Dora the Explorer: “வாங்க நண்பர்களே..எல்லாரும் ஒன்னா போலாம்” - மீண்டும் ஒளிபரப்பாகும் டோராவின் பயணங்கள்..!
பொதுவாகவே கார்ட்டூன் பார்க்காத குழந்தைகளே இல்லை. இவற்றில் சில கார்ட்டூன் நிகழ்ச்சிகள் நாம் அறிவுக்கு தீனி போடும் அளவுக்கு சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கும்.
90ஸ் கிட்ஸ் ரசிகர்களின் ஃபேவரைட் கார்ட்டூன் நிகழ்ச்சியான டோராவின் பயணங்கள் மீண்டும் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பொதுவாகவே கார்ட்டூன் பார்க்காத குழந்தைகளே இல்லை. இவற்றில் சில கார்ட்டூன் நிகழ்ச்சிகள் நாம் அறிவுக்கு தீனி போடும் அளவுக்கு சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கும். அதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் பார்த்து ரசித்திருப்போம். அப்படியான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் டோராவின் பயணங்கள்.
நிக்லோடியன் சேனலில் ஆங்கிலத்திலும், தமிழில் சுட்டி டிவியிலும் ஒளிபரப்பாகி வந்த டோராவின் பயணங்கள் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் முறையாக ஒளிபரப்பாக தொடங்கியது. கிட்டத்தட்ட 19 வருடங்கள் ஒளிபரப்பான இந்த டோராவின் பயணங்கள் நிகழ்ச்சி கற்றல் சார்ந்த நிகழ்ச்சியாக நம் அனைவரையும் கவர்ந்திருந்தது. அதனால் கிட்டத்தட்ட 35 மொழிகளுக்கும் மேலாக மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வந்தது.
பள்ளி செல்லா குழந்தைகள் தொடங்கி பள்ளி செல்லும் குழந்தைகள் வரை இந்த கார்ட்டூன் நிகழ்ச்சிக்கு அடிமையாகி கிடந்தனர் என்றே சொல்லலாம். குறிப்பாக 90ஸ் கிட்ஸின் கார்ட்டூன் நிகழ்ச்சிகள் டோரா இல்லாமல் நிறைவு பெறாது. டோரா அதனுடன் இருக்கும் குரங்கு புஜ்ஜி, குள்ளநரி என அத்தனை கேரக்டர்களையும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. ஒரு நல்ல நிகழ்ச்சி அதில் இருக்கும் விஷயங்களை பார்க்கும் நாமும் நம்மை மறந்து அந்த கேரக்டர்களுடன் இருப்பதுபோல உணர்வை ஏற்படுத்த வேண்டும். அது டோராவின் பயணங்களில் மிகச்சிறப்பாக அமைந்திருந்தது.
View this post on Instagram
கார்ட்டூன் நிகழ்ச்சியில் பள்ளி செல்லும் குழந்தையாக வந்த டோரா, அப்டேட் வெர்ஷனாக உயர்நிலை பள்ளிக்கு செல்கிறாள். இதுதொடர்பான காட்சிகள் கார்டூனாக இல்லாமல் 'டோராவும் தொலைந்து போன தங்க நகரமும்' என்ற பெயரில் படமாக உருவாக்கப்பட்டு 2019 ஆம் ஆண்டு வெளியானது. என்னதான் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டு மறுஒளிபரப்பு செய்யப்பட்டாலும் அதற்கென இருந்த ரசிகர் பட்டாளம் இன்றும் உள்ளது.
இப்படியான நிலையில் டோராவின் பயணங்கள் மீண்டும் சுட்டி டிவியில் ஒளிபரப்பாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. ஏற்கனவே கடந்தாண்டு புது நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதை நிறுத்த சுட்டி டிவியை கொண்டுள்ள சன் நெட்வொர்க் குழுமம் அறிவித்தது. ஆனால் மீண்டும் டோரா நிகழ்ச்சியை ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதால் 90ஸ் கிட்ஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.