Reshma Muralidharan: கிழக்கு வாசல் கிளைமாக்ஸ் போட்டோஷூட்டில் ரேஷ்மா இல்லை: ஏன்? வெளியான காரணம்!
Reshma Muralidharan : விஜய் டிவியின் 'கிழக்கு வாசல்' சீரியல் முடிவுக்கு வர உள்ள நிலையில் அதன் கடைசி நாள் போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியானதில் ரேஷ்மா இடம்பெறவில்லை. அதற்கு அவர் கொடுத்த விளக்கம் என்ன?
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் விஜய் டிவிக்கு என்றுமே ஒரு தனி இடம் உள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ மற்றும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் ராதிகா சரத்குமாரின் ராடான் நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் துவங்கிய சீரியல் தான் கிழக்கு வாசல். அந்த சீரியலுக்கு தற்போது எண்டு கார்டு போடப்பட உள்ளது.
'பாரதி கண்ணம்மா 2 ' சீரியல் முடிவடைந்த உடனே துவங்கியது 'கிழக்கு வாசல்' தொடர். இந்த சீரியல் மூலம் ராதிகா விஜய் டிவிக்கு அடியெடுத்து வைத்ததால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது. மேலும் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநரும், நடிகர் விஜய் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியானதும் எதிர்பார்ப்பு பன்மடங்காக எகிறியது.
முதலில் எஸ்.ஏ. சந்திரசேகர் நடித்த கதாபாத்திரத்தில் சன் டிவியில் எதிர்நீச்சல் புகழ் நடிகர் மாரிமுத்து அணுகப்பட்டார். அவரின் சம்மதம் கிடைக்காததால் அந்த கதாபாத்திரத்தில் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் ஒப்பந்தமானார். ரேஷ்மா முரளிதரன், வெங்கட் ரங்கநாதன், ரோஜா ஸ்ரீ, அஸ்வினி ராதாகிருஷ்ணா, ஆனந்த் பாபு, ஷியாம், பிரவீன் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த சீரியலில் நடித்து வருகிறார்கள்.
சீரியல் தொடங்கிய போது எழுந்த எதிர்பார்ப்பும் விறுவிறுப்பும் நாட்கள் செல்ல செல்ல தேக்க நிலை அடைந்தது. அதன் கதைக்களம் ரசிகர்களை பெரிய அளவில் ஈர்க்கவில்லை என்பதால் கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்களின் வரவேற்பை இழந்து டிஆர்பி ரேட்டிங்கிலும் சரிவை சந்தித்தது. அதனால் இந்த சீரியலுக்கு எண்டு சார் போட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
கிழக்கு வாசல் சீரியலில் கதாநாயகியாக நடித்த ரேஷ்மா முரளிதரன் கடந்த சில எபிசோட்களில் இடம்பெறவில்லை. இறுதி நாள் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்களில் கூட அவர் மிஸ்ஸிங் என்பதால் ரசிகர்கள் மிகவும் வருத்தம் அடைந்தனர். சீரியல் முடிவடைய ரேஷ்மா ஷூட்டிங்கில் கலந்து கொள்ளாதது தான் காரணம் என்றெல்லாம் சில விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் ரேஷ்மா முரளிதரன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார்.
" அன்புள்ள குடும்பம்... எங்கள் அன்பிற்குரிய கிழக்கு வாசல் தொடர் முடிவுக்கு வரவுள்ளது என்ற செய்தியை கனத்த இதயத்துடன் பகிர்ந்து கொள்கிறேன். எதிர்பாராத உடல்நல குறைவால் கடந்த ஒரு மாத காலமாக எபிசோட்களின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த சிறப்பான பயணத்தில் எனக்கு ஆதரவாக இருந்த ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை இந்த பதிவின் மூலம் தெரிவித்து கொள்கிறேன். உங்கள் அசைக்கமுடியாத அன்பும் ஆதரவும் இந்த உலகத்தை உணர்த்தியது. இந்த அனுபவத்தை பெற வாய்ப்பு கிடைத்ததை ஒரு பாக்கியமாக கருதுகிறேன்.
சமீப காலமாக இந்த தொடரில் என்னுடைய பகுதி குறைக்கப்பட்டாலும் இதில் நடித்த அனுபவம் என் வாழ்நாள் முழுக்க மறக்க முடியாத ஒன்றாக இருக்கும்" என பதிவிட்டு இருந்தார் ரேஷ்மா முரளிதரன்.