புதிய வரவாக என்ட்ரி கொடுத்துள்ளார் இலங்கை கண்டி பகுதியைச் சேர்ந்த அசானி கனகராஜ்.
தேயிலை பறிக்கும் தொழிலாளிளின் மகளான அசானியின் குடும்பம் இலங்கையில் உள்ள கண்டி என்ற பகுதியில் வசித்து வருகின்றனர். 150 ஆண்டுகளுக்கு முன்னர் ராமேஸ்வரம் இவர்களுக்கு பூர்வீகமாக இருந்து வந்த இவர்கள், இலங்கைக்கு அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர். ஒரு தேயிலை தோட்டத்தில் பல ஆண்டுகளாக இவர்களது தலைமுறை கொத்தடிமைகளாக வேலை செய்து வந்துள்ளது.
தற்போதும் அசானியின் அப்பா, அம்மா, அண்ணன் என மூவர் ஒரு நாளைக்கு 200 ருபாய் சம்பளத்துக்கு தேயிலை தோட்டத்தில் தான் வேலை செய்து வருகின்றனர், இன்னொரு அண்ணன் மட்டும் கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். சினிமா, டிவி எல்லாம் பார்க்காமல் வெறும் எப் எம் ரேடியோவில் பாட்டு கேட்டு கேட்டு பாட பழகி கொண்டுள்ளார் அசானி. அவரின் திறமையை அறிந்த குடும்பத்தினர் வீடியோ அனுப்ப, சரிகமப ஆடிஷனில் பங்கேற்று தேர்வாக சரிகமப குழுவினர் மெகா ஆடிஷனில் பங்கேற்க சென்னை வர சொல்லியுள்ளனர்.
ஆனால் வசதி வாய்ப்பு இல்லாத இவர்கள் சென்னைக்கு எப்படி வருவது எனத் தெரியாமல் தவிக்க, ஊர் மக்கள், உறவினர்கள் என எல்லாரும் சேர்ந்து “எங்களால் தான் வாழ்ந்த மண்ணை மிதிக்க முடியவில்லை, நீங்களாவது போய் சாதிச்சிட்டு வாங்க” என்று கையில் இருந்த பணத்தைக் கொடுத்து உதவியுள்ளனர். அதே பகுதியில் துணிக்கடை நடத்தி வரும் பிரேம் என்ற நபர் பாஸ்போர்ட், விசா எடுக்க தேவையான உதவிகளை செய்து கொடுத்துள்ளார்.
அப்படி இருந்தும் மெகா ஆடிஷனை மிஸ் செய்த இவர்கள் சரிகமப குழுவை அணுக, நடுவர்களிடம் இது குறித்து பேசிய போது “போட்டியாளர்களைத் தேர்வு செய்து முடித்த பிறகு மீண்டும் புதிய போட்டியாளரை சேர்ப்பது என்பது சாத்தியம் இல்லாத ஒன்று” என்று என கூறியுள்ளனர்.
அதே சமயம் நம்மை நம்பி கடல் கடந்து வந்தவர்களை கை விடக்கூடாது என்ற காரணத்திற்காக அசானியை பாட சொல்லி வாய்ப்பு கொடுத்துள்ளனர், தனது இன்னிசை குரலால் அரங்கத்தை அதிர செய்த அசானியின் திறமையைக் கண்டு வியந்த நடுவர்கள், “வெறும் எப் எம் ரேடியோவில் பாட்டை கேட்டு இப்படி பாடுவது என்பதெல்லாம் கடவுள் கொடுத்த வரம்.
இருந்தாலும் இன்னும் பயிற்சிகள் தேவை. இரண்டு மூன்று வாரங்கள் பாடட்டும்.. பிறகு என்ன செய்வது என்பது பற்றி யோசிக்கலாம்” என்று முடிவெடுத்து அசானியின் திறமையை நிரூபிக்க ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளனர். இலங்கை குயிலின் இன்னிசை தொடர்ந்து ஒலிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.